

தீபாவளி வந்துவிட்டாலே குழந்தைகள் பெண்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குஷிதான். பெரியவர்கள் வீட்டில் என்ன இனிப்பு புதுசா செய்யலாம் என யோசிக்க, பெண்கள் புதிய ஃபேஷன் ஆடைகளில் கவனம் செலுத்த, ஆண்களின் கவனமோ பட்ஜெட்டில் இருக்கும்.
டிவி விளம்பரங்களில் இந்த ஒரு மாசம் பிரபல துணி, நகை வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திலும் தள்ளுபடி என வண்ண வண்ண விளம்பரங்கள் மனதைக் கவரும் வகையில் வந்து கொண்டே இருக்கும். கடைகளில் மட்டுமல்லாமல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் 30%, 50%, 70% எனப் பல்வேறு தள்ளுபடி அறிவிப்புகளைப் பார்க்கிறோம்.
ஆனால், உண்மையிலேயே விலை குறைக்கப்பட்டுள்ளதா? அல்லது பழைய விலையை அதிகமாகக் காட்டிவிட்டு, தள்ளுபடி வழங்குவதாகக் கூறுகிறார்களா என்று யோசித்திருக்கிறோமா? இருக்கும் ஸ்டாக்குகளை பண்டிகை கால தள்ளுபடியாகத் தருகிறார்கள். அதில் என்ன தவறு என்ற எண்ணமே இங்கு பெரும்பாலும் எனலாம்.
ஆனால் தள்ளுபடி என்றாலே லாபம் என்று நினைக்க வேண்டாம். அதிலும் நமக்குத் தெரியாத ஏமாற்று வழிகள் இருக்கும். விலையை ஏற்றிக் குறைத்துக் காட்டுவதை அறிந்து உண்மையான சலுகையைக் கண்டறிய என்ன செய்வது? கவலையை விடுங்கள்.. உங்களுக்காகவே இருக்கு இந்த 5 வழிகள்.
1. அவசரப்படுத்தும் விளம்பரங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஆம் உளவியல் ரீதியாக நாம் அடிக்கடி காணும், “இன்றே கடைசி நாள்”, “இன்னும் 2 பொருட்கள்தான் உள்ளன”, “இந்த விலை மீண்டும் கிடைக்காது” போன்ற அறிவிப்புகள் உடனடியாக வாங்கத் தூண்டலாம்.
ஆனால், இத்தகைய அறிவிப்புகள் மட்டுமே அந்தச் சலுகை உண்மையானது என்பதற்கான ஆதாரம் அல்ல என்பதை அறிந்து பொருளின் விலையைச் சரிபார்க்காமல் வாங்காதீர்கள்.
விற்பனையாளரின் நம்பகத்தன்மையைப் பாருங்கள். மேலும் பொருளைத் திருப்பிக் கொடுக்கும் விதிமுறைகளையும் உத்தரவாதத்தையும் படியுங்கள்.
தேவையில்லாத பொருளைத் தள்ளுபடிக்காக மட்டும் வாங்காதீர்கள்.
குறிப்பாக, தெரியாத இணையதளங்களில் மிகக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாகக் கூறினால், பணம் செலுத்துவதற்கு முன்பு கூடுதல் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
2. பழைய விலையையும் தற்போதைய விலையையும் ஒப்பிடுவது நல்லது.
உதாரணமாக நீங்கள் வாங்க விரும்பும் ஒரு பொருளின் பழைய விலை ₹2,000 என்றும், தீபாவளி சலுகை விலை ₹1,200 என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது என வைத்துக்கொள்வோம். விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட பழைய விலை: ₹2,000
தற்போதைய விலை: ₹1,200 என்றால், காட்டப்படும் தள்ளுபடி 40% ஆகும். ஆனால், அந்தப் பொருள் சில நாட்களுக்கு முன்பு ₹1,250-க்கு விற்கப்பட்டிருந்தால், உண்மையான விலை குறைப்பு வெறும் ₹50 மட்டுமே என்பது தெரியுமா?
சரி இதை எப்படிக் கண்டறிவது?
அதே பொருளின் விலையை வெவ்வேறு கடைகளில் ஒப்பிடுங்கள்.
ஆன்லைனில் விலை வரலாற்றைக் காட்டும் தளங்களைப் பயன்படுத்துங்கள்.
பழைய விலை உண்மையில் எவ்வளவு காலம் நடைமுறையில் இருந்தது என்பதைக் கவனித்தபின் தள்ளுபடி உண்மை எனத் தெரிந்தால் வாங்குங்கள். இல்லையெனில் பொறுத்து விழாக்காலம் முடிந்து பழைய விலைக்கே வாங்கலாம்.
3. தள்ளுபடி சதவீதத்தை மட்டும் நம்புவது நமது அறியாமை. 70% தள்ளுபடி என்றால் உடனே வாங்கிவிட வேண்டாம்.
உதாரணமாக முதல் கடையில் ஒரு சட்டையின் விலை ₹2,000; தள்ளுபடிக்குப் பிறகு ₹1,000 என்றும் வேறு கடையில் அதே தரத்திலான சட்டையின் விலை ₹900 மட்டுமே என்று தெரிந்தால் 50% தள்ளுபடி கொடுக்கும் முதல் கடையைவிட, தள்ளுபடி இல்லாமல் ₹900-க்கு விற்கும் கடை தான் மலிவானதாக இருக்கலாம்.
தள்ளுபடி சதவீதத்தைவிட, நீங்கள் இறுதியாகச் செலுத்தும் தொகையே முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் பணம் உங்களுடையது.
4. பார்த்தவுடன் நம்பி ஒரே கடையில் வாங்காமல் நீங்கள் வாங்கும் பொருளின் விலையை பல தளங்களில் சரிபாருங்கள்.
மொபைல், தொலைக்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்கும்போது இந்த வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உதாரணமாக பிராண்டட் தொலைக்காட்சிக்கு ஒரு தளம் ₹30,000 என்றும் மற்றொரு தளம் ₹27,500 என்றும் விலை நிர்ணயித்திருக்கலாம் என்பதால் வாங்குவதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று ஆன்லைன் தளங்களில் விலையைப் பாருங்கள்.
அதே மாடல் எண் மற்றும் தயாரிப்பின் விவரங்களை ஒப்பிடுங்கள். அருகிலுள்ள கடையிலும் விலையைக் கேட்டுப் பாருங்கள். டெலிவரி கட்டணம், நிறுவுதல் கட்டணம் போன்றவற்றையும் கணக்கிடுங்கள். ஒரே பிராண்டின் பொருளாக இருந்தாலும், மாடல் எண் அல்லது அம்சங்கள் மாறினால் விலையும் மாறலாம் என்பதையும் கவனியுங்கள்.
5. வங்கி சலுகைகளையும் மறைமுகக் கட்டணங்களையும் யாரும் இங்கு கவனிப்பதில்லை என்பது கடைக்காரர்கள் பலம்.
சில விளம்பரங்களில், “₹10,000 உடனடி தள்ளுபடி” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அந்தச் சலுகை குறிப்பிட்ட வங்கியின் அட்டையைப் பயன்படுத்தினால் மட்டுமே என்ற நிபந்தனை இருக்கும். ஆகவே ஒரு பொருளை உடனடி தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு முன்பு குறிப்பிட்ட வங்கி அட்டை கட்டாயமா? குறைந்தபட்சமாக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?
EMI சலுகைக்கு கூடுதல் கட்டணம் உள்ளதா? செயலாக்கக் கட்டணம் அல்லது டெலிவரி கட்டணம் உள்ளதா?
பழைய பொருளை மாற்றிக் கொடுத்தால் மட்டுமே கூடுதல் தள்ளுபடி கிடைக்குமா? என்பதையெல்லாம் கவனியுங்கள். மேலும் விளம்பரத்தில் உள்ள தள்ளுபடியையும், எல்லாக் கட்டணங்களையும் சேர்த்த பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய இறுதித் தொகையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
தீபாவளி ஷாப்பிங்: வாங்குவதற்கு முன் கீழேயுள்ள விதிகளை ஒருமுறை நினைவில் கொள்ளுங்கள்.
அந்தப் பொருளின் பழைய உண்மையான விலை வரலாறு, பல கடைகளில் ஒப்பிட்டு தற்போதைய விலை , தள்ளுபடி சதவீதத்தை மட்டும் நம்பாமல் கூடுதல் கட்டணம் இறுதியாகச் செலுத்த வேண்டிய தொகையைக் கணக்கிடுவது, திருப்பித் தரும் விதிமுறைகளான Return policy மற்றும் warranty-ஐப் படித்து அறிவது.
இவற்றுடன் மறைக்கப்பட்ட கட்டணங்கள் இருப்பது மிக முக்கியமான விஷயம்.
ஒரு பொருளின் விலை ₹999 என்று விளம்பரம் செய்யப்படலாம். ஆனால், வாங்கும் இறுதிக் கட்டத்தில் டெலிவரி, பேக்கிங் அல்லது பிற கட்டணங்கள் சேர்க்கப்படலாம். இதனால் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கலாம் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
இத்தகைய கவனிப்புகளை மீறி தள்ளுபடி என தரமற்ற கூடுதல் விலையில் பொருள் வாங்கி ஏமாந்து விட்டீர்கள் எனில் கவலை வேண்டாம். நுகர்வோர் உரிமைகள் தொடர்பான புகார்களுக்கு இந்திய தேசிய நுகர்வோர் உதவி எண் 1915-ஐத் தொடர்பு கொள்ளலாம். புகார்களைப் பதிவு செய்வதற்கும் வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான consumerhelpline.gov.in பயன்படுத்தலாம்.
இறுதியாக தள்ளுபடியில் வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல என்பதையும் உண்மையான தேவைக்காகச் சரியான விலையில் வாங்குவதே உண்மையான சேமிப்பு மற்றும் புத்திசாலித்தனம் என்பதையும் தெரிந்து கொண்டால் எந்தத் தள்ளுபடி கவர்ச்சியும் நம்மிடம் செல்லுபடியாகாது. தீபாவளி ஷாப்பிங்கும் இனிமையாகும்.
வாசகர்கள் விளம்பர மாயைகளில் சிக்காமல் புத்திசாலித்தனமாகப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து உண்மையான சேமிப்புடன் ஷாப்பிங் செய்யும் வழியைப் பெறுவர்.