இனி தீபாவளி சீடை வெடிக்கும்னு பயப்பட வேண்டாம்! இந்த ஒரு ட்ரிக் தெரிந்தால் போதும்!

சீடை வெடித்து முகத்தில் தெறிக்குமா என்ற பயமா? இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் கவலையே வேண்டாம்!
சீடை குறிப்புகள் - diwali snacks tamil
சீடை குறிப்புகள் - diwali snacks tamil
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on: 

தீபாவளிக்கு சீடை செய்வது என்பது ஆரம்பத்தில் செய்பவர்களுக்கு ஒரு கடினமான வேலையாக இருக்கும். காரணம் பதம் தவறி செய்யப்படும் பொழுது சிதறி வெடித்து முகத்தில், கைகளில் எல்லாம் தெறித்துவிடும். அப்படி தெறிக்காமல் பக்குவமாக செய்யும் வழி முறையை தெரிந்துகொண்டால் சீடை செய்வதும் முறுக்கு செய்வதும் கடினமான வேலையாக இருக்காது. ஜாலியாக இருக்கும்.

சீடை குறிப்புகள்:

வரப்போகும் தீபாவளியன்று செய்யப்படும் சீடை மற்றும் முறுக்குகள் எண்ணெயில் போட்டவுடன் வெடித்து உடையாமல், முழுமையாகத் திரண்டு வரவும், எண்ணெய் குடிக்காமல் இருக்கவும் கடைபிடிக்க வேண்டிய 5 மிக முக்கியமான எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

​மாவின் சரியான அரைப்பு மற்றும் பதம் :

சீடைக்கு அரிசி மாவு அரைக்கும்போது அல்லது கடையிலிருந்து வாங்கும்போது மாவு மிகவும் நைசாக (மென்மையாக) இருக்கவேண்டும். மாவைச்சலித்த பிறகு கையில் தொட்டுப்பார்த்தால் தரியாக இல்லாமல் மென்மையாகவும், லேசான ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டும். மாவு சரியான பதத்தில் இருந்தால் மட்டுமே அது வெடிக்கும் அபாயம் தவிர்க்கப்படும்.

குறிப்பாக பச்சரிசியை கழுவி காயவைத்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து அதைக் கை பொறுக்கும் சூட்டில் வறுத்து சலித்து வைத்து விடவேண்டியது அவசியம்.

​வெண்ணெய் அல்லது சூடான எண்ணெய் சேர்த்தல்:

மாவு பிசையும்போது சரியான அளவில் வெண்ணெய் (அல்லது காய்ச்சிய சூடான எண்ணெய்/நெய்) சேர்க்க வேண்டும். இது முறுக்கு மற்றும் சீடைக்கு நல்ல மொறுமொறுப்பைக் கொடுப்பதுடன், அதிகப்படியான எண்ணெயைக் உறிஞ்சாமல் தடுத்து, எண்ணெய் வடியாமல் பாதுகாக்க உதவும்.

இரண்டு கப் பச்சரிசி மாவுக்கு கால் கப் பொட்டுக்கடலை மாவு அதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் அல்லது சூடாக்கிய எண்ணெயை ஊற்றி பிசைந்தால் பதம் சரியாக வரும். அதிகமான எண்ணெயோ வெண்ணையோ சேர்த்தால் சீடை உடைய ஆரம்பிக்கும்.

சீடை குறிப்புகள் - diwali snacks tamil
சீடை குறிப்புகள் - diwali snacks tamil

​மாவை நன்றாகப் பிசைதல்:

முறுக்கு செய்வதற்கான மாவை பிசையும் பொழுது வறுத்த பச்சரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், சூடான எண்ணெய், உப்பு அனைத்தையும் நன்றாக கலந்து வைத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர்விட்டு பிசைந்து முறுக்கு செய்தால் முறுக்கு வெள்ளையாக ஒரே சீராக வரும். கடாயிலும் அவ்வப்பொழுது புது எண்ணெய் ஊற்றவேண்டும்.

சீடைக்கான மாவைச் சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்த பிறகு, அதன் மேலே ஒரு ஈரமான துணியை போட்டு மூடிவைக்க வேண்டும். மாவு காய்ந்துவிட்டால் எண்ணெய் சட்டியில் போடும்போது வெடித்துச் சிதறும். ஈரப்பதம் காக்கப்படுவதால் சீடைகள் உடையாமல் வரும்.

சீடை உருட்டும் போது கவனம்:

சீடை உருண்டைகளை உருட்டும் போது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. அதே நேரத்தில், உருண்டைகளில் சிறு விரிசல்கள்கூட இல்லாதவாறு உள்ளங்கையில் வைத்து லேசாக உருட்டவேண்டும். சற்று நீளமாக தட்டையாக என்று பிடித்த உருவங்களிலும் உருட்டலாம்.

மேலும் சீடைகளை சிறியதாக மணி மணியாக உருட்டினால் உடையவோ தெறிக்கவோ வாய்ப்பு இருக்காது.உருட்டிய உருண்டைகளை ஒரு துணியில் சிறிது நேரம் போட்டு பத்து10 ஆக பொரித் தெடுக்கலாம். விரிசல்கள் இருந்தால், எண்ணெய் உள்ளே சென்று சீடை வெடித்து சிதற வழிவகுக்கும். விரிசல் இல்லாத உருண்டைகள் முழுமையாக வெந்து வெளியே வரும். ஆதலால் விரிசலுக்கு வழிகொடுக்கக்கூடாது.

விரிசல் இல்லாத உருண்டைக்கு முக்கியமாக செய்ய வேண்டியது எள், ஓமம் போன்றவற்றை நன்றாக சுத்தம் செய்து கல்,மண் இல்லாதவாறு அதில் சேர்த்து பிசைய வேண்டும். அப்படி மாவுடன் சேர்த்து பிசைந்தால்தான் வெடிக்காமல் வரும்.

இதையும் படியுங்கள்:
கூட்டு குடும்ப ஞாபகம் தரும் மொறுமொறு சீப்பு சீடை செய்வது எப்படி?
சீடை குறிப்புகள் - diwali snacks tamil

தவறுதலாக கல்மண் இருந்தாலும் வெடித்து தெறிக்கும். சீடை உருண்டையை எண்ணெயில் போட்டவுடனேயே கரண்டியால் திருப்பக் கூடாது. அது உருண்டை உடைய காரணம் ஆகிவிடும்.

சரியான எண்ணெய் சூடு மற்றும் மிதமான தீ:

சீடை அல்லது முறுக்கை எண்ணெயில் போடும்போது எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கவேண்டும் (புகை வரும் அளவுக்குக் கொதிக்கக்கூடாது). போட்டவுடன் தீயை மிதமான தீக்கு மாற்றிவிட வேண்டும். எண்ணெய் அதிகச் சூடாக இருந்தால் சீடை மேலே மட்டும் கருகிவிடும், உள்ளே வேகாது. மிதமான சூட்டில் வேகும்போது எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுப்பாகவும் உடையாமலும் பொரிந்து வரும்.

மேலும் எண்ணெய்யில் பொரிக்கும் பொழுது சீடை ,முறுக்கு போன்றவற்றின் ஈரப்பதம் முற்றிலும் நீங்கி

சடசடப்பு அடங்கி வரும்பொழுது எண்ணெயிலிருந்து அவற்றை எடுத்து வைக்கவேண்டும்.

இந்த ஐந்து குறிப்புகளையும் பின்பற்றி தீபாவளிக்கு முறுக்கு, சீடை செய்தால் அழகான சுவையான உடைசல் நொறுங்கள் எதுவும் இல்லாத பக்குவமான வழியில் பதார்த்தங்களை செய்து அசத்தலாம்.

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்ன ரகசியங்கள்... இனி முறுக்கு அதிரசம் கெடாமல் இருக்கும்!
சீடை குறிப்புகள் - diwali snacks tamil
logo
Kalki Online
kalkionline.com