வெள்ளை மிட்டாய் என்று நினைத்து குழந்தைகள் செய்யும் தவறு... அலட்சியம் வேண்டாம்!

naphthalene balls
naphthalene balls
Published on

பொதுவாக நம் வீடுகளில் பட்டுப் புடவைகள், விலையுயர்ந்த துணிகள் மற்றும் பழைய புத்தகங்களைப் பாதுகாக்கப் பீரோக்களில் ஒரு விதமான வெள்ளை நிற உருண்டைகளைப் (Naphthalene Balls) போட்டு வைப்பது வழக்கம். பூச்சிகள் வராமல் இருப்பதற்காகவும், கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்காகவும் நாம் பயன்படுத்தும் இந்த எளிய முறை, காலம் காலமாக நம் பழக்கத்தில் ஊறிப்போன ஒன்று. 

துணிகளை எடுக்கும்போது வரும் அந்த ஒரு விதமான நெடியை நாம் சுத்தம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகவே கருதுகிறோம். ஆனால், நம் வீட்டின் மூலைமுடுக்குகளில் நாம் வீசி எறியும் அந்தச் சிறிய வெள்ளை உருண்டைகள், நம் குடும்பத்தினர் சுவாசக்காற்றில் நஞ்சைக் கலக்கின்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு கசப்பான உண்மையாகும். 

காற்றில் கரையும் விஷம்!

இந்த வெள்ளை உருண்டைகள் பார்ப்பதற்குச் சாக்பீஸ் கட்டி போலவோ அல்லது சூடம் போலவோ தோன்றலாம். ஆனால் அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இது பெட்ரோலியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் ஒரு மோசமான ரசாயனம். இதன் தனித்தன்மை என்னவென்றால், இது திரவமாக மாறாமலே நேரடியாகக் காற்றுடன் கலந்து வாயுவாக மாறும் குணம் கொண்டது.

பூச்சிகள் இந்த வாசனையை நுகரும்போது இறந்து விடுகின்றன அல்லது ஓடிவிடுகின்றன. பூச்சிகளுக்கே அந்த நிலைமை என்றால், அதே காற்றைச் சுவாசிக்கும் மனிதர்களின் நிலை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். மூடிய அறையில் அல்லது பீரோவில் தேங்கி நிற்கும் இந்த ரசாயனக் காற்று, நுரையீரலுக்குள் சென்று பலவிதமான சுவாசக் கோளாறுகளை உண்டாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
பயோஹேக்கிங்: உடலின் சக்தியை 10 மடங்கு அதிகரிக்க நவீன வழி!
naphthalene balls

குழந்தைகளுக்குப் பெரும் ஆபத்து!

வீட்டில் கைக்குழந்தைகள் அல்லது தவழும் குழந்தைகள் இருந்தால், இந்த உருண்டைகள் எமனுக்குச் சமமானவை. பார்ப்பதற்கு மிட்டாய் போலவும், ஜொலிக்கும் வெள்ளை நிறத்திலும் இருப்பதால் குழந்தைகள் இதை எளிதில் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் அபாயம் உள்ளது. இதைச் சாப்பிட்டால் மட்டுமல்ல, இதைத் தொட்டுவிட்டு அந்த விரலை வாயில் வைத்தாலே நச்சுத்தன்மை உடலுக்குள் சென்றுவிடும். 

இது குழந்தைகளின் மென்மையான ரத்தச் சிவப்பணுக்களை உடைத்து, ரத்த சோகை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இது மஞ்சள் காமாலை, வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலியையும் உண்டாக்கும். நீண்ட நாட்கள் இந்த நெடியைச் சுவாசிக்கும் குழந்தைகளுக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயல்பாடு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
Text Neck: நவீன காலத்து 'சைலண்ட் கில்லர்'! வேண்டாம் இந்த விபரீதம்!
naphthalene balls

மாற்று வழிகள்!

 நவீன ரசாயனங்கள் வருவதற்கு முன்பு நம் முன்னோர்கள் பூச்சிகளை விரட்ட இயற்கையான முறைகளையே கையாண்டார்கள். அந்த முறைகள் பாதுகாப்பானவை மட்டுமல்ல, உடல் நலனுக்கும் நன்மை பயக்கக்கூடியவை. காய்ந்த வேப்பிலைகளைத் துணிகளுக்கு இடையில் வைப்பது பூச்சிகளை அண்டவிடாது. 

அதேபோல, கிராம்பு, மிளகு அல்லது வசம்பு போன்றவற்றைச் சிறிய துணியில் முடிந்து பீரோவில் போட்டு வைக்கலாம். காய்ந்த எலுமிச்சைத் தோல்களும் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படும். இவை நல்ல நறுமணத்தைத் தருவதோடு, சுவாசிக்கும் காற்றுக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com