
கெரசின் ஸ்டவ், மரத்தூள் அடுப்பு, விறகு அடுப்பு என்று சமைத்த காலங்களில் சிலிண்டர் வரவேற்புக்குறியதாக இருந்தது. தனி வீட்டுக்கு தனி சிலிண்டர் ஓகே என்றாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு பைப்லைன் எப்படி பயன்படுகிறது. இரண்டிலும் உள்ள சாதக, பாதகங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
அப்பொழுதெல்லாம் ஒரு சிலிண்டர்தான் எல்லோருக்கும் கிடைப்பதாக இருக்கும். அது தீரும் நாள் வரும்பொழுது மீண்டும் கெரசின் ஸ்டவ், மேற்கூறிய அடுப்புகளை எல்லாம் சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள ஆயத்தமாக வேண்டும். கேஸ் தீர்ந்து புக் செய்தாலும் அது திரும்ப கிடைப்பதற்கு சில நாட்கள் பிடிக்கும்.
இதனால் கேஸ் வரும்வரை காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதேபோல் மாற்று ஊர்களுக்கு, வெளிமாநிலங்களுக்கு மாற்றலில் செல்லும்பொழுது இன்னும் காலம் தாமதமாக கிடைத்தது. அப்பொழுதும் ஆபத்பாந்தவனாக இருந்தது கெரசின் ஸ்டவ்தான். மேலும் இன்டக்ஷன் ஸ்டவ், ஹீட்டர் போன்ற அடுப்புகளை வைத்து சமாளித்தோம். என்றாலும் எத்தனை அடுப்பு வகைகள் வந்தாலும் கேஸ் சிலிண்டருக்கு ஈடு இணையாக எதையும் கூறமுடியாது.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றளவிலும் நாம் பயன்பாட்டுக்கு உதவுவது கேஸ் சிலிண்டர் தான். அதுவும் இப்பொழுதெல்லாம் புக் செய்த உடனே கிடைத்து விடுகிறது. அதிலும் இரண்டு சிலிண்டர் தாராளமாக கிடைக்கும் காலம் வந்த பிறகு அதை மாற்றுவதும் கழட்டுவதும் ஒரு பிரச்னையாக இருப்பதில்லை.
வெளியில் மாற்றலில் சென்றாலும் உடனடியாக கேஸ் கனெக்சன் வாங்கிவிடலாம். கேஸ் சிலிண்டர் வைக்கும்பொழுதே அதை செக் செய்து வைத்து விடுவதால் அபாயம் இல்லாமல் புழங்க முடிகிறது. இதெல்லாம் தனி சிலிண்டரின் உபயோகங்கள்.
பைப் லைன்:
பைப் லைனில் எண்ணற்ற நன்மைகள் உண்டு. வயதானவர்களுக்கு சிலிண்டரை மாற்ற, கழற்ற வேண்டிய அவசியம் இல்லாததால் இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆக, பாதுகாப்புக்கு ஏற்றதாக உள்ளது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்மணிகளுக்கு சிலிண்டரை புக் செய்வதும் சிலிண்டர் வருகைக்காக காத்திருப்பது அவசியம் இல்லாத ஒன்றாக பைப் லைன் செயல்படுகிறது.
இதற்கு அண்டை வீட்டாரை உதவிக்கு நாட வேண்டிய அவசியம் இல்லை. மாதத்திற்கு ஒருமுறை வந்து ரீடிங் எடுத்துக்கொண்டு சென்று விட்டால் பணம் கட்டிவிடலாம். அவ்வளவுதான். அதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெளியூர்களுக்கு செல்லும்பொழுது சிலிண்டரை மூடினோமா சரிவர அனைத்தையும் அணைத்து வைத்தோமா என்று திண்டாட வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்புக்கு அதற்கென்று ஒரு ஆளை நியமித்து வைத்திருப்பதால், பாதுகாப்புக்கு சிறந்த ஒரு முறை பைப் லைன்தான்.
மேலும் இரண்டு சிலிண்டர்களை வீட்டில் வைக்க வேண்டிய இடம் மிச்சம் ஆகும். அந்த இடத்தில் வேறு பொருட்களை பயன்பாட்டுக்கு வைக்கலாம். சமைத்துக் கொண்டிருக்கும்பொழுதே கேஸ் தீர்ந்து விட்டால் தனி சிலிண்டரை மாற்றவேண்டிய கட்டாயம் இருக்கும். அது இதில் இல்லை என்பதால் தடுமாறாமல் சீக்கிரமாக சமையலை முடித்துவிட்டு வெளியில் வரலாம்.
தனி சிலிண்டரை செக் செய்யாமல் வாங்கி வைத்துவிட்டு அதை மாற்றும்பொழுது அதன் கேஸ்கட் சரிவர பொருந்தாமல் திண்டாடிய சம்பவங்கள் அநேகம் உண்டு. பிறகு அதற்கு மெக்கானிக்குக்கு புக் செய்து அவர்கள் வந்து அதை சரி பார்த்து சமைக்க ஆரம்பிக்கும் பொழுது நீண்ட நேரம் ஆகிவிடும்.
அதுபோன்ற தொந்தரவுகள் பைப் லைனில் கிடையாது. தனி சிலிண்டரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு வீட்டில் கவனக்குறைவால் விபரீதம் நடந்துவிட்டாலும், அது மொத்த காம்பவுண்டையும் பாதிக்கும். பைப் லைனில் எப்பொழுதும் கண்காணித்துக்கொண்டே இருப்பதால் இதுபோன்ற தவறுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
அதேபோல் மாற்றலில் செல்லும்பொழுது சிலிண்டரை ஒப்படைப்பது திரும்ப பைசா வாங்குவது போன்ற வேலைகள் இல்லாததால் மற்ற வேலைகள் செய்வதற்கு நல்ல நேரம் கிடைக்கும். மேலும் பயன்படுத்தி விட்டு மீதம் இருக்கும் சிலிண்டரை அப்படியே கொடுக்கவேண்டிய அவசியமும் இருக்காது. இதனால் பைசா மிச்சமாகும்.
அதனால் அடுக்குமாடி குடி இருப்புகளில் வசிப்பவர் களுக்கு பைப் லைனே சிறந்தது.