ஏஞ்சல் நம்பர்கள் என்பவை 111 அல்லது 777 போல தொடர்ச்சியாக ஒரே எண்ணின் குரூப்பாக இருக்கும். இதை நாம் நமது தினசரி வாழ்வில் அவ்வப்போது பல இடங்களில் காண முடியும். அவை நம் வாழ்வின் ஆன்மிக வளர்ச்சி, மாற்றங்கள் போன்றவற்றில் வழிகாட்டியாய் இருந்து பிரபஞ்சத்தின் உள் அர்த்தங்களை உணர உதவும். இந்த நம்பர்கள் தேவதைகள் மறைமுகமாக நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட செய்திகளை நமக்கு அனுப்புவதாக நம்பப்படுகிறது. புலன்களுக்குத் தெரியாத, ஆத்ம பலம் கொண்ட இந்த நம்பர்கள் ஒவ்வொன்றும் நமக்கு உணர்த்தும் அர்த்தங்கள் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. 111: உங்கள் எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை. அவற்றை நேர்மறையான வழிகளில் வெளிப்படுத்தி, கிடைக்கும் புதிய சந்தர்ப்பங்ளை புத்திசாலித்தனத்துடன் ஏற்று செயல்படுத்த ஆரம்பியுங்கள் என்று உங்களுக்கு நினைவூட்டும் எண் இது.
2. 222: நீங்கள் போகும் பாதை மிகச் சரியானது. பொறுமையோடும் நம்பிக்கையோடும் செல்லுங்கள். எது நடக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அது நல்லபடியாக நடக்கும்.
3. 333: ஆன்மிகம் உங்களுக்குள் சிறந்த வழிகாட்டியாய் இருந்து உங்களை ஊக்கப்படுத்தவும் உங்களுக்கு உதவி புரியவும் செய்யும். உங்களின் படைப்பாற்றலை சுயமாக வெளிப்படுத்தி வெற்றி பெறுங்கள் எனக் கூறுகிறது இந்த எண்.
4. 444: இந்த எண்ணை நீங்கள் காணும்போது நீங்கள் தெய்வீக பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளீர்கள் என்பதை மீண்டும் உங்களுக்கு உறுதிப்படுத்தும். உங்கள் எதிர்கால வாழ்வுக்கு ஒரு பலமான அடித்தளத்தை உருவாக்க உங்களுக்கு உதவும் என்றும் கூறுகின்ற நம்பர் இது.
5. 555: மிகவும் சக்தி வாய்ந்த நம்பர் இது. உங்கள் வாழ்வில் உண்டாகப்போகும் மிக முக்கியமான மாற்றத்தை சுட்டிக் காட்டவும், அந்த மாற்றத்தை வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் என்றெண்ணி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காகவும் கண்ணில் தென்படும் எண்.
6. 666: உங்களின் நற்பெயர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், மறுசீரமைப்பை உண்டுபண்ணி குறிக்கோளுடன் உங்கள் பாதையில் பயணித்தால் இலக்கை எளிதில் அடைந்துவிடலாம். உங்களை நீங்களே ஊக்குவித்துக்கொண்டு இறைப் பணியையும் தொடர நினைவூட்டும் செய்தியை கூறும் நம்பர் இது.
7. 777: ஆன்மிக வளர்ச்சி, தெளிவு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை தர உதவும் தெய்வீக சக்தி உங்களுக்குள் உள்ளது. இந்த உலகமும் உங்களுக்கு ஆதரவாக உள்ளது என்பதை நம்புங்கள் எனக் கூறுகிறது இந்த எண்.
8. 888: ஆன்மிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகளவில் காணப்போகும் நேரம் இது. ஒழுங்கு முறையோடும் கவனத்தோடும் செயல்பட்டால் பொருளாதார மற்றும் தனிப்பட்ட இலக்குகளை எளிதில் அடையலாம் என்பதை உணர்த்தும் நம்பர் இது.
9. 999: வாழ்வில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயம் முடியப்போகிறது என்பதை உணர்த்துவதற்காகத் தென்படுவது இந்த எண். புரிந்து கொண்டு, பழையன போகட்டும் புதியதை தொடங்கத் தயாராவோம் என்று உற்சாகமாக உணர்வது புத்திசாலித் தனம்.
நம் தினசரி வாழ்வியலில் மைண்ட்ஃபுல்னஸ் மற்றும் அதிக கவனம் செலுத்தி செயல்படும்போது ஏஞ்சல் நம்பர்கள் நம் கண்களுக்குப் புலப்படும். குழப்பமான மனநிலை, முடிவெடுப்பதில் திணறல், உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆகிய நிலைகளில் நாம் இருக்கும்போது ஏஞ்சல் நம்பர்கள் நம் கண்ணுக்குத் தெரிய வரும்.
பிரபஞ்சம் நம்முடன் தொடர்பில் உள்ளது என்பதைக் காட்டுவதே இந்த எண்கள். ஆறுதல் தரவும், ஊக்குவிக்கவும், வழிகாட்டவும் செய்கிறதோ இல்லையோ, அண்டத்திற்குரிய இயல்புகளோடு இணைந்து வாழ நம் உள்மனதை ஊக்குவிக்கிறது என்பது உண்மை. அடுத்த முறை இந்த மாதிரி ஒரு நம்பரைப் பார்க்கும்போது சற்று நிதானித்து யோசித்தீர்களானால் அது உங்களின் அப்போதைய மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும்.