
புதிதாக ஏசி அல்லது ஏர்கூலர் வாங்கும்போது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான தயாரிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
வகைகள் மற்றும் விலை: ஏசியில் விண்டோ ஏசி, ஸ்ப்ளிட் ஏசி, போர்ட்டபிள் ஏசி என்று பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் நம் தேவைக்கேற்ப பொருத்தமான வகையை தேர்ந்தெடுப்பது நல்லது. பல்வேறு பிராண்டுகளின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஏசியை தேர்ந்தெடுக்கவும்.
அறையின் அளவுக்கு ஏற்றவாறு: அறையின் அளவு மற்றும் கொள்ளளவுக்கு ஏற்ப ஏசியின் திறன் இருக்க வேண்டும். சிறிய அறைக்கு அதிக திறன் கொண்ட (ஒன்றரை அல்லது இரண்டு டன்) ஏசி தேவைப்படாது. சிறிய அறைக்கு ஒரு டன், பெரிய அறைகளுக்கு ஏற்ப ஒன்றரை அல்லது இரண்டு டன் ஏசி வாங்குவது தேவையான குளிர்ச்சியைத் தரும். அத்துடன் ஏசியின் மின்சாரப் பயன்பாடு மிகவும் முக்கியமானது. இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்ட ஏசிகள் மின்சாரத்தை சேமிக்க உதவும்.
கூடுதல் அம்சங்கள்: டஸ்ட் பில்டர்கள், அயோனைசர் மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் போன்றவற்றை வாங்கும்பொழுது கருத்தில் கொள்ள வேண்டும். ஏசியின் உத்திரவாதத்தை சரிபார்ப்பதுடன், ஏசிக்களை இயக்கும்பொழுது ஏற்படும் சத்தத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்த சத்தம் எழுப்பும் ஏசிக்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இரவு தூக்கத்தை கெடாமல் பார்த்துக் கொள்ளலாம். சில ஏசிகளில் வைஃபை வசதி உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மூலம் ஏசியை இயக்கலாம் மற்றும் அதன் செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம்.
ஏர் கூலர் வாங்கும்பொழுது கருத்தில் கொள்ள வேண்டியவை:
குளிரூட்டும் திறன்: அறைகளின் அளவிற்கு ஏற்ப குளிர்விக்கும் திறன் கொண்ட கூலர்களை தேர்ந்தெடுப்பது அவசியம். கூலரில் உள்ள கூலிங் பேட்களின் தரம் மற்றும் அளவைப் பொறுத்து குளிரூட்டும் திறன் அமையும். அதிக குளிரூட்டும் திறன் கொண்ட கூலர்கள் பெரிய அறைகளுக்கு ஏற்றது. ஏர் கூலர்கள் பொதுவாக ஏசியை விட குறைவான மின்சாரத்தையே இழுக்கும். அவற்றை வாங்கும்பொழுது நீர் தொட்டியின் கொள்ளளவையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அடிக்கடி நீர் நிரப்புவதைத் தவிர்க்க அதிக நீர் கொள்ளளவு கொண்ட கூலரை தேர்ந்தெடுக்கலாம். அத்துடன் எளிதாக நகர்த்த முடியுமா என்பதையும் கவனிக்க வேண்டும். கூலர் இயங்கும்போது ஏற்படும் சத்தத்தையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
கூலர் வகை: கூலர்களில் பல வகைகள் உள்ளன. போர்ட்டபிள் கூலர்கள், விண்டோ கூலர்கள், டவர் கூலர்கள் என்று பல உள்ளன. அவற்றில் நம் தேவைக்கேற்ப கூலரை தேர்ந்தெடுக்க வேண்டும். கூலரில் உள்ள வடிகட்டியின் தரம் முக்கியமானது. நல்ல வடிகட்டி தூசி மற்றும் அழுக்கை அகற்றி சுத்தமான காற்றை வெளியிடும். அடிக்கடி சுத்தம் செய்வதைத் தவிர்க்க, நல்ல வடிகட்டி கொண்ட கூலரை தேர்ந்தெடுப்பது அவசியம். வாங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பிராண்டுகளின் வாடிக்கையாளர் மதிப்புரைகளையும் படித்து விடுவது நல்லது.
பராமரிப்பு: ஏசி, ஏர் கூலர் எதுவாக இருந்தாலும் சரியான நிறுவலும், பிற்கால பராமரிப்பும் முக்கியம். சர்வீஸ் சென்டர்கள் எங்குள்ளது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏசியில் கசிவுகள் உள்ளதா என்பதை சரி பார்த்து உடனடியாக சரி செய்வதும், வருடத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதும் அதன் செயல் திறனை மேம்படுத்தும். அதிகப்படியான ரசாயனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, லேசான சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வது அதன் ஆயுளை நீட்டிக்கும்.