குளியலின் வகைகள் பற்றி அறிவோமா?

Lifestyle articles
Types of baths...
Published on

குளியல் என்பது உடம்பின் சுத்தத்திற்காக மட்டுமில்லை; குளிப்பதால் உள்ளமும் உடலும் உற்சாகம் பெறும். மனம் சோர்வாக இருக்கும்பொழுது ஜில்லென்று தண்ணீரில் ஒரு குளியல் போட உடம்பும் மனமும் லேசாகிவிடும். குளியல் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. குளியலில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்துமே உடலை சுத்தம் செய்யவும், புத்துணர்ச்சி தரவும் உதவுகின்றன.

சாஸ்திரங்களில் ஐந்து வகையான குளியல்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. 

1) வாருணம்: 

இது குளம்,ஆறு போன்றவற்றில் மூங்கி குளிப்பதாகும். இதில் கழுத்து மற்றும் இடுப்பு வரை குளிப்பதற்கு 'கௌணம்' என்ற பெயர். 

2) பஸ்மோத்தூளனம்: 

விபூதி பூசிக்கொள்வது. அதாவது விபூதி குளியல். இதற்கு ஆக்னேயம் என்று பெயர்.

3) வாயவ்யம்: 

பசுக்கள் கூட்டமாக செல்லும்போது அதன் கால் குளம்பு பட்டு அதில் இருந்து கிளம்பும் தூசி புனிதமாக சொல்லப்படுகிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதற்கு வாயவ்யம் என்று பெயர்.

4) திவ்யம்: 

திவ்யம் என்றால் மேன்மையானது, தெய்வீகத்தன்மை பொருந்தியது என்று பொருள். பகலில் சில நேரங்களில் மழை பெய்து கொண்டே வெயில் அடிக்கும். தேவலோகத்தில் இருந்து வரும் தீர்த்தத்திற்கு சமம் என்று இந்த மழை நீரை குறிப்பிடுவார்கள். இதில் குளிப்பது மிகுந்த நன்மை தரும் என்பதால் இதற்கு திவ்ய குளியல் என்று பெயர்.

5) ப்ரம்ஹ ஸ்நானம்: 

ப்ரம்ஹம் என்றால் வேதம் மற்றும் வேத மந்திரம் என்று பொருள். கலச நீர் வைத்து மந்திரங்கள் சொல்லி யாகம் செய்த பின்பு அந்த கலசத்தில் உள்ள மந்திர நீரை தெளிப்பார்கள். வேத மந்திரத்தால் புனித படுத்தப்பட்ட அந்த தீர்த்த நீரை தெளித்து கொள்வதற்கு ப்ரஹ்ம ஸ்நானம் என்று பெயர். குளியல் என்பது இந்து மதத்தில் உடல் சுத்தத்திற்கு மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பொதுவாக குளியல்களில் பல வகைகள் உள்ளன. தொட்டி குளியல், நீராவி குளியல், எண்ணெய் குளியல், சமுத்திர ஸ்நானம், படுக்கை குளியல் என்று பல வகைகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆன்லைனில் மளிகை பொருட்கள் வாங்குகிறீர்களா? போச்சு!
Lifestyle articles

1) தொட்டி குளியல்:

தொட்டி குளியல் என்பது குளிப்பதற்காக bathtubல் நீரை நிரப்பி குளிக்கும் முறையாகும். சில தொட்டிகளில் குளிர்ந்த மற்றும் சூடான நீரை வழங்கும் வசதியும் உள்ளது. சில மருத்துவ சிகிச்சைகளுக்கும் தொட்டி குளியல் பயன்படுகிறது.

2) நீராவி குளியல்:

ஸ்டீம் பாத் எனப்படும் நீராவி குளியல் என்பது சூடான நீராவியால் நிரப்பப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து உடல் மற்றும் மனதை தளர்த்துவதற்கான சிறந்த சிகிச்சை முறையாகும். இதன் மூலம் வியர்வை மற்றும் நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. சருமத்தை சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மூலிகை எண்ணெய்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நீராவி குளியல அதிக பலன்களைத் தரும்.

3) எண்ணெய் குளியல்:

இது ஒரு பாரம்பரிய குளியல் முறையாகும். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து சீயக்காய் அல்லது நலங்கு மாவு கொண்டு தேய்த்து குளிக்க உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்திற்கு பளபளப்பையும் தரும். உடல் சூடு தணிந்து, மனம் புத்துணர்ச்சி பெறும்.

4) சமுத்திர ஸ்நானம்:

சமுத்திர ஸ்நானம் என்றால் கடலில் நீராடுவது. அமாவாசை, மாசி மகம், கார்த்திகை பௌர்ணமி போன்ற நாட்களில் சமுத்திர ஸ்நானம் செய்வது உகந்தது.

5) படுக்கை குளியல்:

படுக்கை குளியல் என்பது இயக்கம் குறைவாக உள்ள நோயாளிகளுக்கு செய்யப்படும் குளியலின் ஒரு வகையாகும். படுக்கையில் இருந்து எழ முடியாத நோயாளிகளுக்கு கை, கால், முகம், மார்பு போன்ற பகுதிகளை சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்வது. இதன் மூலம் நோயாளிகளுக்கு படுக்கைப் புண்கள் மற்றும் பிற தோல் நோய்த்தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்க... கதைகள் சொல்லுங்க சார்!
Lifestyle articles

6) ஸ்பாஞ்ச் குளியல்:

ஸ்பாஞ்ச் பாத் என்பது ஈரமான ஸ்பான்ஜ் அல்லது துணியை பயன்படுத்தி உடலை சுத்தம் செய்யும் முறையாகும். இதுவும் படுக்கையில் இருப்பவர்கள், குறைவான இயக்கம் உள்ளவர்கள், முழு குளியல் சாத்தியம் இல்லாத சூழ்நிலையில் இந்த ஸ்பாஞ்ச் குளியல் செய்யப்படுகிறது.

மொத்தத்தில் குளியல் என்பது நம்மை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடன், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com