தினசரி காலண்டரில் இத்தனை பயன்பாடுகளா?அடடா ...இது தெரியாமல் போச்சே?
நாள், நட்சத்திரம், நல்ல நேரம் போன்றவற்றை பார்ப்பதற்கு நாம் பயன்படுத்துவது தினசரி காலண்டரை தான். அது எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.
ரிட்டன் கிப்ட்:
தினசரி காலண்டரை பிரிண்ட எடுத்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு எல்லாம் ரிட்டன் கிப்ட்டாக எனது உறவினர் கொடுத்தார். அவர் பையனின் திருமணம் டிசம்பர் மாதத்தில் நடந்தது என்பதால். இப்படி ஒரு ஐடியா. பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் மனமகிழ்ச்சி உடன் இருந்தார்கள். வீடு திரும்பினார்கள்.
கோவில் மற்றும் போஸ்ட் ஆபீஸ் பயன்பாடு:
அடுத்ததாக அந்த தினசரி காலண்டரை டிசம்பர் முடிந்தவுடன் என் தோழி எடுத்துச் சென்று அதில் இருக்கும் பேப்பர் கேக்கை தனியாகவும் அட்டையை தனியாகவும் பிரித்து, பேப்பரை கோவிலுக்கு திருநீர் மடிக்கவும், அட்டையை போஸ்ட் ஆபீஸில் கடிதம் எழுதுபவர்களுக்கு அதில் வைத்து எழுத உதவியாகவும் கொடுத்தார். போஸ்ட் ஆபீஸில் அதை கொடுக்கும் பொழுது அதனுடன் இரண்டு பேனா, கம் பாட்டில் மற்றும் ஒரு ஸ்டேபிளர் சேர்த்து கொடுத்தார்.
(அவர் போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்தவர். அங்கு வருபவர்கள் பேனா இல்லாமல் வந்து திண்டாடுவதை கவனித்து, அந்த ஆபீஸில் ஓய்வு பெற்ற பிறகு அங்கு இதுபோல் வாங்கி கொடுப்பதை வழக்கம் ஆக்கி வைத்திருக்கிறார். அதனால் பொதுமக்களின் தேவைக்கேற்ப இவற்றையெல்லாம் வாங்கி கொடுத்து வருகிறார்.)
குறிப்புகளுக்கு:
இன்னொரு வீட்டில் அந்த டெய்லி காலண்டர் கேக்கை பத்திரப்படுத்தி வைத்திருந்து அதில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளையும், பொன்மொழிகளையும் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தாள் ஒரு கல்லூரி மாணவி. இது ஏன் என்று கேட்டதற்கு, பேச்சு, கட்டுரை போட்டியில் இடை இடையே இந்த பொன்மொழிகளை சேர்ப்பதற்கு வசதியாக இருக்கும். அதற்காக எழுதுகிறேன் என்று கூறினாள். மேலும் இந்த மருத்துவ குறிப்புகளை அம்மா அவ்வப்பொழுது யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அதற்கு பயன்படுத்திக் கொள்வார். அதற்காக அவருக்கு எழுதிக் கொடுக்கிறேன் என்று கூறினார்.
எண்ணெய் கசிவைத் தடுக்க:
இன்னொரு தோழி அந்த காலண்டர் அட்டையை சமையல் அறையில் வைத்து எண்ணெய் வழியாமல் இருப்பதற்கு அதன் மீது தாளிப்பதற்கான எண்ணெய் வாளிகளையும், நெய் பாத்திரத்தையும் அதில் வைத்து பயன்படுத்தியிருந்தார்.
மூடியாக:
மேலும் அந்த காலண்டரட்டையில் தெய்வ படங்கள் எதுவும் இல்லாததாக இருந்ததை குப்பைக் கூடையை மூடி வைக்கவும், மாட்டுக்கு கழனி தண்ணி வைக்கும் பாத்திரத்தை மூடி வைக்கவும் பயன்படுத்தியிருந்தனர்.
டஸ்ட்பின்:
இன்னும் சிலர் அந்த காலண்டர் சீட்டில் நகத்தை வெட்டி அதில் வைத்து மடித்து போடவும், தலையை வாரிவிட்டு சிந்திய முடியை அந்த பேப்பரில் சுற்றி டஸ்ட் பின்னிலே போடுவதற்கும் பயன்படுத்தி இருந்தனர்.
ராசிபலனுக்கு:
இன்னொரு தோழி அந்த பேப்பர் கேக்கை மட்டும் கிச்சனில் எடுத்து வைத்துக்கொண்டு நாள், நட்சத்திரம், ராசிபலன், விசேஷ தினங்கள், விடுமுறை பார்ப்பதற்கு பயன்படுத்திக் கொண்டார்.
கலைவண்ணம்:
மற்றொருவர் அந்த காலண்டர் அட்டையில் அழகாக ஒயிட் பேப்பர் ஒட்டி அழகுப்படுத்தி, அதில் ஒரு டிராயிங் வரைந்து, அழகாக கலர் கொடுத்து, அவர் கைவண்ணத்தை காண்பித்து இருந்தார். இதை வரவேற்பு அறையில் தொங்க விட்டு அழகுபடுத்தி இருந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் கண்கள் அதில் பட்டு அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தன.
பரிட்சைக்கு:
மற்றொருவன் அதை பரீட்சை எழுதும் அட்டையாக பயன்படுத்தினான். நாம் படித்த பொழுதும் அப்படித்தான் பயன்படுத்தினோம்.