
சிலர் வாழும்பொழுதே தனித்துவம் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால், அவரின் கடைசி காலத்தில்தான் அந்தத் தனித்துவத்தின் மகிமை அதிகமாக வெளியில் தெரியவரும். அதுபோல் நடந்த ஒரு சம்பவத்தை இந்தப் பதிவில் காண்போம்.
‘நீ என்னவாக விரும்புகிறாயோ? அதுவாகவே ஆகி விடுவாய்’ என்பார்கள். இன்னும் சிலர் வாழ்த்தும்பொழுதே, ‘எண்ணம் போல் வாழ்க!’ என்று வாழ்த்துவார்கள். இன்னும் சிலர், ‘நான் இப்படியே வாழ வேண்டும். இப்படியே கடைசி காலம் கழிய வேண்டும். இந்த நேரத்தில் என் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்’ என்று கூறுவார்கள். சிலர் சொல்வதும் அப்படியே பலித்து விடும்.
அதுபோல், என் தோழியின் இறுதி மூச்சு அடங்கியதுதான் வியப்பிற்குரிய செய்தியாக நான் காண்கிறேன். எப்பொழுதும் சிரித்த முகத்துடனே எல்லோரையும் வரவேற்பார். எவ்வளவுதான் உடல்நிலை சரியில்லை என்றாலும் வீட்டிற்கு வந்த விருந்தினரை நன்றாக உபசரித்து, உண்ணக் கொடுத்து, தாம்பூலம் கொடுக்காமல் வெளியில் அனுப்ப மாட்டார்கள். அது எந்த நாளாக இருந்தாலும் சரிதான். அதற்கான பரிசுப் பொருட்களை அவர் எப்பொழுதும் தயாராக வைத்திருப்பார். வாசல் வரை வந்து வழியனுப்பும் அழகு இருக்கிறதே அதை மெச்சாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
அதேபோல், ஆடி மாதம் வந்து விட்டால் வரலட்சுமி பூஜை செய்வது, ஆடிப் பூரத்தன்று அம்மன் கோயிலுக்கு சென்று வளையல் வாங்கி சாத்துவது என்று மிகவும் பக்தி பூர்வமான பெண்மணி அவர். அதோடு இல்லாமல் அழகழகான கோலங்களால் எல்லோரையும் ஈர்த்து வைத்திருந்தார். காலையில் எழுந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் அவர் கோலத்தின் மீதுதான் கண்கள்.
காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுபவர்கள் எட்டி நடை போட்டாலும் அவரின் கோலத்தை பார்ப்பதற்காக கிட்ட வந்து எட்டிப் பார்த்து போவார்கள். அவரின் வாசல் அழகு பலரின் செல்லுக்கு விருந்தானது. அதேபோல், பல்வேறு பரிசுகளையும் வாங்கி குவித்த வண்ணம் இருந்தார். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தால் மணலை சலித்து வைத்திருப்பார். ஒரு பக்கத்தில் தவிட்டில் வண்ணக் கலர் பொடிகளை கலந்து வைத்து இருப்பார். உபயோகப்படுத்திய தேங்காய் சக்கைகள், காபித்தூள் என்று காய வைத்து அழகாக டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.
எப்பொழுதும் வீட்டு வேலை முடிந்தவுடன் கோல நோட்டில் புதுப்புது கோலங்களை வரைந்த வண்ணம் இருப்பார். அக்கம் பக்கத்தில் உள்ளவர் அனைவருக்கும் அந்த நோட்டை கொடுத்து உதவி புரிவார். இப்படி நோட்டில் போட்டதை ரோட்டில் போட்டு வாசல் அழகை மேம்படுத்தியவர் அவர்.
ஊருக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் அவர் வீட்டில் இருக்கும் கோலத்தை பார்த்தே அவர் வந்து விட்டார் என்பதை அனைவரும் தெரிந்து கொண்டு நலம் விசாரிக்க வருவார்கள். அவரின் இறுதி ஊர்வலத்தின்போது அனைவரும் சொல்லி அழுதது, ‘உங்கள் கோலத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம்’ என்று பிரியாவிடை கொடுத்தார்கள்.
வேலூர் முள்ளு கத்தரிக்காய் பிரபலம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பிரபலம், ராஜபாளையத்து நாய் பிரபலம், காங்கேயம் மாடு பிரபலம். இதுபோல், மனிதனும் அந்தத் தெருவில் உள்ளவர்களுக்காவது அடையாளம் தெரியும்படி தனது தனித்துவத்தை காட்டி விட்டுச் செல்வதுதான் சிறந்தது என்பதை அந்த சம்பவம் உணர்த்தியது.
இப்படிப்பட்டவர் எப்பொழுதும் சொல்லும் ஒரு வார்த்தை, ‘நான் எப்படி பூவும், பொட்டும், கை குலுங்க வளையலோடு இருக்கிறேனோ அப்படியே ஆடி மாதத்தில் நான் அம்மன் அடி சேர வேண்டும்’ என்று கூறுவார். அதேபோல் ஆடிப்பூரத்தன்று அவரது வாழ்க்கை முடிந்தது. அனைவரும் அவர் எண்ணம் போல் இறுதி வாழ்க்கை அமைந்ததை எண்ணி வியந்தனர். ஆதலால், யார் எதை நினைத்தாலும் நல்லதாக நினைக்க வேண்டும். நம் எண்ணத்திற்கு அதிக வலிமை உண்டு என்பதை இது போன்ற சம்பவங்கள்தான் எடுத்துக்காட்டுகின்றன.