
காய்கறிகள், பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதில் என்னென்ன சத்து இருக்கிறது? எதைச் சாப்பிட்டால் என்ன நன்மை? எப்படிப் பார்த்து வாங்குவது? எவ்வாறு பயன்படுத்துவது? போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தக்காளியில் நோய் தடுக்கும் வைட்டமின் 'சி' நிறைய உள்ளது. காய், பழங்களின் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறத்துக்குக் காரணம் பீட்டா கரோட்டின் என்ற பொருள். அந்தக் காய், பழம் சாப்பிடும்போது உடல் அதை வைட்டமின் 'ஏ'யாக மாற்றிக் கொள்கிறது. இது கண் பார்வைக்கு நல்லது. தக்காளியை (வேக வைத்து) கொதிக்க வைத்து சாஸ் போன்று பயன்படுத்தும்போது இந்த வைட்டமின் 'ஏ' சத்து அதிகமாகக் கிடைக்கும்.
ஃப்ளம்: இது நீளமாக சின்ன சௌசௌ போல இருக்கும். சதை கெட்டியாகச் சாறு கம்மியாக இருக்கும். லேசில் நசுங்காது, அழுகாது. பெங்களூர் தக்காளி என்று இன்று நாம் அதிகம் பயன்படுத்துவது இதைத்தான். இது ஜாம் செய்ய உகந்தது. ஜாம் செய்யும்போது தேன் கலந்தும் செய்யலாம். சத்தானது. இரத்த விருத்தி உண்டாக்கும்.
நாட்டுத் தக்காளி: இதன் தோல் மெல்லியதாக இருக்கும். இதில் சாறு அதிகம் இருக்கும். சீக்கிரம் அழுகி விடும். சாலட், சாண்ட்விச், பர்கர் செய்தால் சுவை கூடும். சாஸ், கெட் சப் செய்ய நல்லது. விலை குறைவுதான்.
உலர் தக்காளி: வெளிநாட்டினர் அதிகமாகப் பயன்படுத்துவது. இதைத் துண்டு துண்டாக்கி வெயிலில் காய வைத்துப் பதப்படுத்துவார்கள். நாள்பட வைத்திருந்தாலும் கெடாமல் இருக்கும். பதப்படுத்திய தக்காளியை வெந்நீரில் ஊற வைத்துச் சமையலுக்கு உபயோகிப்பார்கள். பதப்படுத்தும் பதார்த்தங்கள், சமையல் செய்ய எளிதானதுதான். இதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. சத்தும் குறைவு. உடலுக்கும் கெடுதல். அதனால் வைரஸ் நோய் வருகிறது. இன்னும் பல வியாதிகள் வந்து ஆளைக் கொல்லும். அதனால் மக்கள் அனைவரும் பதப்படுத்திய உணவைப் பெருமளவில் தவிர்த்து ஃப்ரெஷ்ஷான காய், பழங்களையே பயன்படுத்த வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்ததை வாங்கக் கூடாது. ஒரு முறை ஜில்லென்று ஆகி விட்டால் மறுபடி பழுக்காது.
தக்காளியை உருண்டையானதை எடுங்கள். தோல் மீது வெடிப்பு, ஓட்டை இருக்கக் கூடாது. அது ஆரோக்கியமானது அல்ல. காம்பில் சிறு வெடிப்பு இருந்தால் பரவாயில்லை. அழுகல் இருக்கக் கூடாது. அதிகம் அழுந்தும் பழங்கள் ஒரு நாள் கூட தாங்காது. வெட்டவும் முடியாது. தக்காளியில் உள்ள சாறும் வீணாகி விடும். கொஞ்சம் பச்சையாக வாங்கிக் கூடையில் வைத்துப் பழுக்க வைக்கலாம். பழுக்கும் முன் ஃப்ரிஜ்ஜில் வைக்க வேண்டாம்.
பாதுகாக்கும் முறை: ஃப்ரிஜ் வேண்டாம். காற்றோட்டமான கூடையில் வைக்கலாம். காம்புகள் மேல்நோக்கியபடி வைத்தால் அடிபடாது. சீக்கிரம் பழுக்க வேண்டுமா? ஒரு காகிதப் பையில் வாழைப்பழம் அல்லது ஆப்பிளுடன் சேர்த்து சற்று நெருக்கமாக வைத்தால் அதில் வரும் எத்திலின் வாயுவினால் இது சீக்கிரம் பழுத்து விடும். வெயில் படும் இடங்களில் வைக்காதீர்கள். பழுத்தவுடன் உடனே பயன்படுத்தாவிட்டால், ஃப்ரிஜ்ஜில் வெண்ணெய் வைக்கும் இடத்தில் வைக்கவும். அந்த இடத்தில் ஜில்லிப்பு குறைவு. மீண்டும் வெளியில் எடுத்து அரை வெப்பத்தில் வைத்துச் சமைத்தால் மணம் மாறாது.
உபயோகிக்கும் முறை: தக்காளியை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். குறுக்காக வெட்டக் கூடாது. சாறு கொட்டி விடும். காம்பை மேல் புறம் வைத்து மேலிருந்து கீழாக மெலிதாகத் துண்டுகள் போட வேண்டும். சாண்ட்விச், சாலட் செய்வதில் கடைசியாக இதைச் சேருங்கள். ஜூஸ் மற்றும் விதைகளை வெளியே எடுக்க குறுக்குவாக்கில் இரு துண்டுகளாக நறுக்க வேண்டும். அதனைத் தலைகீழாகப் பிடித்து அமுக்கினால், சாறு எல்லாம் கொட்டி விடும். வெறும் சதை மட்டும்தான் கிடைக்கும்.