
பூக்கள் அரும்பிலிருந்து தோன்றி முழுவதுமாக மலர்ந்து விரியும் வரை அதற்கு 13 நிலைகள் உள்ளன. அந்த 13 நிலைகளின் பெயர்களை பற்றி இப்பதிவில் காணலாம்.
1) பூக்களின் ஏழு பருவப் பெயர்கள் பற்றி அறிவோமா? பூ என்றாலே மலர் என்றுதான் தெரியும். பூவானது அரும்பி மலராகி மணம் பரப்பி நம் மனதை கொள்ளை கொள்ளும்வரை நிறைய மாற்றங்கள் அவற்றில் நிகழ்கின்றன. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப பெயர்களும் அமைந்துள்ளது.
சங்க இலக்கியப் பாடல்களில் அரும்பிலிருந்து கீழே உதிர்ந்து கிடக்கும் பழைய பூவாகும் நிலை வரை பல பெயர்கள் உள்ளன. அவை அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு, போது, மலர், பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் என பூவிற்கு 13 பல பெயர்கள் உண்டு.
2) அரும்பு:
இதழ் விரிப்பதற்கு முந்தைய பருவம். அரும்பும் நிலை. பூக்கடைக்கு சென்றால் நாம் மலர்ந்த பூக்களை விட அரும்பாக கொடுங்கள் என்று கேட்டு வாங்குவோம் அல்லவா. அந்த அரும்பிலும் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. நனை, முகை, மொக்குள்.
3) நனை:
நனை என்பது உள்ளும் புறமும் ஈர நைப்புள்ள தேன் நனைப்புடன் காணப்படும் நிலையை நனை என்கிறோம். அரும்பு வெளியில் தலை காட்டும் நிலையை குறிக்கும்.
4) முகை:
முகை என்பது சற்று புடைத்து காணப்படும். முகை என்பதை முகிழ்த்தல் எனலாம். தலை காட்டிய அரும்பு முத்தாக மாறும் நிலையை குறிக்கிறது.
5) மொக்குள்:
இந்த நிலையில் அரும்புகள் மணம் பெறும் நிலையை குறிக்கும். அதாவது பூவுக்குள் பருவ மாற்றம் நிகழ்ந்து மணம் பெறும் நிலையை குறிக்கிறது.
6) முகிழ்:
மணம் கொண்டு முகிழ்தல். விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை முகிழ் எனப்படுகிறது.
7) மொட்டு:
மொட்டு என்பது மொக்கு விடும் நிலையை குறிக்கும் சொல்லாகும்.
8) போது:
மொட்டு மலர்கின்ற பொழுது ஏற்படும் புடைப்பு நிலை.
9) மலர்:
மலர்ந்த நிலையை குறிக்கும்.
10) பூ: முழு இதழ்களும் விரிந்த நிலையில் நன்கு மலர்ந்த பூக்களை குறிக்கும்.
11) வீ:
உதிரும் நிலையில் உள்ள பூவை குறிக்கும் சொல் இது.
12) பொதும்பர்:
பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கும் நிலையை பொதும்பர் என்பார்கள்.
13) பொம்மல்:
மலர்ந்து பூத்துக் குலுங்கி பின்பு உதிர்ந்து கிடக்கும் பூவை பொம்மல் என்பார்கள்.
14) செம்மல்:
உதிர்ந்து கிடக்கும் பழைய பூவை அதாவது நிறம் மாறி அழுகும் நிலையை குறிக்கும் சொல்தான் செம்மல்.
கண்ணுக்கு விருந்தாகும் பூக்களில் இத்தனை நிலைகளையும், அதன் பெயர்களையும் காணும் பொழுது ஆச்சரியம் உண்டாகிறது அல்லவா? ஒவ்வொன்றிற்கும் என்ன அழகான தமிழ் பெயர் பார்த்தீர்களா?.