
பாரம்பரியமாக வாரத்திற்கு இரண்டு நாட்கள் எனக் கடைபிடிக்கப்பட்டு வந்த எண்ணெய் குளியல் காலப்போக்கில் வழக்கொழிந்த விஷயங்களில் ஒன்றாகிப் போனது. எண்ணெய் குளியல் நவீன வடிவம் எடுத்து பியூட்டி பார்லர்களிலும், சலூன்களிலும் 'ஹாட் ஆயில் மசாஜ்' என்ற பெயரில் ரொம்பவும் காஸ்ட்லியான விஷயமாகி உள்ளது. நம்முடைய பூமி வெப்ப மண்டலம் சார்ந்தது. உடலில் அதிக வெப்பம் சேர்வதைத் தணிப்பதற்கு எண்ணெய் குளியல் என்பது அவசியமாகிறது.
1. கங்கா ஸ்நானம்: தீபாவளி தினத்தன்று அதிகாலை 4 முதல் 5.30 மணிக்குள் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது உகந்தது. நல்லெண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்வதால், நல்லெண்ணெய் குளியலுக்கு சிறந்தது. இது தெய்வங்களின் ஆசியைப் பெற்று வாழ்வின் அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும்.
2. எண்ணெய் குளியல் எதற்காக: ஆயுர்வேதத்தின்படி வயது, பாலினத்தை பொருட்படுத்தாமல் வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என அனைவரும் எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும் என்று கூறுகிறது. எண்ணெய் தேய்த்து பின்னர் வெந்நீரில் குளிப்பதன் மூலம் உடலில் உள்ள வாத, பித்த, கப தோஷங்கள் சரியான அளவில் சமன் செய்யப்படுகின்றது. உடலில் நிண நீரோட்டம் சீரடைகிறது. இந்த நிண நீரோட்டம்தான் உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடலில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதனால் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை இந்த எண்ணெய் மசாஜும், அதற்கடுத்து எடுத்துக்கொள்ளும் குளியலும் தூண்டி விடுகின்றன.
3. எப்படி எடுக்க வேண்டும்: தலை முதல் கால் வரை எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வேண்டும். முதலில் தலையில் சிறிது சிறிதாகத் தடவி தேய்த்து, பிறகு முகம், கண்கள், மூக்கு, அக்குள், தொப்புள், இடுப்பு என ஒவ்வொரு பகுதியாக எண்ணெய் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பதே சிறந்தது. சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தீபாவளி அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்பாக குளிக்க வேண்டும். மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு பிறகு மூன்று மணி நேரத்திற்குள் எண்ணெய் தேய்த்து குளிப்பதே பொருத்தமான நேரமாகும். சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தி குளிக்கலாம்.
4. எண்ணெய் குளியலின்பொழுது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்: எண்ணெய் குளியல் செய்த நாளில் குளிர்ந்த உணவுகளைத் தவிர்த்து எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பகல் தூக்கத்தைத் தவிர்க்கவும் வேண்டும். எண்ணெய் குளியல் செய்கின்ற நாட்களில் கண்டிப்பாக அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காரணம், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும். அப்பொழுது அசைவ உணவை எடுத்துக்கொள்ளும்பொழுது செரிமானத்தை தாமதப்படுத்தி ஆரோக்கியக் கோளாறுகளை உண்டாக்கும்.
5. எண்ணெய் குளியலின் நன்மைகள்: மனம் மற்றும் உடல் அழுத்தத்தை குறைக்கும். நிறம் மற்றும் சரும அமைப்பை மேம்படுத்தும். சருமத்தை ஈரப்பதமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் முடி வளர்ச்சிக்கும் உதவும். கண் பார்வையை கூர்மைப்படுத்துவதற்கும், நரம்புகளுக்கும் நல்லது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது பதற்றமான தசைகளை அமைதிப்படுத்தி நல்ல உறக்கத்தை வழங்குகிறது. ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு வயிற்றுக் கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த சிகிச்சையாக உள்ளது.