தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை ஒழித்து, வீடுகள் வெள்ளை அடிக்கப்பட்டு, பொங்கலை வரவேற்க மக்கள் தயாராவார்கள். அதுபோலவே ஜப்பானில் வருடம் ஒருமுறை ஓசோஜி (Osoji) என்ற நடைமுறையை பின்பற்றுகின்றனர். அதன் நடைமுறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஓசோஜி: ஜப்பானிய துப்புரவு முறை, ‘ஓசோஜி’ என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒருவரின் வாழும் இடத்தை சுத்தம் செய்வதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் ஒரு முழுமையான மற்றும் கவனத்துடன் கூடிய அணுகுமுறையாகும். இது உடல் ரீதியான துப்புரவுச் செயலை மட்டுமல்ல, அதன் பின்னால் உள்ள கலாசார மற்றும் தத்துவ முக்கியத்துவத்தையும் உள்ளடக்கியது.
ஜப்பானிய துப்புரவு அணுகுமுறையின் சில முக்கிய கூறுகள்:
நினைவாற்றல் மற்றும் சடங்கு: ஜப்பானில் வீடு சுத்தம் செய்வது பெரும்பாலும் தியானம் போன்ற கவனமுள்ள பயிற்சியாக பார்க்கப்படுகிறது. வீடு சுத்தம் செய்வதை அவர்கள் ஒரு வேலையாக மட்டும் பார்க்காமல் ஒழுங்கமைக்கவும் சுற்றுப்புறத்துடன் இணைவதற்கான வாய்ப்பாகவும் ஜப்பானிய மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் பொருட்களை வைத்திருக்கும் வீட்டின் அறைகளை மிகுந்த மரியாதையுடன் கருதுகிறார்கள்.
டி கிளிட்டரிங்: ஜப்பானிய துப்புரவு ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை உள்ளடக்கியது. டி கிளிட்டரிங் எனப்படும் செயல்முறைதான் அது. தங்களுக்கு மிகவும் தேவையான பொருட்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு தேவைப்படாத உடைமைகளை அகற்றி விடுகிறார்கள். இது மினிமலிசத் தத்துவத்தின் ஒரு பகுதியாகும். வாழும் இடம் மிகவும் எளிமையாகவும் தேவையான பொருட்களுடன் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கும் அவர்களது மனப்பான்மையையும் குறிக்கிறது.
குழு மனப்பான்மை: பல ஜப்பானிய குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து வீடு சுத்தம் செய்கிறார்கள். இது குழு மனப்பான்மை மற்றும் பொறுப்புணர்வு போன்றவற்றை வளர்க்கிறது.
ஆழமான சுத்தம்: இந்த ஓசோஜி சடங்குகள் ஆண்டின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்கள் வீட்டினை மிகவும் ஆழமாக சுத்தம் செய்கிறார்கள். ஜன்னல்கள், ஜன்னல் திரைகள், திரைச்சீலைகள் போன்ற வெளியிலிருந்து சூரிய வெளிச்சத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் அம்சங்களை சுத்தம் செய்து புதிது போல ஆக்குவார்கள், சமையலறை மற்றும் குளியல் அறை போன்ற பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவார்கள். கடந்த ஆண்டின் தூசி மற்றும் பலவீனத்தை நீக்கி வரவிருக்கும் ஆண்டின் புதிய தொடக்கங்களுக்கும் பல நல்ல விஷயங்களுக்கும் இது வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள்.
பொருட்களுக்கும் மரியாதை: அவர்களது துப்புரவு பணி மிகவும் சுத்தமாகவும் முழுமையாகவும் செய்யப்படுகிறது. மேஜை இழுப்பறைகளின் கீழ் உட்பட எல்லா பகுதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். ஒவ்வொரு பொருளும் மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது. ஒருவர் உபயோகப்படுத்தும் உடைமைகளுக்கு ஆழமான மரியாதை தருகிறார்கள். அவற்றை வெறும் பொருட்களாகப் பார்க்காமல் அவற்றை உயிருள்ள பொருட்களாக கருதுவது ஜப்பானியர்களின் வழக்கம். எனவேதான் மனிதர்களுக்குக் கொடுக்கும் மரியாதையை பொருட்களுக்கும் அவர்கள் வழங்குகிறார்கள்.
இயற்கையின் ஒருங்கிணைப்பு: பல ஜப்பானிய வீடுகளில் தாவரங்கள் மற்றும் பாரம்பரிய டாட்டாமி பாய்கள் போன்ற இயற்கை பொருட்கள் உள்ளன. வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் இயற்கையுடன் இணைந்த பொருட்களைதான் உபயோகிக்கிறார்கள்.
பாரம்பரிய துப்புரவு கருவிகள்: நவீன துப்புரவுக் கருவிகளை விட பழைய பாரம்பரியமான பொருள்களைத்தான் அவர்கள் துடைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த அணுகுமுறை எளிமை மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்துகிறது. வைக்கோலால் செய்யப்பட்ட துடைப்பம் மற்றும் பழைய துணிகளை துடைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.
முழுமையான மற்றும் சுகாதாரமான சுத்தம் அவர்களது குறிக்கோளாக இருக்கும். ஓசோஜிக்குப் பிறகும் தினமும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வழக்கமான பராமரிப்பு பழக்கங்களை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.