
ஆதி காலத்தில் மனிதனுக்கு உடை, வீடு என எதுவுமில்லாமல் இருந்தது. காடுகளிலேயே தங்கிக்கொண்டு மரத்தில் இருக்கும் பழங்களையும் காய்களையும் மற்றும் ஆற்றில் இருக்கும் மீன்களையும் உண்டு காலத்தை கழித்தார்கள். பிறகு காட்டில் இருக்கும் மரங்களின் இலைகளால் உடலை மூடிக் கொண்டும் மழை வெய்யிலிலிருந்து பாதுகாக்க கூடாரத்தையும் அமைத்துக் கொண்டார்கள். பின்னர் இரண்டு கல்லை உரசுவதால் நெருப்பு வருவதைக் கண்டுபிடுத்து அதன் மூலமாக உணவை சுட்டு சாப்பிட்டார்கள். அவர்களிடம் எந்தவிதமான நோக்கமுமில்லை. கடவுள் தந்த இயற்கையை மட்டுமே நம்பி உயிர் வாழ்ந்தார்கள்.
அவர்கள் இயற்கையை ரசித்தார்கள், நேசித்தார்கள், வணங்கினார்கள். இதுதான் அன்றைய நாகரிகம். உலக அளவில் இதுதான் உண்மையான மற்றும் பழைமையான நாகரிகம் என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. இதற்குப் பிறகு மனிதன் ஒவ்வொன்றாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். முதலில் மிதிவண்டி, பிறகு இரு சக்கர வாகனம், கார், ரயில், பேருந்து, விமானம் என ஒன்றொன்றாக உருவாகியது. மனிதனின் ஆசையும் பெருகிக்கொண்டே போனது. இன்றைய நிலைமையில் நாம் நாளொரு மேனி பொழுதொருவண்ணம் என்பது போல ஒவ்வொரு நாளும் புதிய புதிய படைப்புகளை உருவாக்குகிறோம்.
புதியவை உருவாக உருவாக நமக்கு அதை எப்படியாவது அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்கிற வெறித்தனம் அதிகமாகிக்கொண்டே போகிறது. உதாரணத்திற்கு சொல்லப்போனால் இன்றைய காலகட்டத்தில் ஏசி இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் நாம். நாகரிகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று பணத்தின் பின்னால் ஓடுகிறோம். ஆனால், நாம் நிறையவற்றை இழந்து விட்டோம். இந்த நாகரிகத்தால் நாம் எதை எல்லாம் இழந்து விட்டோம் என்பதை இனி பார்க்கலாம்.
1. நாகரிகம் என்கிற பெயரில் மன அமைதியையும் சந்தோஷத்தையும் இழந்து விட்டோம்.
2. பணம் இருந்தால்தான் நாகரிகமாக இருக்க முடியும் என்று எண்ணி அதன் பின்னாலேயே ஓடி ஆரோக்கியத்தையும் உறக்கத்தையும் நிம்மதியையும் இழந்து விட்டோம்.
3. நம்முடைய பழைமையான பெருமைமிகு கலாசாரத்தை இழந்து விட்டோம்.
4. நாகரிகம் என்கிற பெயரில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை இழந்து விட்டோம்.
5. முன்னோர்கள் கற்றுக்கொடுத்த விலை மதிப்பற்ற ஒழுக்கத்தை இழந்து விட்டோம்.
6. முன்னோர்கள் விட்டுச் சென்ற பந்தம், பாசம், உறவு என்கிற பொக்கிஷங்களை இழந்து விட்டோம்.
7. பொறாமையை வளர்த்துக்கொண்டு தன்னடக்கத்தை இழந்து விட்டோம்.
8. இயற்கையின் அன்பை இழந்து விட்டோம். மாறாக, அதன் சீற்றத்தை அதிகமாகப் பெற்று விட்டோம்.
9. நாகரிகம் என்கிற பெயரில் பொறுமையை இழந்து விட்டோம்.
10. சகிப்புத் தன்மையை முற்றிலும் இழந்து விட்டோம்.
11. பெரியவர்களின் ஆசீர்வாத்தை இழந்து விட்டோம்.
12. நம் உள்ளே இருக்கும் ஆன்மாவை நாகரிகம் என்ற பெயரில் சுக்கு நூறாக்கி விட்டோம்.
13. நாகரிகம் என்ற பெயரில் உண்மையான உணர்ச்சிகளை இழந்து, செயற்கை மனிதனாகி விட்டோம்.
14. மனச்சாட்சியை கொன்று விட்டோம்.
15. நாகரிகத்தை பெருமிதமாக்கிக் கொண்ட நாம் மற்றவர்களை மதிக்கும் குணத்தையும் இரக்கத் தன்மையையும் இழந்து விட்டோம்.
நாகரிகம் என்கிற பெயரால் இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒன்றாகிய மனிதாபிமானத்தை நாம் தொலைத்து விட்டோம். இன்றைய குழந்தைகளுக்கு இயற்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போய் விட்டது. புதிய தலைமுறையில் புதிய நுட்பங்களுடன் நவீன நாகரிகத்தோடு வாழ்வதில் தவறு இல்லை. ஆனால், அவ்வாறு வாழும்போது நம்முடைய கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் மனித நேயத்திற்கும் களங்கம் நேராமல் பார்த்துக் கொள்வது நம் கடமை அல்லவா?
ஆகவே, நாகரிகத்தை பெரிதுபடுத்தி அதன் பின்னே செல்லும் நாம், நமது முன்னோர்கள் வழி நடத்திச்சென்ற பாதையையும் சேர்த்து கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.