
அதீத அச்ச உணர்வு இருப்பதை ஆங்கிலத்தில் ஃபோபியா என்று குறிப்பிடுவது வழக்கம். நம்மில் பலருக்கும் பல விஷயங்களில் ஃபோபியா இருக்கும். வெளியில் தைரியமான நபராக காட்டிக் கொண்டாலும் சில விஷயங்களில் பயம் என்பது இயற்கையாகவே இருக்கும்.
எந்த ஒரு நாயைக் கண்டாலும் பயத்தில் நடுங்கி ஓட்டம் பிடிப்பதையே சைனோபோபியா என்று குறிப்பிடுவர். சின்ன குட்டி நாயாக இருந்தாலும் கூட அதைக் கண்டு பயப்படுவதற்கு சின்ன வயதில் ஏற்பட்ட மன அதிர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாயைப் பற்றிய பயம்:
சிலருக்கு நாயைப் பற்றிய நினைப்பு வந்தாலே பயம் ஏற்படும். தூரத்தில் சென்று கொண்டிருந்தாலும் அதைக் கண்டதும் அப்படியே உறைந்து நின்று விடுவதும் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் என யாராவது தங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டுக்கு செல்வதை தவிர்ப்பதும், அப்படியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் முதலிலேயே போன் செய்து, 'நாயை கட்டி வைத்து விட்டீர்களா? நான் வரலாமா? அதை நான் இருக்கும் வரை கொஞ்சம் கண்காணாத இடத்தில் கட்டி வைத்து விடுங்களேன்' என்று கூறுபவர்களும் உண்டு. சிலர் நாயைப் பார்த்தாலே கல்லால் அடிப்பதும், துன்புறுத்துவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் நாயைப் பற்றிய பயம் தான்.
மோசமான அனுபவம்:
சிலருக்கு நாய்கள் மீது ஏற்படும் மோசமான அனுபவம் காரணமாகவும் பயம் உண்டாகும். அதிலும் வெயில் காலத்தில் நாய்கள் கடிக்கும். நாய் கடித்தால் ஏற்படும் ரேபிஸ் நோய் பற்றிய பயம் அனைவருக்கும் உண்டு. நாய் கடித்தலின் பெரும்பாலான நிகழ்வுகள் அந்தப் பகுதியின் ஆதிக்கத்திற்கான சண்டையாகவும், பாதுகாப்புக்காகவும் ஏற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு நாயும் தன்னுடைய எல்லையை வரையறுத்துக் கொள்கிறது. அதில் நுழையும் பிற நாய்களை ஆக்ரோஷமாக குரைத்து விரட்டுகின்றன.
பயமுறுத்துவது:
சில நேரங்களில் நாய்கள் பயமுறுத்துவதை ஒரு விளையாட்டாக செய்கின்றன. நாய் விரட்டி ஒருவர் பயந்து ஓடும் பொழுது மனிதர்கள் தங்களுக்கு பயப்படுகிறார்கள் என்றுணர்ந்து அதை விளையாட்டு போல செய்கின்றன. இம்மாதிரி சூழலில் அவை கடிக்கவும் செய்கின்றத. அதனால்தான் பெரும்பாலானவர்களுக்கு நாயைப் பற்றிய பயம் உண்டாகிறது.
தெரு நாய்கள் ஏன் கடிக்கின்றன:
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாகவும், தேவையான உணவு கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படும் பொழுதும், போக்குவரத்து இரைச்சலும் தெரு நாய்களை வெகுவாக பாதிக்கின்றன. இம் மாதிரியான சமயங்களில் அவை ஆக்ரோஷமாகின்றன. அதன் வெளிப்பாடு தான் நாய்கள் கடிப்பது.
வளர்ப்பு நாய்கள் கடிப்பதன் காரணம்:
இரண்டு மாத குட்டியாக இருக்கும் பொழுது தன்னுடைய பற்களால் அனைத்தையும் கடித்து இழுக்கிறது. காரணம் அப்போதுதான் அவற்றிற்கு பற்கள் வெளியே வரத் தொடங்குகின்றன. இம்மாதிரியான சமயங்களில் நாயை வளர்ப்பவர்கள் அதைத் தடுக்காமல் அவற்றை ஒரு விளையாட்டாக எண்ணி கண்டு மகிழ்கின்றனர். இதுவே பின்பு அவற்றிற்கு பழக்கமாகி விடுகிறது. அத்துடன் வீட்டின் மூலையில் சதா சர்வ நேரமும் கட்டி வைக்கப்படும் அந்த நாய்கள் ஆக்ரோஷமாக மாறுகின்றன. இதற்கு அவை பாதுகாப்பின்மையை உணர்வது தான் காரணம்.
உணவு பற்றாக்குறை மற்றும் சமச்சீரின்மை:
தெரு நாய்களுக்கு தேவையான அளவு உணவு கிடைக்கவில்லை என்றால் ஆக்ரோஷமாக மாறுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கோ கொடுக்க வேண்டியதை விட அதிக அளவு உணவு கொடுக்கப்பட்டாலும் அவற்றின் செயல்பாடுகள் சரியான விகிதத்தில் இல்லாததால் உடல் ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக அவை ஆக்ரோஷமாக மாறுகின்றன.
ஹைப்பர் ப்ரீட் நாய்:
ஹைப்பர் ப்ரீட் நாய்களின் மனநிலை எப்பொழுது மாறும் என்று சொல்ல இயலாது. அவற்றைத் தவறான இடத்தில் தொட்டாலோ அல்லது அதன் தொடுதல் நமக்கு புரியவில்லை என்றாலோ அவை நம்மை தாக்கக்கூடும்.
நாய் கடித்தால் என்ன செய்யலாம்?
முதலில் நாய் கடித்த இடத்தை தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு நன்கு கழுவ வேண்டும். பிறகு மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம். வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதால் ரேபிஸ் ஆபத்து இல்லை. ஆனால் தெரு நாய்கள் கடித்தால் அந்த நாயை நான்கு நாட்கள் கண்காணித்து அவை இறந்து விட்டால் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.