
விதவிதமான வண்ணத் துணிகளை வாங்கி அணிந்துகொள்ளும் நாம், வெள்ளை நிறத்தில் உள்ள துணியை மட்டும் பிடித்திருந்தாலும் எடுக்கத் தயங்குவோம். காரணம், வெள்ளை துணியில் அழுக்கோ, கறையோ பட்டு விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினம். ஆனால், வெள்ளை நிற ஆடைகளை அணிந்தால் நம் தோற்றம் மேம்படுவதுடன், நமக்குள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஒரு மெஜஸ்டிக் லுக் தரக்கூடிய வெள்ளை நிற ஆடையை தயங்காமல் வாங்கி இனி அணியலாம். அதுபோல்தான் பள்ளிச் சீருடைகள் வாங்கிய புதிதில் பளிச்சென்று வெள்ளை வெளேரென்று காணப்படும். அடிக்கடி தோய்க்க தோய்க்க அதில் பழுப்பு கலர் ஏறி வெள்ளை நிறம் மங்கிக் காணப்படும். இவற்றை பளிச்சிடும் நிறத்திற்கு மாற்ற சில வழிகள் உள்ளன.
பொதுவாகவே, வெள்ளை துணிகளை வாஷிங் மெஷினில் மற்ற துணிகளுடன் சேர்த்துத் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும். பிற துணிகளில் இருந்து இறங்கும் சாயம் வெள்ளை துணிகளை பாழ்படுத்தி விடும். சில சமயம் தயக்கத்தையும் மீறி வெள்ளை துணிகளை ஆசைப்பட்டு வாங்கி விடுவோம். ஆனால், அதனை அடிக்கடி அணியத் தயங்குவோம். அழுக்காகி விட்டால் என்ன செய்வது என்று எண்ணி பீரோவிலேயே வைத்திருப்போம். தயக்கத்தைப் போக்கி அணிவதற்கும், மங்கிப்போனால் புதிது போல் பழைய வெள்ளை நிறத்திற்கு மாற்றுவதற்குமான வழிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கல் உப்பு, எலுமிச்சை சாறு: ஒரு பக்கெட்டில் தேவையான அளவு தண்ணீர் பிடித்து அதில் அழுக்கு, கறை ஏற்பட்ட துணிகளை தோய்ப்பதற்கு சோப்புத்தூளை சேர்த்து சிறிதளவு வாஷிங் சோடாவையும் போடவும். அத்துடன் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து வெள்ளை துணிகள், பிள்ளைகளின் வெள்ளை யூனிபார்ம், பெரியவர்களின் வேஷ்டி சட்டை போன்ற வெள்ளை துணிகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து கையால் நன்கு கசக்கி எடுத்துப் பார்க்க முக்கால் பாகம் கறைகள் நீங்கி இருக்கும். பிறகு அந்தப் பகுதியில் பிரஷ் கொண்டு தேய்க்கவும். பிறகு அவற்றை நல்ல தண்ணீரில் இரண்டு முறை அலசி எடுத்து வெயிலில் உலர்த்த அழுக்கு, கறைகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். கல் உப்பு, எலுமிச்சை சாறு, வாஷிங் சோடா போன்றவற்றை வெள்ளை துணிகள் துவைக்க மட்டுமே பயன்படுத்தவும். மற்ற வண்ணத் துணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. காரணம் வண்ணத்துணிகள் அதன் பொலிவிழந்து நிறம் மங்கி விடும்.
வியர்வை மற்றும் மஞ்சள் நிற கறைகளுக்கு: வெள்ளை வினிகர், காபி, தேநீர் மற்றும் வியர்வை போன்ற கடினமான கறைகளை அகற்ற உதவும். வெள்ளை வினிகர் ஒரு சிறந்த கறை நீக்கியாகும். துணிகளில் இருக்கும் வியர்வை கறைகள், மஞ்சள் நிறக் கறைகளை வெள்ளை வினிகரை கொண்டு துவைக்கும்பொழுது கறைகள் எளிதில் மறைந்து பளிச்சிடும். வினிகரையும் தண்ணீரையும் சம அளவு கலந்து அதில் கறை படிந்த துணிகளை சில நிமிடங்கள் ஊற வைத்து தோய்க்க நல்ல பலன் கிடைக்கும்.
பூஞ்சை மற்றும் துரு கறைகளுக்கு: வெள்ளை துணிகளில் பூஞ்சை காளான் மற்றும் துரு கறைகளுக்கு எலுமிச்சை சாறு நல்ல பலன் தரும். வெள்ளை துணிகளை துவைப்பதற்கு முன்பு எலுமிச்சை சாறையும் தண்ணீரையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சம அளவு கலந்து பஞ்சால் கறையுள்ள பகுதிகளில் மெதுவாக தேய்த்து விட சுலபத்தில் கறைகள் நீங்கி பளிச்சிடும். எலுமிச்சை சாற்றில் உள்ள அமில பண்புகள் கடினமான கறைகளையும் போக்கிவிடும்.
எண்ணெய் கறை நீங்க: வெள்ளை ஆடைகளில் எண்ணெய் தெறித்து விட்டாலோ, எண்ணெய் கறை ஏற்பட்டாலோ உடனடியாக சுண்ணாம்பு சிறிது எடுத்து கறை உள்ள பகுதியில் தடவி தேய்த்து விடவும். சில நிமிடங்களிலேயே சுண்ணாம்பு எண்ணையை உறிஞ்சி விடும். பிறகு சோப்புத் தூள் சேர்த்து குளிர்ந்த நீரில் அலசி விட முழுவதுமாக எண்ணெய் கறை போய்விடும்.
பேக்கிங் சோடா பேஸ்ட்: வெள்ளை நிற துணிகளில் அழுக்கையும், கறைகளையும் போக்க பேக்கிங் சோடா சிறந்த பலன் தரும். துணியில் கறை படிந்தவுடன் சிறிது தண்ணீருடன் பேக்கிங் சோடாவை சேர்த்து குழைத்து ஒரு பேஸ்ட் போல் உருவாக்கி அதனை கறை, அழுக்கு படிந்த இடத்தில் தடவி சிறிது நேரம் விடவும். பிறகு பிரஷ் கொண்டு தேய்க்க கறை காணாமல் போய்விடும்.
காஸ்டிக் சோடா: காஸ்டிக் சோடா நாள்பட்ட அழுக்கு, கறைகளைப் போக்கும். இவை திரவ மற்றும் திட வடிவங்களில் கிடைக்கிறது. காரத்தன்மை அதிகம். எனவே, அவற்றை கைகளால் எடுக்காமல் மர ஸ்பூன் கொண்டு எடுக்கவும். வாஷிங் மிஷினில் வெள்ளைத் துணிகளை தனியாக போட்டு இரண்டு ஸ்பூன் காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் பவுடர் அல்லது லிக்விட் டிடர்ஜென்ட் சேர்த்து மிஷினில் போட்டு வழக்கம் போல் துணிகளை துவைக்க அழுக்கு கறையின்றி பளிச்சிடும்.