பெரிய செலவை வைக்கும் வீடு! தப்பிப்பது எப்படி? மாதாந்திர பராமரிப்பு டிப்ஸ்!

ஆண்டுதோறும் வீட்டின் மதிப்பில் 2 முதல் 4% பராமரிப்பிற்கு ஒதுக்குவது பெரிய பழுதுகளைத் தடுக்கும்.
வீட்டு பராமரிப்பு
வீட்டு பராமரிப்புGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணம் பண்ணிப்பார்! என்பார்கள். வீட்டை ஒரு முறை கட்டிவிடலாம். ஆனால் அதை நல்ல முறையில் பராமரிப்பது என்பது மிகவும் கடினம். உரிய முறையில் வீட்டை பராமரித்தால் தான் எப்பொழுதும் புதுப்பொலிவுடன் இருக்கும். வீட்டை பராமரிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு மாதந்தோறும் ஒரு நாளை ஒதுக்கி வீடு முழுவதும் ஒட்டடை அடிப்பதும், சின்ன சின்ன மராமத்து வேலைகளைப் பார்ப்பதும் எனத் தொடர்ந்து கண்காணித்து வந்தால்தான் வீடு பெரிய செலவை வைக்காது.

வீட்டு பராமரிப்பை முற்றிலும் புறக்கணிப்பது எதிர்காலத்தில் அதிக செலவுள்ள பழுதுபார்ப்புகளுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்ப்பதற்கு ஒவ்வொரு மாதமும் சில அடிப்படை வீட்டு பராமரிப்புப் பணிகளை செய்ய நேரம் ஒதுக்குவது வீட்டை நல்ல நிலையில் மெயின்டெயின் பண்ண உதவியாக இருக்கும். நம் வீட்டின் மதிப்பில் 2 முதல் 4% வரை ஆண்டுதோறும் பராமரிப்புக்காக ஒதுக்குவது சிறப்பு.

வீட்டை சுத்தமாகவும் பழுதுகளின்றி நீண்ட காலம் உழைக்கவும் வைக்க மாதாந்திர மற்றும் பருவகால வீட்டு பராமரிப்பு அட்டவணை மிகவும் அவசியமாகும். நம் நாட்டின் வானிலைக்கு ஏற்ப (கோடை, மழை மற்றும் குளிர் கலங்கள்) எந்தெந்த மாதங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும்.

1. அனைத்து மாதங்களும் செய்ய வேண்டியவை (Monthly Routine):

சில அடிப்படை விஷயங்களை ஒவ்வொரு மாதமும் தவறாமல் சரி பார்க்க வேண்டும். 

புகை அலாரங்கள் (Smoke Alarms) மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் சரியாக வேலை செய்கிறதா என்று சோதிக்க வேண்டியது அவசியம்.

சமையலறை மற்றும் குளியலறை சிங்க் வடிகால்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க சுடுதண்ணீர் அல்லது பேக்கிங் சோடா ஊற்றி சுத்தம் செய்வது.

பிரிட்ஜ், மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மிக்ஸி போன்ற சமையலறை உபகரணங்கள் உள்ளேயும் வெளியேயும் துடைத்து சுத்தமாக பராமரிப்பது.

ஏசி ஃபில்டர்களை சரிபார்த்து தூசி தட்டி சுத்தம் செய்ய வேண்டும்.

2. கோடை காலத்தில் (மார்ச் முதல் ஜூன் வரை) செய்ய வேண்டியவை: 

வெப்பம் அதிகமாக இருக்கும் இந்த மாதங்களில் ஏசி மற்றும் தண்ணீர் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சமையலறை மற்றும் பாத்ரூமில் இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன்களில் படிந்துள்ள எண்ணெய் மற்றும் தூசிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

மார்ச் & ஏப்ரல்: 

கோடை வெயில் தொடங்கும் முன்பு ஏசி ஃபில்டர்களை சுத்தம் செய்வது அல்லது டெக்னீஷியனை அழைத்து சர்வீஸ் செய்வது அவசியமான ஒன்றாகும். 

கோடையில் எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகும் என்பதால் வீட்டைச் சுற்றி பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பூச்சி கட்டுப்பாடு செயல்களில் ஈடுபட வேண்டும். 

மே & ஜூன்: 

குடிநீர் மற்றும் மேல்நிலை தண்ணீர் தொட்டிகளை (water tank) காலி செய்து கிருமி நாசினி கொண்டு ஆழமாக சுத்தம் செய்வது. 

மரக் கதவுகள், ஜன்னல்களுக்குத் தேவைப்பட்டால் பாலிஷ் போடுவது மற்றும் மெத்தைகளை வெயிலில் காய வைப்பது போன்ற அத்தியாவசிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

3. மழைக்காலம் (ஜூலை முதல் அக்டோபர் வரை): 

மழைநீர் கசிவு மற்றும் ஈரப்பதத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு இந்த மாதங்களில் அதிக கவனம் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்:
வீட்ல ஊதுபத்தி ஏத்துற பழக்கம் இருக்கா? அப்போ இத மொதல்ல படிங்க!
வீட்டு பராமரிப்பு

ஜூலை & ஆகஸ்ட்: 

கூரை மற்றும் மொட்டை மாடி (Roof Inspection):

மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் குழாய்களை சுத்தம் செய்வது, விரிசல்கள் இருந்தால் வாட்டர் புரூஃபிங்(Waterproofing) செய்வது. 

சுவர்களில் ஈரம் கசிந்து ஷார்ட் சர்க்யூட் ஏற்படாமல் இருப்பதற்கு ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் மின் கம்பிகளை சோதிப்பது போன்றவற்றை மேற்பார்வை செய்யலாம். 

செப்டம்பர் & அக்டோபர்: 

ஈரப்பதத்தால் குளியலறை மற்றும் சுவர்களில் பூஞ்சைக் காளான் பிடிக்கலாம். காற்றோட்டத்தை அதிகரித்து பூஞ்சைக் காளான் நீக்கிகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். 

வீட்டைச் சுற்றி புற்கள் மற்றும் செடிகள் மழை காரணமாக அதிகமாக வளர்ந்திருக்கும். எனவே கொசுக்கள் வராமல் இருப்பதற்காக அவற்றை வெட்டி சீரமைக்க வேண்டும்.

4. குளிர்காலம் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை): 

இந்த மாதங்கள் வீட்டின் உட்புறங்களை ஆழமாக சுத்தம் செய்வதற்கும், அடுத்த ஆண்டிற்கான திட்டமிடலுக்கும் ஏற்றவை. 

வீட்டு பராமரிப்பு
வீட்டு பராமரிப்புGemini image

நவம்பர் & டிசம்பர்: 

பண்டிகைக் காலம் முடிந்து வீட்டின் மூலை முடுக்குகள், ஒட்டடைகள் மற்றும் உயரமான அலமாரிகளை தூசி தட்டி சுத்தம் (deep cleaning) செய்யலாம். 

குளிர்காற்று உள்ளே வராமல் இருப்பதற்கு ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளின் இடுக்குகளை சரி செய்வது அவசியம். 

இதையும் படியுங்கள்:
அடுப்பு பக்கத்துல இந்த அழுக்கு இருக்கா? பூச்சி தொல்லை முதல் தீ அபாயம் வரை எச்சரிக்கை!
வீட்டு பராமரிப்பு

ஜனவரி & பிப்ரவரி: 

கம்பளங்கள் (Rugs), திரைச்சீலைகள் (Curtains) மற்றும் சோபா உறைகளை துவைத்து சுத்தம் செய்யலாம். 

வரவிருக்கும் கோடையில் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கவோ அல்லது பெரிய பழுதுகளைப் பார்க்கவோ திட்டமிட்டிருந்தால் அதற்கான பட்ஜெட் மற்றும் ஆட்களை இந்த மாதங்களில் முடிவு செய்யலாம்.

இப்படி ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டியவை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டியவை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவ கால பராமரிப்பு மற்றும் வருடத்திற்கு ஒரு முறை என சரியாக வீட்டை பராமரித்து வர வீடு புதுப் பொலிவுடன் இருக்கும்.

மாதம்தோறும் நாம் செய்யும் சின்ன சின்ன பராமரிப்புப் பணிகள், எதிர்காலத்தில் வரவிருக்கும் பெரிய நிதிச் சுமையிலிருந்து வீட்டையும் நம் பணத்தையும் எவ்வாறு பாதுகாக்கும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com