நம் உடலுக்குத் தேவையான தண்ணீர் பருகுவதால் நிறைய நன்மைகள் ஏற்படும். அதிலும் தாமிரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் சேமித்துப் பருகுவதால் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகையும் அள்ளித் தரும். இயற்கையாகவே தாமிரம் ஆண்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஹீமோகுளோபின் உருவாவதற்கும் உயிரணு மீளுருவாக்கம் செய்வதற்கும் உதவுகிறது.
செம்புப் பாத்திர நீரைப் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்:
உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துகிறது: அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, தாமிரம் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கும். ஒரு நபரின் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு செம்புப் பாத்திர நீர் உதவுகிறது.
தொண்டைக் கட்டில் இருந்து நிவாரணம் அளிக்கிறது: பழங்காலத்தில் மக்கள் தினமும் காலையில் செம்பு பாட்டில் அல்லது பாத்திரத்தில் சேமித்து வைத்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளிப்பார்கள். ஏனென்றால், தாமிரத்தில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் தொண்டை அடைப்பைத் தீர்க்க உதவுகிறது.
இரத்த சோகையை எதிர்க்கிறது: மனித உடலில் தாமிர குறைபாடு அரிதான இரத்தக்கசிவு கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக வெள்ளை இரத்த அணுக்கள் குறையும். நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
வயிறு தொடர்பான பிரச்னைகளை தீர்க்கும்: செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை குடிப்பதால் வயிற்று பிரச்னைகள், வாய்வுனால் உண்டாகும் வலி, மலச்சிக்கல் பிரச்னைகளை தீரும்.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு உதவுகிறது: தாமிரம் தைராய்டு சுரப்பியின் முரண்பாடுகளை சமன் செய்கிறது. அதாவது தைராய்டு சுரப்பி நன்கு செயல்பட ஆற்றல் அளிக்கிறது.
மூட்டுவலி மற்றும் வீக்கமடைந்த மூட்டுகளை குணப்படுத்துகிறது: இது கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது.
தொற்று நோயை நிராகரிக்கிறது: தாமிரம் ஒரு இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பி. எட்டு மணி நேரத்திற்கும் மேலாக செம்பு பாட்டில்களில் சேமிக்கப்படும் நீர் இ.கோலி, மற்றும் காலரா பேசிலஸ் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுகிறது. நோய்த் தொற்றில் இருந்து காக்கிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது: ஆயுர்வேதம், ’தாம்ரா ஜல்’ குடிப்பதால் வயிற்றை நச்சு நீக்கி சுத்தப்படுத்துகிறது என்று கூறுகிறது. தாமிரம் வயிறு வீக்கத்தைக் குறைத்து, சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. வயிற்றுப் புண், அஜீரணம் மற்றும் வயிற்றுத் தொற்றுகளுக்கு தாமிரம் ஒரு சிறந்த மருந்தாகும்.
இருதய அமைப்புக்கு உதவுகிறது: இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது.
இளமைத் தோற்றம் தருகிறது: சருமம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்க செம்பு நீர் உதவுகிறது. செம்பு நீரில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. முகத்தில் உள்ள சுருக்கம், கரும்புள்ளிகளை விரட்டவும் முகத்தை பளபளப்பாக்கவும் உதவுகிறது.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது: மூளை மிகவும் திறமையாக வேலை செய்ய உதவுகிறது. ஞாபக சக்தியை அதிகரிப்பதில் இந்த செம்பு நீர் பெரும் பங்கு வகிக்கிறது.
எடை இழப்பு மற்றும் காயங்களை வேகமாக குணப்படுத்த உதவுகிறது: தாமிரம் மனித உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு படிவுகளை கரைத்து எடை குறைக்க உதவுகிறது. மேலும் சரும மீளுருவாக்கம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, காயங்களை விரைவாக குணப்படுத்த உடலுக்கு உதவுகிறது.
உடலின் வெப்பநிலையை குளிர்ச்சியாக வைக்கிறது: நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குள் செல்லும்போது, அது அமிலத்தன்மையை உண்டாக்கி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அதன் மூலம் உடலை சூடாக்குகிறது. செம்பு அமிலங்களை சமநிலைப்படுத்தவும், நச்சு நீக்கவும் மற்றும் உடலின் வெப்பநிலையை குறைக்கவும் உதவுகிறது. வெப்பமான கோடை மாதங்களில், நிலவும் வானிலை காரணமாக உடல் வெப்பமடையும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.