
இந்திய நாட்டின் மக்கள் தொகையே நமது நாட்டின் பலமும் பலவீனமும் ஆகும். இந்தியாவின் எந்த நகரங்களில் நடக்கும் கலாசார கூட்டங்களாகட்டும், அரசியல் பொதுக்கூட்டங்களாகட்டும், கிரிக்கெட் வெற்றி கொண்டாட்டங்கள் ஆகட்டும், இசை நிகழ்ச்சிகளாகட்டும், சினிமா தியேட்டரில் முதல் ஷோவாகட்டும் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் கூட்ட நெரிசல் ஏற்படும்போது அதிலிருந்து தப்பிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
நீங்கள் நிற்கும் கூட்டத்தில் குனிந்து உங்கள் கால்களைத் தொட முடியவில்லை என்றால் நெருக்கடி நிலை ஏற்பட்டு விட்டது என அர்த்தம். உடனடியாக கூட்டம் செல்லும் திசையில் செல்லாமல் பக்கவாட்டில் மேடான பகுதி, கார் அல்லது மரங்கள் இருந்தால் அதை நோக்கி மூலைவிட்டமாக கைகளை பாக்ஸிங் செய்வது போல அதாவது நெஞ்சுக்கு முன்னால் பாதுகாப்பு தருவது போல வைத்துக் கொண்டு நகர வேண்டும்.
நீரின் ஓட்டம் போல அலையலையாக கூட்ட நெரிசல் ஏற்படும்போது செயல்படும். அப்போது நீரின் ஓட்டத்தோடு செல்லாமல், நீரை எதிர்த்தும் செல்லாமல் இந்த மக்கள் ஓட்டம் எனும் நீரோட்டத்துக்கு மூலைவிட்டமாக அந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டும். இதன் மூலம் எளிதில் கூட்டத்தை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைக்கும். ஒரு கூட்டத்தில் பங்கெடுக்கும்போதே அங்குள்ள பல வெளியேறும் பாதைகள், இரண்டு கட்டடங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி, கதவுகள் மற்றும் திடீரென நெருக்கடி ஏற்பட்டால் எதன் மீது ஏறி தப்பிக்க வேண்டும், கூட்ட நெரிசல் ஏற்பட்டால் முதலில் எந்த பாதை நோக்கி ஓட வேண்டும் என்றெல்லாம் முன்பே மனக்கணக்கு போட்டுக்கொள்ள வேண்டும்.
பெரிய கூட்டம் ஒரு குறிப்பிட்ட பாதையில் முண்டியடித்துக் கொண்டு இருக்கும்போது நாம் வேறு மாற்றுப்பாதையின் வழியாகச் செல்லும்போது ஆள் இல்லாமல் குறைவாக இருக்கும் திசையில் சென்று தப்பிக்கலாம். அப்போது நம்முடைய மனக்கணக்குகள் நம்மைக் காக்க கூடும்.
நாம் அசைய முடியாத இடத்தில் சிக்கிக்கொண்டால் நமது நெஞ்சு பகுதி சுற்றி இருக்கும் கூட்டத்தால் நெறிக்கப்பட்டு, மூச்சு விட இயலாமல் போகும் வாய்ப்பு அதிகம் என்பதால் நாம் நகரும் திசையில் எப்போதும் நம்மைத் தடுக்கும் சுவர், தூண்கள் ஏதாவது இருந்தால் அவற்றை விட்டு விலகி இருப்பதோடு எப்போதும் நமது கால்கள் தரையில் இருக்குமாறு ஊர்ந்துதான் செல்ல வேண்டும்.
கூட்ட நெரிசலில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தால் கருவுக்குள் சிசு எப்படி சுருண்டு படுத்துக்கொள்ளுமோ அதுபோல தலையை உள்நோக்கி வைத்து மடங்கி சுருண்டு படுத்துக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் நமது தலை மற்றும் நெஞ்சுப் பகுதி காக்கப்படும். கூட்ட நெரிசல் விலகியவுடன் எழுந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.
கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு தலையாயப் பிரச்னையான மூச்சுத் திணறல் (SUFFOCATION) இருக்கும்போது, அதாவது மூச்சு விடாமலோ நாடித் துடிப்பு இல்லாமலோ பத்து நொடிகளுக்கு மேல் இருந்தால் உடனே சிபிஆர் (இதயத்துடிப்பு மற்றும் மூச்சை மீட்டல்) முதலுதவியை மூச்சு நாடி நின்று நான்கு நிமிடங்களுக்குள் ஆரம்பிக்க வேண்டும்.
முடிந்தவரை குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் கண்டிப்பாக கூட்ட நெரிசல் ஏற்படும் இடங்களுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஒருவேளை கூட்ட நெரிசலில் சிக்க நேரிட்டால் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.