
காலநிலை மாற்றத்தால் நாட்டின் பல பகுதிகளில் வெப்ப சராசரி அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது.
சூரியனின் வெப்பத்தை கான்கிரீட் கட்டிடங்கள் உறிஞ்சி வைத்துக்கொண்டு மெதுவாக கட்டிடங்களின் உள்ளே வெப்பத்தை பிரதிபலிக்கின்றன. இதன் காரணமாக, மனிதர்களின் உடல் நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, வாழும் சூழ்நிலை குளிர்ச்சியான நிலையில் இருக்கும்போதுதான் உடலும் மனதும் புத்துணர்வோடு செயல்பட முடியும்.
இன்றைக்கு, கான்கிரீட் கட்டிடங்கள் கட்டும்போது அதன் வெளிப்புற அழகிய தோற்றத்தை ஏற்படுத்த வண்ண பெயிண்ட் பூசப்படுகிறது. ஆனால், கட்டிடத்தின் மேல் தளத்தை தாக்கி கட்டிடம் முழுவதையும் சூடாக்கும் நிலையை தடுக்க உதவும் கூலிங் பெயிண்ட் பூச்சுகள் பற்றி பெரும்பாலானவர்கள் மறந்து போகின்றனர்.
கூலிங் பெயிண்ட் என்பது கட்டிடங்களின் மேல் தள தரைத்தளம் வெப்பத்தால் பாதிக்கப்படுவதை தடுக்கும் ஒரு வித பூச்சு ஆகும். கூல் ரூஃப் பெயிண்ட், ரிப்ளக்டிவ் ரூஃப் பெயிண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் ஆற்றல் நுகர்வு குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு புரட்சிகர தீர்வாகும்.
இந்த கூலிங் பெயிண்டுகள் சூரியஒளி மற்றும் வெப்பத்தை உறிஞ்சி உள்வாங்குவதற்கு பதிலாக எதிர் திசையில் பிரதிபலிக்கும் வகையில் செயல்படுகின்றன. இந்த பிரதிபலிப்பு பண்புக்காக கூலிங் பெயிண்டுகளில் தனித்துவமான சில சிறப்பு நிறமிகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சூரியஒளி கட்டிடத்தின் கூரையை தாக்கும்போது, அதன் வெப்பம் உறிஞ்சப்பட்டு கட்டிடத்திற்குள் செலுத்தப்படுவதற்கு பதிலாக, கூலிங் பெயிண்ட்டில் இருக்கும் தனித்துவமான வண்ணப்பூச்சு சூரிய ஒளியின் பெரும்பகுதியை மீண்டும் வளிமண்டலத்தில் பிரதிபலிக்கிறது. இந்த செயல்முறையால் வெப்பத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் கட்டிடத்தின் உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
இதன் மூலம், கட்டிடங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பதுடன், கட்டிடத்தின் உள் பகுதி வெப்ப நிலை குறைவதால் குளிர்ச்சியான சூழல் நிலவும். மின் சாதனங்கள் பயன்பாடு குறையும் என்பது உள்பட பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
அதிக விலை கொடுத்து ஏசி வாங்க முடியாத ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இந்த ‘கூலிங் பெயிண்ட்’ பயனுள்ளதாக இருக்கும்.