
உங்கள் வீட்டு வரவேற்பறையில் வெறும் நாற்காலிகளை மட்டுமே போட்டு வைத்திருக்கிறீர்களா? வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், ‘வீடு மாறிச் செல்லும்போது, நாற்காலிகள் எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கின்றன’ என்று சொல்வது சரிதான். ஆனால், சொந்த வீட்டில் இருப்பவர்கள், நாற்காலிகளை மட்டும் வைத்துக் கொண்டிருப்பதை விட, சோஃபா (Sofa) வசதிகளைச் செய்து கொள்வதே சிறப்பாக இருக்கும். நீங்கள் வீட்டிற்கு சோஃபா வாங்கப் போகிறீர்கள் என்றால் அதற்கான தரமான 5 ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. அறையின் அளவு மற்றும் அமைப்பு: வீட்டின் அறைக்கேற்றபடி, நல்ல பொருத்தமான சோஃபாவை தேர்ந்தெடுக்க வேண்டும். சோஃபா அறை முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும்படி அமைக்கக் கூடாது. அறையிலுள்ள பிற தளவாடங்கள் மற்றும் நிலைகளின் அளவையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கதவுகள் மற்றும் வழிகளை அளவிட்டு, அதனுள் எளிதாக எடுத்துச் சென்று வைக்கக்கூடியதான சோஃபாவை தேர்வு செய்திட வேண்டும்.
2. சோஃபாக்களின் நிறம் மற்றும் வடிவமைப்புகள்: புதிதாக வரும் சோஃபாக்கள் பெரும்பாலும் நடுநிலை வண்ணங்களுடன் அழகிய வடிவமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், நாம் தேர்வு செய்யும் சோஃபா, நம் வீட்டு அறையின் வண்ணத்திற்கேற்றதாக இருக்குமா என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பழைய வீடாக இருப்பின், புதிய வகை சோஃபாக்கள் அந்த இடத்திற்குப் பொருந்தாதவைகளாக அமைந்து விடலாம். அறையில் சோஃபாக்களை அழகூட்டும் வகையில் அமைக்க விரும்பினால், தனித்துவமான வடிவமைப்பு, ஒளிமயமான நிறம் அல்லது தனித்துவமான துணி கொண்ட சோஃபாக்களை வாங்கலாம். மிகவும் அடக்கமான தோற்றத்தை விரும்பினால், ஏற்கெனவே உள்ள அலங்காரத்துடன் ஒத்துப்போகும் வண்ணம் மற்றும் பாணியை தேர்வு செய்ய வேண்டும்.
3. சோஃபாக்களின் வகைகள்: வீட்டில் குழந்தைகள் இருப்பின், செல்லப்பிராணிகள் வளர்த்து வந்தால் தோலினால் செய்யப்பெற்ற சோஃபாக்களை தேர்வு செய்வது சிறந்தது. ஏனெனில், குழந்தைகளாலோ அல்லது செல்லப் பிராணிகளாலோ சிந்தியவற்றை எளிதாகத் துடைத்து சுத்தம் செய்து விட முடியும். தோல் சோஃபாக்கள் நன்றாக உழைக்கக்கூடியவை. மேலும், நீண்ட காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும். இருப்பினும், இதன் விலை சற்று அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். தோல் சோஃபாக்கள் குளிர்காலத்தில் குளிர்ச்சியாகவும், வெப்பமான காலநிலையில் ஒட்டும் தன்மையுடனும் இருக்கும். அழகியலுடன் இருக்க வேண்டும், அதேவேளையில். அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு துணியிலான சோஃபாக்கள் சரியானதாக இருக்கும். வீட்டில் யாருக்காவது ஒவ்வாமை இருந்தால், தோல் சோஃபாக்கள் நல்ல தேர்வாகும். ஏனெனில், இது துணி சோஃபாக்களைப் போல தூசிப் பூச்சிகள் அல்லது செல்லப்பிராணி பொடுகுகளைக் கொண்டிருக்காது.
4. ஆறுதல் மற்றும் தரம்: சோஃபாக்கள் வெவ்வேறு உயரங்களிலும், ஆழங்களிலும் வருகின்றன. உயரமான நபர்களுக்கு அல்லது சோபாவில் சுருண்டு படுத்துக்கொள்ள விரும்புவோருக்கு ஆழமான இருக்கை சிறந்ததாக இருக்கும். அதேவேளையில் குட்டையான கால்கள் உள்ளவர்களுக்கு ஆழமற்ற இருக்கை சிறந்தது. இதேபோன்று, சோஃபாக்களின் உயரம், கால்கள், தொடைகளில் அழுத்தம் கொடுக்காமல் தரையில் தட்டையாக ஓய்வெடுக்க அனுமதிப்பதாக இருக்க வேண்டும். உயர் நெகிழ்திறன் நுரை மெத்தைகள் வசதியாகவும் நீடித்ததாகவும் இருக்கின்றன. சோஃபாக்களில் ஸ்பிரிங்ஸ் கொண்டவை அதிக ஆதரவையும் நீண்ட காலத்தையும் கொண்டவை. இருப்பினும் ஸ்பிரிங்ஸ் கொண்ட சோஃபாக்கள் வாங்கும்போது, அவை சீரானதாகவும் போதுமான அளவு உறுதியாகவும் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. விலை: சோஃபாக்கள் அனைத்தும், அதன் கைவினைத்திறன், பொருள் தரம் மற்றும் வடிவமைப்பு புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் விலைக்குக் கிடைக்கின்றன. வீட்டின் அழகியல் மற்றும் வசதிக்கான முதலீடுகள் இவை என்பதால், நீடித்து உழைக்கும் வகையில், நீண்ட காலத்திற்கு செலவு குறைந்த தேர்வாக அமைவது நல்லது. சோஃபாக்கள் பெரும்பாலும் நன்றாகவும் நீண்ட காலம் நீடிக்கும் விதமாகவும் இருக்க வல்லுநர்களைக் கொண்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு செய்தல் அவசியம். எனவே, அவற்றைப் பராமரிப்பதற்குத் தேவையான நிதியை முன்கூட்டியேச் சேர்த்து ஒதுக்கீடு செய்து கொள்வது சிறந்தது.
மேற்கண்ட ஐந்து குறிப்புகளைப் படித்து, வீட்டிற்கேற்ற சரியான சோஃபாக்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவதுடன், வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்களை நல்ல முறையில் அமரச் செய்து, அவர்களது அன்பையும் சேர்த்துப் பெறலாம்.