

நம் அனைவர் வீடுகளிலும் தினசரி தவிர்க்க முடியாத பணிகளுள் ஒன்று பாத்திரம் கழுவுவது. அவரவர்களே தாங்கள் உபயோகிக்கும் வீட்டுப் பாத்திரங்களை கழுவும்போது நிதானமாக சுத்தமாக கழுவி வைப்போம். ஆனால் தற்போது பணி காரணமாக பெரும்பாலும் பணியாளர்கள்தான் சமையல் முதல் வீட்டு வேலைகள் வரை செய்யும் சூழல் உள்ளது. அவர்கள் நேரம் கருதி பாத்திரங்களில் உள்ள சோப்பு கூட முழுமையாக நீங்காத வண்ணம் அவசரமாக கழுவுவார்கள்.
ஆனால் பாத்திரம் கழுவும் சோப்பு (Dishwashing liquid/bar) சரியாகப் பயன்படுத்தப்படாவிட்டால் சில உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தெரியுமா உங்களுக்கு?
பாதிப்புகள்
தொடர்ந்து பயன்படுத்தினால் கைகளில் வறட்சி, அரிப்பு, சிவப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். சோப்பு கண்களில்பட்டால் எரிச்சல், நீர்வடிதல் ஏற்படலாம். சிறிய அளவு தவறுதலாக விழுங்கினால் குமட்டல், வாந்தி, வயிற்று அசௌகரியம் ஏற்படலாம்.
அதிக அளவு சென்றால் ஆபத்து அதிகம். குறிப்பாக பாத்திரத்தை நன்றாக தண்ணீரில் கழுவாமல் விட்டால் மீதம் உள்ள சோப்பு எச்சம் உணவுடன் உடலுக்குள் செல்லலாம். வாசனையை அதிகமாக சுவாசிக்கும்போது சிலருக்கு மூக்கு, தொண்டை எரிச்சல் அல்லது தலைவலி போன்றவை ஏற்படலாம். ப்ளீச் போன்ற வீட்டு சுத்திகரிப்பு ரசாயனங்களுடன் கலப்பது ஆபத்தான வாயுக்களை உருவாக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
தேவையான அளவு மட்டும் பயன்படுத்துங்கள். பாத்திரங்களை ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவுங்கள். கைகளில் எரிச்சல் ஏற்பட்டால் ரப்பர் கையுறை பயன்படுத்தலாம். முக்கியமாக சோப்பை குழந்தைகள் எட்டாத இடத்தில் வைக்கவும்.
சோப்பை வேறு பாட்டிலில் ஊற்றி வைப்பது குறிப்பாக தண்ணீர் பாட்டில் போன்ற உணவுப் பாத்திரங்களில், சேமிப்பது மிகவும் தவறு. குழந்தைகள் எதிர்பாராமல் லிக்விட் அல்லது சோப்புத் தண்ணீரை குடித்துவிட்டால் சிரமப்பட்டு வாந்தி வரவழைக்க வேண்டாம். வாயை தண்ணீரால் கழுவி, தயாரிப்பின் லேபிளைப் பார்த்து உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.
கைகளில் அடிக்கடி வறட்சி, அரிப்பு, சிவப்பு அல்லது வெடிப்பு ஏற்பட்டால், கையுறைகளைப் பயன் படுத்துவதும், அந்த சோப்பைத் தவிர்த்து வேறு மிதமான சோப்பை பயன்படுத்துவதும் உதவலாம். கண்களில் பட்டால் கண்களைக் கசக்காமல் உடனடியாக நிறைய தண்ணீரால் கழுவவேண்டும்.
பொதுவாக இருக்கும் ரசாயனங்கள்
பயன்பாடு இவைதான், மேற்பரப்புச் செயல்மிகு பொருட்களாக செயல்படும் SLES, SLS போன்றவை எண்ணெய், அழுக்கை நீக்கவும்,
CAPB கோகாமிடோப்ரோபைல் பீடைன் (Cocamidopropyl Betaine) நுரை மற்றும் சுத்தத்துக்காகவும்,
சோடியம் சிட்ரேட்/சிட்ரேட்டுகள் (Sodium citrate / Citrates) நீரின் கடினத்தன்மையை கட்டுப்படுத்தவும்,
Sodium chloride (உப்பு) திரவத்தின் தடிமனை அதிகரிக்கவும், Citric acid pH-ஐ கட்டுப்படுத்தவும்,
பாதுகாப்புப் பொருட்களான சோடியம் பென்சோயேட், ஃபீனாக்சி எத்தனால் (Sodium benzoate, Phenoxyethanol ) போன்றவை பாக்டீரியா, பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கவும்,
நறுமணம் வாசனைக்காக மற்றும் நிறத்திற்காகவும், சில தயாரிப்புகளில் உணவுக் கறைகளை நீக்க Enzymes களும் பயன்படுத்தப்படுகிறது.
பாத்திரம் கழுவும் சோப்பில் உள்ள ரசாயனங்களின் ஆபத்து அவற்றின் செறிவு மற்றும் தனிநபரின் தோல் உணர்திறனைப் பொறுத்தது. லேபிளில் கீழ்க்கண்ட பெயர்கள் இருந்தால், குறிப்பாக உணர்திறன் கொண்டவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
Sodium Lauryl Sulfate (SLS) இதன் அதிக சுத்திகரிப்பு சக்தி; சிலருக்கு தோல் வறட்சி, எரிச்சல் ஏற்படுத்தலாம்.
Sodium Laureth Sulfate (SLES) – SLS-ஐவிட பொதுவாக மென்மையானது; இருந்தாலும் சிலருக்கு தோல்/கண் எரிச்சல் ஏற்படலாம்.
Cocamidopropyl Betaine (CAPB) – பொதுவாக மென்மையானது; சிலருக்கு contact allergy அல்லது அரிப்பு ஏற்படுத்தக்கூடும்.
Fragrance / Parfum – வாசனைக்காக சேர்க்கப்படும் கலவை; உணர்திறன் உள்ளவர்களுக்கு அரிப்பு, சிவப்பு அல்லது தோல் எரிச்சல் ஏற்படுத்தலாம் என குறிப்பிடப்படுகிறது.
ஆனால் பாத்திரம் கழுவும் சோப்பு/லிக்விடில் ஒரே ஒரு “கெமிக்கல்” மட்டும் இருப்பதில்லை. பிராண்டைப் பொறுத்து கலவை மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது . SLS/SLES போன்ற மேற்பரப்புச் செயல்மிகு பொருட்கள் (surfactants) அதிக செறிவில் சருமம் மற்றும் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
ஆனால், பாத்திரம் கழுவும் தயாரிப்பில் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்பட்டு, பாத்திரங்கள் நன்றாகக் கழுவப்பட்டால் வெளிப்பாடு பொதுவாக குறைவாக இருக்கும்.
பெரும் பணக்காரர்கள் வீடுகளில் கழுவி வைத்த பாத்திரங்களையே நல்ல தூய்மையான காட்டன் துணி கொண்டு மடித்து வைப்பதை பார்த்திருப்போம் அதேபோல் விழாக்கள் உணவகங்களிலும் இது நடைபெறுவது உண்டு. நமது தாத்தா பாட்டி காலங்களில் பாத்திரங்களை நன்கு துலக்கி வெயிலில் நன்கு உலர்த்தி பின் எடுத்து வைப்போம். ஆனால் இப்போது அப்படி செய்ய முடியாது என்பதால் ஓடும் நீரில் நன்றாக கழுவி விட்டு துடைத்து பயன்படுத்துவது நல்லது.