தீபாவளி பலகாரம்: விபத்தில்லாமல் சுவையான பலகாரங்களைச் செய்து அசத்துவது எப்படி?

சமையலறையில் இருக்கவேண்டிய அவசியமான பாதுகாப்பு முறைகள்!
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Safety,
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Safety,
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்ற பெயரில் எழுதும் எஸ்.விஜயலட்சுமி, கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன், குங்குமம் தோழி இதழ்களில் 40 சிறுகதைகள், 55 ஒரு பக்கக் கதைகள், 17 நூல் விமர்சனங்கள் எழுதியவர். போட்டிகளில் பல பரிசுகள் வென்றவர். கல்கி ஆன்லைனில் வாழ்வியல், ஆரோக்கியம், உளவியல் கட்டுரைகளை எழுதுகிறார்.

Updated on: 

தீபாவளி என்றாலே வீடெங்கும் அதிரசம், முறுக்கு, லட்டு, குலோப்ஜாமூன் மணம் கமகமக்கும். தீபாவளி பலகாரம் செய்வது மகிழ்ச்சியான அனுபவம்தான் என்றாலும், எண்ணெய், அடுப்பு, சூடு என்று சில ஆபத்துகளும் கூடவே இருக்கின்றன. சற்றுக் கவனமாக இருந்தால் சுவையும் கூடும், பாதுகாப்பும் உறுதியாகும்.

அடுப்பு / எண்ணெய்:

பலகாரம் பொரிக்கும்போது எண்ணெய் தெறித்துக் கொப்புளம் ஏற்படுவது சகஜம். அகலமான, அடி கனமான கடாயைப் பயன்படுத்த வேண்டும். கடாயில் முக்கால் பங்குக்கு மேல் எண்ணெய் ஊற்றக்கூடாது. ஈரமான மாவையோ பலகாரத்தையோ எண்ணெயில் போடும்போது தெறிக்கும் என்பதால், மெதுவாகக் கடாயின் ஓரத்தில் சரித்துவிட வேண்டும். எண்ணெய் புகைய ஆரம்பித்தால் உடனே தீயைக் குறைக்க வேண்டும். ஒருவேளை தீப்பிடித்தால் தண்ணீர் ஊற்றாமல், மூடியால் கடாயை மூடிவிட வேண்டும்.

பலகாரம் செய்யப் பாதுகாப்பான உடை:

பலகாரம் செய்யும்போது தொளதொளப்பான உடைகளையும், நைலான், பாலியெஸ்டர் புடவைகளையும் தவிர்ப்பது நல்லது. அவை எளிதில் தீப்பற்றக்கூடியவை. புடவைத் தலைப்பை இடுப்பில் செருகிக்கொள்ளலாம்.

சூடான பாத்திரங்களைத் தூக்க ஈரமில்லாத, தடிமனான கையுறை அல்லது பிடித் துணியைப் பயன்படுத்த வேண்டும். வழுக்காமல் இருக்கச் சமையலறைத் தரையில் எண்ணெய், தண்ணீர் சிந்தினால் உடனே துடைத்துவிட வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு:

பலகாரம் செய்யும் மணம் குழந்தைகளை அடுப்புப் பக்கம் இழுத்துவிடும். பொரிக்கும் நேரத்தில் அவர்களைச் சமையலறைக்குள் விடாமல் இருப்பது நலம். மாவு பிசைவது, உருண்டை பிடிப்பது போன்ற பாதுகாப்பான வேலைகளை மட்டும் அவர்களுக்குக் கொடுக்கலாம். சூடான பாகு, எண்ணெய் பாத்திரங்களைக் குழந்தைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வீட்டின் இந்த 3 இடங்களில் பட்டாசு வச்சா… வெடிச்சு சிதறும் உஷார்!
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Safety,

பாகு காய்ச்சும்போது கவனம்:

அதிரசம், லட்டு, மைசூர்பாக்கு போன்றவற்றுக்குப் பாகு காய்ச்சும்போது அது மிகவும் சூடாக இருக்கும். தெறித்தால் தீக்காயம் ஆழமாகும். நீளமான கரண்டியைப் பயன்படுத்த வேண்டும். பாகு பதம் பார்க்கும்போது விரலால் தொடுவதற்குப் பதிலாகச் சிறிது தண்ணீரில் விட்டுப் பார்க்க வேண்டும். சிறு தீக்காயம் ஏற்பட்டால் உடனே குழாய்த் தண்ணீரில் சில நிமிடங்கள் காட்டலாம். பெரிய காயம் என்றால் தாமதிக்காமல் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

சிலிண்டர், அடுப்புப் பராமரிப்பு:

பண்டிகைக் கால அவசரத்தில் கேஸ் சிலிண்டர் தீர்ந்துபோவது அடிக்கடி நடக்கிறது. முன்கூட்டியே முன்பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சமையல் முடிந்ததும் ரெகுலேட்டரை அணைக்க மறக்கக் கூடாது. கேஸ் வாசனை வந்தால் மின்விசிறி, விளக்கு சுவிட்சுகளைப் போடாமல், ஜன்னல்களைத் திறந்து, ரெகுலேட்டரை அணைக்கவேண்டும்.

தீபாவளி பலகாரம் - Diwali Snacks Safety,
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Safety,

சுத்தம், சேமிப்பு:

பலகாரம் செய்யும் முன் கைகளையும் பாத்திரங் களையும் நன்றாகக் கழுவவேண்டும். ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் காய்ச்சிப் பயன்படுத்துவது உடல்நலத்துக்குக் கெடுதல். பலகாரங்கள் முழுவதும் ஆறிய பிறகே காற்றுப்புகாத டப்பாக்களில் அடைக்க வேண்டும். சூடாக அடைத்தால் ஈரப்பதத்தால் சீக்கிரம் நமத்தும் கெட்டும் போய்விடும். தயாரித்த மாவு வகைகளைச் சில நாட்களுக்குள் பயன்படுத்துவதும், அண்டை வீட்டாருக்குக் கொடுக்கும்போது புதிதாகச் செய்தவற்றைக் கொடுப்பதும் நல்லது.

சர்க்கரை, உடல்நலம்:

இனிப்பும் எண்ணெய்ப் பலகாரங்களும் அளவோடு இருந்தால்தான் ஆரோக்கியம். சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கோளாறு வராமலிருக்க நிறையத் தண்ணீர் குடிக்கவேண்டும்.

பெருமைக்காக பலவிதமான பலகாரம் செய்வதைத் தவிர்த்து வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடித்த, உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடியவற்றை தயாரித்தல் நலம். வீட்டில் செய்த பலகாரம் என்பதற்காக ஒரே நாளில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். முறையாகத் திட்டமிட்டுப் பொறுமையாகச் செய்தால் பலகாரம் செய்வதும் இனிமையான அனுபவமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இனி தீபாவளி சீடை வெடிக்கும்னு பயப்பட வேண்டாம்! இந்த ஒரு ட்ரிக் தெரிந்தால் போதும்!
தீபாவளி பலகாரம் - Diwali Snacks Safety,