
பொதுவாக, நடைமுறையில் ஓராண்டு என்ற நிலையை நான்கு பாகங்களாகப் பிரிக்கலாம். ஜனவரி முதல் மார்ச் வரை முதல் காலாண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரை இரண்டாம் காலாண்டு, ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்றாம் காலாண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரை நான்காம் காலாண்டு எனப் பிரிப்பது நடைமுறை. அரசு அலுவலகங்களிலும் இதேபோல் கடைபிடிப்பது (Financial method) வழக்கம். அலுவலகங்களில் தணிக்கை ஆண்டானது ஏப்ரல் முதல் மார்ச் வரை கணக்கிடப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மனித வாழ்வையும் நான்காகப் பிரித்து அதற்கேற்ப வாழ்க்கை எனும் தேரை நகர்த்தலாம். அதாவது, பிறப்பு முதல் 25 வயது வரை ஒரு பருவம், 26 முதல் 50 வரை இரண்டாம் பருவம், 51 முதல் 75 வரை மூன்றாம் பருவம், 76 வயது முதல் 100 வயது வரை நான்காம் பருவம் எனப் பிரிக்கலாம். இளமைக் காலம் வளம் சோ்க்கும் காலம். முதுமையின் தொடக்க காலமான நான்காம் பருவம் வயோதிகக் காலம் என அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.
முதல் பருவமான 25 வயதுக்குள் படித்து முடித்து நல்ல வேலையைத் தேடுதல், காதல் அல்லது திருமண ஏற்பாடு, குடும்பப் பொறுப்புகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் நிலைப்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுதல் போன்ற இனங்களாக இவற்றை வரையறை செய்துகொள்வது நல்லது. இக்காலத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனோநிலை, மனசாட்சியுடன் செயல்பட்டு பல்வேறு உதவிகளைச் செய்யும் மனோநிலைக்கு ஏற்றவாறு வளைந்து கொடுத்துப்போகும் நிலையை மேம்படுத்திக்கொள்ளும் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
இரண்டாம் பருவமான 26ல் தொடங்கி, 50 வயதுக்குள் திருமண வாழ்வு, குழந்தைகள் பெறுவது, மனைவியோடு எதிர்காலத் திட்டமிடல், பொறுப்புகளை சுமத்தல், வேலையில் கெட்ட பெயர் இல்லாமல் பணி புரிதல், வெளிநாடோ அல்லது உள்ளூரிலோ வருமானம் பார்க்கும் வேலை, வேலைக்குப் போகும்போதே மேல்படிப்பும் தொடா்வது, குழந்தைகளைப் படிக்க வைப்பது, தாய் தகப்பனாருக்கு உதவியாய் குடும்பப் பொறுப்புகளை சுமப்பது, மனைவியோடு கலந்து பேசி இடம் வாங்கிப்போடுவது, நோ்மறை சிந்தனையோடு வாழும் நிலைப்பாட்டைத் தொடர்வது, எதிர்கால சிந்தனை, வாரிசுகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை, வாரிசுகளின் படிப்பு, மகள் திருமணம், மகனுக்கு வேலை, பக்குவமான மனோநிலை, கோப தாபங்கள் வளராமல் பார்த்துக்கொள்வது, இறை வழிபாடு, உறவுகளை வளா்த்தல், பொதுவாக நல்ல வருவாய் வருவதற்கு ஏற்ப குடும்பக் கட்டமைப்பை சீரமைப்பது போன்றவற்றோடு இரண்டாம் பருவத்தைத் தொடரலாம்.
51 வயது தொடங்கி 75க்குள் மூன்றாம் பருவம். இப்பருவத்தில் நமக்காக ஒரு வீடு கட்டுதல், குழந்தைகளின் மேல் படிப்பு, தாய் தகப்பனார் பராமரிப்பு, பொறுமை, பக்குவம், கணவன் மனைவி ஆரோக்கியம், உடற்பயிற்சி, பணி ஓய்வு, பணப் பயன்களுக்கான திட்டமிதல், நிதானம், எதிர்காலத்தை நோய் நொடியில்லாமல் கடந்து போக உரிய வேலைகளை மேற்கொள்ளுதல், தாய் தகப்பனார் உடல் நலனில் அக்கறை, கணவன் மனைவிக்குள் கோப தாபம் குறைத்துஅனுசரிக்கும் நிலைப்பாடு, பேரன் பேத்திகளோடு பொழுதுபோக்குதல், குடும்ப சுப விரயம் மற்றும் எதிர்பாராத செலவுகளை மேற்கொள்ளுதல் போன்ற கடமை, ஆன்மிகத்தில் ஈடுபடுதல் போன்ற நிகழ்வுகளோடு வாழ்வது எனத் தொடரலாம்.
75 வயது முதல் 100 வயது வரை வயோதிகக் காலம். அடுத்தவர்களுக்குத் தொல்லை, பிறர் கையை எதிர்பார்ப்பது, உறவு நட்புகளை விலகுவது, உணவுக்கட்டுப்பாடு முறை, அடிக்கடி ஆகும் மருத்துவ செலவு போன்றவற்றை எதிர்கொள்வது.
பொதுவாக, வயோதிகம் கொடுமையானதுதான். நம்மை யாரும் மதிக்கவில்லையே, தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன், யாருமே வந்து பார்க்கவே இல்லை இப்படி கணவன், மனைவிக்குள் புலம்பல் அனைத்தும் வந்து போகும். சிலரது உடல்வாகு ஆரம்ப கால உணவுப் பழக்க வழக்கங்களால் தொண்ணூறு வயதுக்கு மேலேயும் கூட வாழ்வது இறைவனின் கொடையாகும். அதிலும் பிறருக்கும் மனைவிக்கும் தொல்லை தராமல் இறைவன் அடி சேர இறைவனின் உதவியை நாடலாம்.