சீர்காழி அருகே திருநாங்கூர் செம்பொன்செய் கோயில் என்ற திவ்ய தேசம் உள்ளது. இந்தக் கோயிலை பெருமாளே பொன்னால் கட்டினார் என்று கூறுகின்றனர். அதனால்தான் இந்த திவ்யதேசத்திற்கு பெயரே செம்பொன்செய் கோயில் என்பதாகும். திருநாங்கூர் திவ்ய தேசங்களில் இது நடுநாயகமாக விளங்கக்கூடியது என்று கருதப்படுகிறது. இங்கு பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.
இத்தலப் பெருமாளுக்கு இங்கே திருநாமம் பேரருளாளன் என்பதாகும். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் இவர் காட்சி தருகின்ற இந்தத் தலத்தில் தாயாருக்கு தனிச் சன்னிதி உள்ளது. தாயாரின் திருநாமம் அல்லிமாமலர் நாச்சியார் என்பதாகும். உத்ஸவ பெருமாளின் திருநாமம் செம்பொன் அரங்கன் என்பதாகவும். இவர் பார்க்க பேரழகு உடையவர். அருகில் பூதேவி ஸ்ரீதேவி மற்றும் தலத்தின் தாயார் அல்லிமாமலர் நாச்சியார் ஆகியோர் இவருடன் காட்சி தருகின்றனர். இந்தத் தலத்தின் தீர்த்தம் ஹேம புஷ்கரணி ஆகும்.
ஸ்ரீராமபிரானாக அவதரித்த பெருமாள் வனவாசம் செல்கின்றார். அங்கே சீதையை ராவணன் இலங்கைக்கு கவர்ந்து சென்று விட, சீதையை கண்டுபிடிக்க பல முயற்சிகளுக்குப் பின்னர் ராவணனுடன் போர் புரிந்து வெற்றி வாகை சூடுகின்றார். இதையடுத்து ஸ்ரீராமபிரான் ஓய்வு எடுக்க திருநாங்கூர் திவ்ய தேசத்திற்கு வந்தாராம். அங்கே திருடனேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தாங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசுவினை செய்து நான்கு நாட்கள் தங்கிய பின்னர் அந்தப் பசுவை ஒரு அந்தணருக்கு தானம் கொடுத்தாராம்.
ஸ்ரீராமர் கொடுத்த தங்கப் பசுவைக் கொண்டு அவர் இந்தக் கோயிலை உருவாக்கியதால் செம்பொன்செய் கோயில் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ‘செம்பொன் ரங்கர்’ எனப்படுகின்ற இந்தப் பெருமாளை ஹேமரங்கர் என்றும் பேரருளாளன் என்றும் அழைக்கின்றனர்.
மிகச் சிறிய கோயிலாக அமைந்திருந்தாலும் இந்தப் பெருமாள் கோயில் பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தக் கோயிலில் மூலவரின் வலது புறத்தில் நாகநாதர் கற்சிலை வடிவில் பலி பீடத்துடன் காட்சி தருகின்றார். இது வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லாத சிறப்பு. இந்த நாகநாதரை வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து பாயசம் நெய்வேத்தியம் செய்து வழிபட்டால், நாக தோஷம் நீங்கும் என்றும் திருமணத் தடை அகலும் என்றும் கூறுகிறார்கள்.
இப்பெருமான் அற்புதங்களில் மற்றொன்று, அதாவது ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காஸ்யபன் என்ற அந்தணர் மிகவும் வறுமையில் வாடினார். அவர் தவம் பல செய்தும் வறுமையைப் போக்கிட வழி தெரியவில்லை. காஸ்யபனிடம் வைஷ்ணவர்கள் சிலர், ‘‘நீ திருநாங்கூர் சென்று அரங்கனை, ‘ஓம் நமோ நாராயணா’ என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தினால் முப்பத்திரண்டாயிரம் முறை உச்சரித்து வணங்கினால் உனது வறுமை நீங்கி, செல்வம் பெறுவாய்’’ என்று கூறினார்.
இதைக் கேட்ட காஸ்யபன் உடனே செம்பொன்செய் கோயிலுக்கு வந்து மூன்று நாட்களில் முப்பத்திரண்டாயிரம் முறை அஷ்டாக்ஷர மந்திரத்தைச் சொல்லி பெருமாளை வேண்டினான். பெருமாள் அவனுக்குக் காட்சி தந்து பொன்னும் பொருளும் தந்ததாக இத்தலத்தின் பெருமை கூறப்படுகிறது. எனவே, இந்த திவ்ய தேசத்துக்கு வந்து செம்பொன் அரங்கனை தரிசித்தால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கப்பெறுவதோடு, வாழ்வில் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செல்வம் பல தந்திடும் செம்பொன் அரங்கனை வணங்கிடுவோம் செல்வ செழிப்புடன் வாழ்ந்திடுவோம்.