பட்டாசு விபத்துகளில் இருந்து பாதுகாத்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி?

தீபாவளி கொண்டாட்டம் பாதுகாப்பாக இருக்க: தெரிந்துகொள்ள வேண்டிய முதலுதவி குறிப்புகள்!
தீபாவளி பாதுகாப்பு - Deepavali safety,
தீபாவளி பாதுகாப்பு - Deepavali safety,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

தீபாவளி பண்டிகையின் பொழுது தற்செயலாக ஏற்படும் பட்டாசுக் காயங்களை (தீக்காயங்களை) உடனடியாக கவனிக்க வேண்டியது முக்கியம். காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து முதலுதவி செய்ய வேண்டும். பொதுவாக பட்டாசுகள் வெடிக்கும் பொழுது அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கைகள் இருக்கும். அதைத் தொடர்ந்து தலை மற்றும் கழுத்து போன்ற வற்றிலும் கவனம் தேவை.

தீபாவளி பாதுகாப்பு:

பட்டாசுகளை பற்ற வைக்கும்பொழுது தடுப்பு நடவடிக்கையாக கையுறைகள், கண்ணாடிகள், முகக்கவசங்கள் அணிவது சிறப்பு. தண்ணீர் இல்லாத ஹோலி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பிள்ளையார் சதுர்த்தி போல் பசுமை தீபாவளியை தேர்வு செய்வதும் சிறப்பு.

பசுமை தீபாவளி என்பது சுற்றுச்சூழலில் முடிந்த வரை அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல், அதே நேரத்தில் பண்டிகையை கொண்டாடுவதாகும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் இருப்பது நல்லது. இவை வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

சிறு தீக்காயங்கள்:

தோல் சிவந்து, லேசான விறுவிறுப்பு மட்டும் இருந்தால் அதாவது சிறிய பட்டாசு தீக்காயங்கள் என்றால் காயம் பட்ட இடத்தை உடனே குளிர்ந்த ஓடும் நீரில் சில நிமிடங்கள் காட்டவும். இது எரியும் உணர்வைக் குறைத்து, வெப்பம் தோலின் ஆழத்திற்கு செல்வதைத் தடுக்கும்.

காயம் கைகளிலோ அல்லது விரல்களிலோ ஏற்பட்டால், வீக்கம் ஏற்படுவதற்கு முன்பு மோதிரம், வளையல் அல்லது கடிகாரத்தை மெதுவாகக் கழற்றிவிடலாம். காயத்தை ஒரு சுத்தமான ஈரமில்லாத பருத்தித் துணியால் லேசாக மூடி வைக்கவும்.

தீவிரமான தீக்காயங்கள்:

தோல் கருகிப் போயிருந்தாலோ அல்லது காயம் பெரிதாக இருந்தாலோ வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முயலாமல் உடனடியாக பாதிக்கப்பட்டவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச்செல்ல வேண்டும். காயத்தின் மீது ஆடைகள் ஒட்டி இருந்தால் அதை வலுக்கட்டாயமாக எடுக்க முயலவேண்டாம். ஆடைகளைச் சுற்றியுள்ள பகுதியை மட்டும் கத்தரித்து விடலாம்.

தீபாவளி பாதுகாப்பு - Deepavali safety,
தீபாவளி பாதுகாப்பு - Deepavali safety,

கண் தீக்காயங்கள்:

பட்டாசுத் துகள்கள் கண்ணில் பட்டால் கண்களைத் தேய்க்க கூடாது. கண்களை தேய்த்தால் துகள்கள் கண்ணின் உள்பகுதியில் கீறல்களை ஏற்படுத்தலாம்.

சுத்தமான கைகளால் பாதிக்கப்பட்ட கண்ணின் மீது சிறிது குளிர்ந்த நீரைத்தெளிக்கவும். அதற்குமுன் கைகளை நன்கு கழுவிக்கொண்டு செய்யவேண்டும். இல்லையென்றால் பட்டாசுகளின் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் நம் கைகளில் இருக்கலாம்.

இது கண்களுக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும். கண் காயங்களைத் தவிர்ப்பதற்கு பாதுகாப்பான தூரத்திலிருந்து வெடிப்பதும், வெடிப்பதை பார்ப்பதும் நல்லது.

கண்கள் மிகவும் உணர்திறன் மிக்கவை. அத்துடன் உடலின் மிகவும் முக்கியமான பகுதி இது. பட்டாசுகளால் ஏற்படும் கண் காயம் ஒரு அவசர நிலையாகும். சிறிய பிரச்சனைதானே என்று எண்ணாமல் இதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்காவிட்டால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு விடும். எனவே காயத்தின் தீவிரத்தை பொருட்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

இதையும் படியுங்கள்:
90ஸ் தீபாவளி vs இன்றைய தீபாவளி: நாம் தொலைத்த அந்த பொன்னான தருணங்கள்!
தீபாவளி பாதுகாப்பு - Deepavali safety,

பட்டாசுகளால் ஆடைகளில் தீப்பிடித்தால்:

பட்டாசுகள் வெடிக்கும் போது தற்செயலாக ஆடைகளில் தீப்பிடித்தால் பதற்றம் அடைந்து ஓடக்கூடாது. அப்படி செய்தால் காற்றுப்பட்டு நெருப்பு மேலும் வேகமாக பற்றிக் கொண்டு திகுதிகுவென எரியும். எனவே இருக்கும் இடத்திலேயே நின்று கொள்ளலாம் அல்லது தரையில் படுத்துக்கொள்ளலாம்.

கைகளால் முகத்தை மூடிக்கொண்டு தீ அணையும் வரை தரையில் இடமும் வலமும் உருளலாம். கனமான பருத்தித் துணி இருந்தால் அதைக் கொண்டு தீப்பிடித்தவர் மீது போர்த்தி காற்றோட்டத்தை தடுத்து நெருப்பை அணைக்கலாம். நைலான், பாலிஸ்டர் போன்ற துணிகளை பயன்படுத்தக்கூடாது.

ஒலி மாசுபாடு:

தீபாவளி நாட்களில் பட்டாசுகள் வெடிப்பதால் கடுமையான ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. அதிகப்படியான சத்தம் காது கேட்கும் திறனை பாதிக்கலாம் அல்லது நரம்பு மண்டலத்திற்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம்.

திடீர் அதிகப்படியான சத்தம் ரத்த அழுத்தத்தை உயர்த்தி இதய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மனநல உணர் திறன் கொண்டவர்கள் கடும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

கூர்மையான செவித்திறன் கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பட்டாசு சத்தத்தால் மிகுந்த பயமும் அதிர்ச்சியும் அடைகின்றன. எனவே அதிக சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிர்த்து, குறைவான சத்தம் அல்லது பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்தலாம்.

மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்ற பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது.

எவற்றைத் தவிர்க்கவேண்டும்:

காயத்தின் மீது நேரடியாக ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டாம். இது ரத்த ஓட்டத்தை பாதித்து திசுக்களை மேலும் சேதப்படுத்தும்.

காயத்தின் மீது வெண்ணெய், எண்ணெய், மஞ்சள் தூள் போன்றவற்றைத் தடவக்கூடாது. இவை தொற்றை ஏற்படுத்தக் கூடும்.

தீக்காயத்தினால் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டால் அவற்றை ஊசியைக்கொண்டு அல்லது நகங்களால் உடைக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
வீட்டின் இந்த 3 இடங்களில் பட்டாசு வச்சா… வெடிச்சு சிதறும் உஷார்!
தீபாவளி பாதுகாப்பு - Deepavali safety,