உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. எந்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், எந்த உணவை முதலில் பரிமாற வேண்டும், இலையை எவ்வாறு மூட வேண்டும் போன்ற பல விஷயங்களை இதில் கவனிக்க வேண்டும். அவ்வாறு உணவு சாஸ்திர முறைப்படி சாப்பிடும்போது குடும்பத்தில் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி போன்றவை தானாகவே ஏற்படும். இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அன்னத்தை நமக்கு யாராவது பரிமாற வேண்டும். தனக்குத் தானே பரிமாறிக்கொள்வது ஆயுளைக் குறைக்கும். இலையில் முதலில் காய்கறி, அப்பளம் போன்றவற்றை வைத்துவிட்டே சாதத்தை பரிமாற வேண்டும். எடுத்த உடனேயே சாதத்தை பரிமாறக்கூடாது. அதைப்போல வத்தல், கீரையை முதலில் பரிமாறக் கூடாது. இப்படி சுப காரியம் நடக்காத இடங்களிலேயே பரிமாறப்படும்.
இரவில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன. கீரை, நெல்லிக்காய், கட்டித்தயிர், கஞ்சி, பாகற்காய், இஞ்சி ஆகியவற்றை இரவில் தவிர்த்து விடுவது நல்லது. அதையும் மீறி சாப்பிட்டால், அந்த வீட்டில் மகாலக்ஷ்மி தாயார் வாசம் செய்ய மாட்டார், செல்வம் தங்காது என்பது ஐதீகம். இரவில் பால் சோறு சாப்பிடலாம். இதனால் செல்வம் பெருகும்.
அன்னத்தை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டு உணவு உண்ணும் போது நமக்கு நன்மை பயக்கும். கிழக்கு நோக்கி அமர்ந்து சாபிட்டால், ஆயுள் வளரும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், பொருள் சேரும். தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், புகழ் வளரும். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. நோய்தான் வரும்.
பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்பொழுது நோய் சேரும். சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் ஆகியவற்றை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். வேறு வேலைகள் எதுவும் செய்துக்கொண்டே உணவை உண்ணக்கூடாது.
சாப்பிடும்பொழுது வீட்டின் கதவு மூடியிருக்க வேண்டும். வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமனத்தின்போதும் சாப்பிடக்கூடாது. உணவை வெள்ளித்தட்டில் வைத்து சாப்பிடும் போது அழகும், அறிவும் கூடும். செம்பு, வெண்கல பாத்திரத்தில் உணவை சமைக்கக் கூடாது. எனவே, இனி உணவு சாஸ்திரத்தை பின்பற்றி நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு பெற்று வாழுங்கள்.