குடும்பத் தலைவியரில் பலர் சமையல் அறை அழுக்குகள், கறைகளை நீக்க மற்றும் கிருமிகள், பாக்டீரியாக்களை ஒழிக்க என பல்வேறு வேலைகளுக்கும் எலுமிச்சம் பழத்தை உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பழத்திலுள்ள அமிலத் தன்மையும் மணமும் கிச்சனை தூய்மைப்படுத்துவதுடன் நறுமணம் கமழவும் செய்கின்றன. அவ்வாறு செய்யும்போது ஒரு சில வகைப் பொருள்கள் சேதமடையவும் வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்ட 5 பொருள்கள் எவை என்பதையும் அவற்றை லெமன் இல்லாமல் வேறு எப்படி சுத்தம் செய்யலாம் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. மார்பிள் & கிரானைட்: கவர்ச்சிக்காக மார்பிள் மற்றும் கிரானைட் கற்களால் போடப்பட்டுள்ள கவுன்டெர் டாப்களை லெமன் கொண்டு சுத்தப்படுத்தினால் லெமனிலுள்ள ஆசிட் அவற்றின் நிறத்தையும் பளபளப்பையும் மங்கச் செய்துவிடும். மார்பிள் போன்ற இயற்கையாக உருவான கற்கள் மீது எலுமிச்சையின் ஆசிட் படும்போது அவற்றில் மீண்டும் சரிசெய்ய முடியாத விரிசல் ஏற்படும் வாய்ப்பு உண்டாகலாம். அதற்கு பதில், இதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் pH நியூட்ரல் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்தால் இம்மாதிரியான இயற்கை கற்கள் சேதமடையாமலும் மங்கிப்போகாமலும் பளபளப்பை தக்க வைத்துக்கொள்ளும்.
2. காஸ்ட் அயர்ன் பான்: வார்ப்பிரும்பு பான் என்பது இல்லத்தரசிகளின் விருப்பமான சமையல் பாத்திரம். ஏனெனில், இது நீண்ட நாள் உழைக்கவும் சூட்டை அதிக நேரம் தக்க வைத்துக்கொள்ளவும் செய்யும். இதை லெமன் உபயோகித்து சுத்தம் செய்தால், அதிலுள்ள அமிலம், பான் துரு பிடிக்காமல் இருக்கவும், உணவுகள் ஒட்டாமல் இருக்கவும் அதன் மீது பூசப்பட்டிருக்கும் ஒரு வகை எண்ணெய் போன்ற பொருளை பிரித்து எடுத்துவிடும். எனவே, இந்த மாதிரி பாத்திரத்தை சுத்தம் செய்ய லெமன் மற்றும் சோப் போன்றவற்றை தவிர்த்து, சுடு நீரை ஊற்றி பிரஷ்ஷினால் தேய்த்து கழுவினால் போதும்.
3. கத்தி: சமையல் அறையில் உள்ள முக்கியமான உபகரணம் கத்தி. அதை எப்பவும் நல்ல கண்டிஷனில் வைத்திருப்பது அவசியம். கத்தி ஹை கார்பன் ஸ்டீலில் செய்யப்பட்டிருந்தால், அதை லெமன் வைத்து சுத்தம் செய்தால் அதன் ஆசிட் கத்தியை ஆக்ஸிடைஸ் செய்துவிடும். எனவே, கத்தியை டிஷ் வாஷ் சோப்பினால் தேய்த்து தண்ணீரில் கழுவி பிறகு நன்கு துடைத்து விட்டால் கத்தி எப்பவும் கூர்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
4. மரச் சாமான்கள்: காய் நறுக்கும் பலகை போன்ற மரச் சாமான்களை லெமன் வைத்து சுத்தம் செய்தால் அதன் அசிடிட்டி அந்தப் பொருளை மிகவும் காய்ந்து போகச் செய்து வெடிப்பு உண்டாகவும் செய்யும். எனவே, மரத்தாலான சமையல் அறை சாதனங்களை மிருதுத் தன்மை கொண்ட சோப்பினால் கழுவி துடைத்து சிறிது எண்ணெய் தடவி வைத்து விட்டால் அவை எப்பொழுதும் புதிய தோற்றம் கொண்டு நீண்ட நாள் உழைக்கும்.
5. அலுமினிய சாமான்கள்: இவை பொதுவாக நீண்ட நாள் உழைக்கக் கூடியவை. இவற்றை லெமன் வைத்து சுத்தம் செய்தால் அதன் ஆசிட் அலுமினிய பொருட்களின் நிறத்தையும் பளபளப்பையும் மங்கச் செய்துவிடும். மேலும், சிறு சிறு ஓட்டைகள் விழவும் காரணமாகி விடும். எனவே, அலுமினிய பொருட்களை டிஷ் வாஷ் சோப் கொண்டு ஸ்பான்ச்சினால் மிருதுவாக தேய்த்து கழுவி விட்டால் அவை புதிய தோற்றத்துடன் நீண்ட நாள் உழைக்கும்.