தம்பதியரின் அந்தரங்கத்தில் மற்றவர்கள் எப்போது நுழையலாம்? தவிர்க்க வேண்டிய எல்லைகள்!

உறவுகளில் விரிசல் விழாமல் இருக்க கணவன் மனைவி இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகள்.
தம்பதியர் நிம்மதி
தம்பதியர் நிம்மதிAI image
Updated on

கணவன்–மனைவிக்குள் உறவு, நட்பு, நம்பிக்கை ஆகியவை வலுப்பட வேண்டுமெனில் குடும்பத்தினர், நண்பர்கள் தலையீட்டுக்கு தெளிவான எல்லை தேவை. அம்மா, மாமியார், உடன் பிறந்தவர்கள் தங்கள் அனுபவத்தை பகிரலாம்; ஆனால் முடிவெடுப்பது தம்பதியரின் உரிமை. நண்பர்களிடம் மனஅழுத்தம் பகிரலாம்; ஆனால் படுக்கையறை, நிதி ரகசியங்கள் வெளியே போகக் கூடாது. துணையின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே ஆரோக்கியமான இல்லறத்தின் மையம்.

திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் மட்டுமல்ல. இரு வேறு குடும்பங்களின் கலாச்சாரம், உணர்வுகள், பழக்கவழக்கங்கள் இணையும் ஒரு வாழ்வியல் பயணம். குடும்பத்தில் கணவன், மனைவியை சுற்றி மாமியார், மாமனார், அம்மா, உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் போன்ற பலரின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், அவரவருக்கென்று ஒரு தனிப்பட்ட எல்லை உண்டு.

அந்த எல்லையைக் கடந்து தம்பதியர் நிம்மதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் பிறர் நுழையும் போதுதான் குடும்ப அமைதியில் விரிசல் விழத் தொடங்குகிறது. உறவுகளின் மரியாதையைக் குலைக்காமல், தம்பதியரின் நிம்மதியைப் பாதுகாக்கும் எல்லை எது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

அம்மா/மாமியார்களின் தலையீடும், அதிகாரமும்:

பிள்ளைகள் மீது பாசமும் அக்கறையும் இருப்பது இயல்புதான். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் ‘என் மகனுக்கு இப்படித்தான் சமைக்கணும்’, ‘என் மகளுக்கு இதுதான் பிடிக்கும்’ என்று அவர்களுடைய சின்னச் சின்ன விருப்பங்களைத் துணைவர் மீது திணிப்பது, புதிய வாழ்க்கைக்குள் தேவையில்லாத கசப்பையே கொண்டுவரும்.

அனுபவத்தின் அடிப்படையில் பெரியவர்கள் கருத்துக்களைச் சொல்லலாம். ஆனால் அதைத்தான் செயல்படுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது. மாமியார் என்பவர் மருமகளை மற்றொரு வீட்டின் மகளாக மதித்து, அவருக்கு அந்த வீட்டில் புதிய பழக்க வழக்கங்களை உருவாக்கவும், முடிவெடுக்கவும் சுதந்திரம் தரவேண்டும்.

அம்மாக்களின் தலையீடு: திருமணத்திற்குப் பிறகு மகள் தன் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் அம்மாவிடம் சொல்வதும், அம்மா அதற்கேற்ப மருமகன் குடும்பத்தைப் பற்றித் தீர்ப்பளிப்பதும் தம்பதியரின் புரிதலைப் பாதிக்கும்.

தம்பதியர் நிம்மதி
தம்பதியர் நிம்மதிAI image

உடன் பிறந்தவர்கள்: ஆரோக்கியமான உறவும், எல்லையும்:

குடும்பத்தில் நாத்தனார், மைத்துனர் போன்ற உடன் பிறந்தவர்களின் உறவு இனிமையானது. ஆனால், தம்பதியரின் நிதி நிலைமை, குழந்தைகளின் வளர்ப்பு, குடும்ப நிர்வாகம் ஆகியவற்றில் உடன் பிறந்தவர்கள் உரிமை எடுத்துக் கொண்டு முடிவுகளைத் திணிப்பது சிக்கலை உண்டாக்கும்.

இதையும் படியுங்கள்:
கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க கூகுளில் இதைத்தான் தேடுறாங்களா. பகீர் கிளப்பும் ரிப்போர்ட்!
தம்பதியர் நிம்மதி

‘நாங்கள் அப்படிச் செய்தோம், நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்ற ஒப்பீடுகள் தம்பதியரின் தனித்துவத்தைக் கெடுக்கும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும் போது உடன் பிறந்தவர்கள் ஒருவருக்கு ஆதரவாகப் பேசிப் பஞ்சாயத்து செய்யாமல், அவர்கள் தாங்களாகவே பேசித் தீர்க்கும்படி விட்டுவிட வேண்டும்.

நண்பர்களுக்கான எல்லைக்கோடு:

மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆறுதல் தேடவும் தோழிகளிடமும் நண்பர்களிடமும் பேசுவது தவறில்லை. ஆனால், கணவன்-மனைவிக்குள் இருக்கும் அந்தரங்க விஷயங்கள், படுக்கையறை விவாதங்கள், நிதி சார்ந்த ரகசியங்கள் ஆகியவற்றை வெளிநபர்களிடம் பகிர்வது மிகப்பெரிய தவறான வழிகாட்டுதலுக்கு வழிவகுக்கும்.

நண்பர்கள் கூறும் ஆலோசனைகள் அவர்களுடைய வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டதே தவிர, உங்கள் துணையின் இயல்புக்கு அது பொருந்தாது. தம்பதியரின் ஊடல்களை வெளியில் சொல்லி நியாயம் கேட்பதைவிட, இருவரும் மனம்விட்டுப் பேசித்தீர்ப்பதே இல்லறத்தை பலப்படுத்தும்.

ஆரோக்கியமான எல்லைகளை அமைக்கும் வழிகள்:

கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் ஊடல்கள், நிதித்திட்டங்கள் ஆகியவை நால்வர் அறியாத ரகசியமாக இருக்க வேண்டும். குடும்பம் சார்ந்த முடிவை எடுக்கும்போது தம்பதியர் தங்களுக்குள் பேசி, ஆலோசித்து இறுதி முடிவெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கண்டுகொள்ளாத கணவனை வழிக்குக் கொண்டு வர இதோ 5 ரகசிய வழிகள்!
தம்பதியர் நிம்மதி

அதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதட்டாமல், கட்டளையிடாமல், மென்மையாகப் பேசிப் புரியவைக்க வேண்டும். பெரியவர்களிடமோ நண்பர்களிடமோ முரண்பட நேர்ந்தால், கோபப்படாமல், ‘இதை நாங்கள் இருவரும் பேசி முடிவெடுக்கிறோம்" என்று தெளிவாகவும் அன்பாகவும் எடுத்துரைக்கப் பழகவேண்டும். பெற்றோர், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்க்கையின் முக்கிய அங்கங்களே. ஆனால், துணையின் நியாயமான உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் உங்கள் இல்லற வாழ்வில் எழும் சிறுசிறு மனக்கசப்புகளை நீக்கி, ஒருவருக்கொருவர் முழுமையான புரிதலுடன் மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com