சமீபத்தில் காலாவதியான உணவுகளை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட, ஏன் மரணம் வரை கொண்டு சென்ற செய்திகளை அதிகம் பார்க்கிறோம். எக்ஸ்பைரி அல்லது காலாவதி என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். பசியாற்றும் பால் போன்ற உணவுப்பொருட்கள் மற்றும் உடல் நலம் காக்கும் மருந்து போன்று நம்மால் பயன்படுத்தப்படும் பொருட்களை எந்த நாள் வரை அல்லது எவ்வளவு காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம் என அவற்றின் மேலட்டை, பாட்டில் போன்றவற்றில் வரையறுத்துக் குறிப்பிடப்பட்ட காலம் அல்லது காலக்கெடுதான் காலாவதி அல்லது எக்ஸ்பைரி என்றழைக்கப்படுகிறது.
இதிலும் இரண்டு வகைகள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று Best Before, அடுத்து Expire Date. முதலாவது இந்த மாதங்களுக்குள் அந்தப் பொருளைப் பயன்படுத்தி விடவேண்டும் என்பதையும், மற்றொன்று காலாவதி ஆகும் தேதியைக் குறிப்பிடுவது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பால், தயிர், சீஸ், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் காலாவதி நாட்கள் கணக்கிலும், சேமித்து வைத்து செலவழிக்கும் மைதா, கடலை, கோதுமை, எண்ணெய் வகைகள், தானிய வகைகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சில மருந்துப் பொருள்கள் இத்தனை மாதங்கள் அல்லது வருடத்துக்கு முன் என்றும் குறிப்பிடப்படுகிறது.
காலாவதி முடிந்தும் சில பொருட்களை 3 மாதங்கள் வரை உபயோகித்தால் பாதிப்பில்லை என பலரும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. உணவுப்பொருட்கள் எனில் நம் கண்களுக்குத் தெரியாத அதில் சேரும் ஈகோலி பாக்டீரியாக்கள் நம் உடல் நலனை சிறிது சிறிதாக பாதிக்கும் விஷத்தன்மை தரும். குறிப்பாக, இதனால் குடலில் சேரும் நச்சுக்கள் புட்பாய்சனாகி உடலில் பலவித பாதிப்புகளைத் தரும்.
மருந்துகளை நிச்சயமாக காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்துவதே நல்லது. ஏனெனில், நோயின் தன்மைக்கேற்ப அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் நாள்பட வீரியமற்று பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சரும மருத்துவர் தரும் ஆயின்மெண்ட்டுகளை பல வருடங்கள் வைத்து பயன்படுத்தும்போது அதனாலேயே ஒவ்வாமை பிரச்னை எழும்.
கீரை, முட்டை, பால் பொருட்கள், காய், பழ வகைகள், மீன், இறைச்சி வகைகள், முளை கட்டிய தானியங்கள், எண்ணெயில் பொரித்த சிப்ஸ் வகைகள், பாக்கெட்டில் அடைத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நாளுக்கு பின் உபயோகிப்பது தீமையைத் தரும்.
இதில் பல வருடங்களானாலும் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை கொண்ட தேன், சில அரிசி வகைகள், உப்பு, சர்க்கரை, சோள மாவு, உலர் பீன்ஸ், வினிகர், சில செக்கு எண்ணெய்கள் போன்றவற்றையும் தற்போது கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. காரணம் எங்கும் நிறைந்திருக்கும் கலப்படம்.
இனி, வீணாகிறது என காலாவதி தேதி முடிந்தும் பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்த்து உடல் நலம் காப்போம். எக்ஸ்பைரி தேதியைக் கவனித்து நமது உடல் எக்ஸ்பைரி தேதியை தள்ளி வைப்போம்.