
பலரும் தங்களுடைய செல்ஃபோன் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உறை அல்லது பவுச் போட்டு வைத்திருக்கிறார்கள். அதே சமயம், செல்ஃபோனின் முன்புற, பின்புறக் கவர்களில் பலரும் ரூபாய் நோட்டுகளை வைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் ஆபத்தான செயலாகும். அது ஏன் என்பதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ரூபாய் நோட்டுகளின் தன்மை;
செல்போனின் பின்புற அல்லது முன்புற உறைகளில் ரூபாய் நோட்டுகளை சேமித்து வைப்பது ஆபத்தை உண்டாக்கும். இந்திய ரூபாய் நோட்டுகள் முதன்மையாக பருத்தித் துணியின் சிறப்பு கலவையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன, பாரம்பரிய மர அடிப்படையிலான காகிதத்திலிருந்து அல்ல. அவற்றின் ஆயுள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த சில சேர்க்கைகள் மற்றும் நிரப்பிகளை அவற்றில் சேர்க்கிறார்கள்.
கால்சியம் கார்பனேட் உலக அளவில் காகிதம் மற்றும் நாணயத்துறையில் பூச்சுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் இது ரூபாய் நோட்டுகளுக்கு ஒளி புகாத் தன்மை மற்றும் அச்சிடும் தன்மையை மேம்படுத்தி, வெண்மை நிறத்தைத் தருகிறது.
நோட்டு கிழிந்து போகலாம்;
ரூபாய் நோட்டுகளில் அவை நீடித்து உழைப்பதற்காக ஜெலட்டின் பிசின் சேர்க்கப்படுகிறது . இதை செல்போனில் வைப்பதால் அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் ஜெலட்டின் பிசினின் தரத்தை குறைக்கிறது. இதனால் ரூபாய் நோட்டை பலவீனப்படுத்துகிறது. எனவே ரூபாய் நோட்டு கிழிந்து போகலாம்.
தீப்பிடிக்கலாம், செல்போனும் வெடிக்கலாம்;
பலரும் செல்ஃபோன்களை அதிக நேரம் உபயோகிக்கிறார்கள். தினமும் சார்ஜ் செய்கிறார்கள் இதனால் செல்போன்கள் விரைவில் சூடாகி விடுகின்றன. அதிக பயன்பாட்டின் காரணமாக அதிலிருந்து வெளிப்படும் வெப்பமும் ரூபாய் நோட்டில் இருக்கும் கால்சியம் கார்பனேட்டும் வினைபுரிந்து செல்போன் வெடிக்க கூடிய அபாயங்கள் ஏற்படும்.
செல்ஃபோன்களை பயன்படுத்தும்போது குறிப்பாக சார்ஜ் செய்யும் போது கேம்ஸ் விளையாடும்போது அல்லது தொடர்ச்சியாக ரீல்ஸ், வீடியோக்கள் பார்க்கும்போது அவை அதிகளவு வெப்பத்தை இயற்கையாக உருவாக்குகின்றன. அப்போது செல்போனின் முன்புறம் அல்லது பின்புறம் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள், வெப்பத்தை தாக்கு பிடிக்கும் அளவை இழக்கின்றன.
அவை தீப்பிடித்து செல்போனை வெடிக்கச் செய்யலாம். இது கடுமையான ஆபத்தை ஏற்படுத்தலாம். மொபைல் ஃபோன்களால் உருவாகும் வெப்பத்தால் ரூபாய் நோட்டுகள் எரிக்கப்படுவதை ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் வைரல் வீடியோக்கள் உள்ளன. இது நடைமுறையில் உண்மையான ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது.
பிற பாதிப்புகள்;
இதனால் மொபைலின் செயல் திறன் குறைவதற்கும், பேட்டரியின் ஆயுள் குறைவதற்கும் அல்லது சாதன செயலிழப்புக்கும் வழிவகுக்கும். சில சமயங்களில் செல்போன் வெடிப்பதாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
சில சமயங்களில் மொபைல் ஃபோன்கள் திருட்டுப் போனால் மொபைலுடன் சேர்த்து அதிலே வைத்திருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும். அதிக வெப்பத்தின் காரணமாக, நோட்டுகள் நசநசத்துப் போய், அவற்றை வெளியே எடுக்கும்போது கிழிந்துவிடும் அபாயமும் உள்ளது. ரூபாய் நோட்டுக்களை செல்போனின் முன்புற அல்லது பின்புறக் கவர்களில் வைக்கக் கூடாது. சார்ஜ் செய்யும்போது அல்லது நேரடி சூரிய ஒளியில் போனை பயன்படுத்தும்போது இன்னும் வெப்பம் அதிகரித்து ஆபத்தை ஏற்படுத்தும்.
நெட்வொர்க் சிக்கல்கள்;
செல் ஃபோன்களின் பின்புறப் பேனலுக்கு அருகில் ஆன்டனாக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் ரூபாய் நோட்டுகள் அல்லது காகித குறிப்புகளை வைத்திருக்கும்போது அலைபேசியில் சிக்னல்களை பெறும் திறன் பாதிக்கப்படும். சரியாக டவர் கிடைக்காமல், செல்போனை உபயோகிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே பணம் வைக்க சிறந்த இடம் பர்ஸ் அல்லது பாக்கெட்டுகள் தானே தவிர, செல்ஃபோன்கள் அல்ல.