உலக பசி தினம் அனுசரிக்கப்படுவதின் நோக்கம் தெரியுமா?

உலக பசி தினம் (28.05.2025)
World Hunger Day
Annadhanam
Published on

லக பசி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் துன்பப்படுவதைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2011ம் ஆண்டு ‘தி ஹங்கர் ப்ராஜெக்ட்’ உலக பசி தினத்தை நிறுவியது. இதன் நோக்கம் ஒரு நாளுக்கு மட்டும் மக்களுக்கு உணவு வழங்குவது அல்ல, உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உணவளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ஊக்குவிக்கும் நாளாகும்.

‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினார் பாரதி. ஆனால், அவர் கண்ட கனவு நிறைவேறியுள்ளதா? இல்லை. மாறாக உலகளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை துரதிர்ஷ்டவசமாக சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. யுனிசெஃப் மற்றும் உலக உணவுத் திட்டம் போன்ற அமைப்புகளின் சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில் 2024ம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை அனுபவித்தனர். இது 2023ம் வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.

இதையும் படியுங்கள்:
சமையல் நிபுணர்கள் அணியும் தொப்பி வித்தியாசமாக இருக்கக் காரணம் என்ன?
World Hunger Day

உலக பசி தினம் அனுசரிக்கப்படுவதின் நோக்கம்: இந்த நாள் பசியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிலையான தீர்வுகளை உருவாக்க, முக்கியமாக பெண்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறது. கல்வி, சுகாதாரம், பொருளாதார வாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் முதலீடு செய்வதை இது வலியுறுத்துகிறது.

உலக அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு நிலையான தீர்வுகள் தேவை என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது. உணவுப் பற்றாக்குறை மற்றும் மோசமான ஊட்டச்சத்து பல கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. சத்தான உணவுகளை உண்ணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வறிய பகுதிகளில் உள்ள மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவை உண்ண வேண்டும்.

பசியைப் போக்குவதில் நாடுகளின் முயற்சிகள்: இந்தியா போன்ற நாடுகளில் கோயில்களில் அன்னதானத் திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சீக்கிய சமூகத்தினர் சமூகச் சமையலறைகளை நடத்துகிறார்கள். மதம் மற்றும் அந்தஸ்தை பொருட்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் இங்கே வந்து இலவசமாக உணவு அருந்திச் செல்லலாம்.

பாரிஸ் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் வைக்கப்படுகின்றன. மக்கள் தமது வீடுகளில் மீதமான உணவை அதில் வைத்து விட்டால் தேவையானவர்கள் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மக்களின் பசிக்கான காரணங்கள்: உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது. ஆனால், அதேசமயம் மில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடுகிறார்கள். உணவுப்பொருட்கள் வாங்க போதிய பணமில்லாமல் வறுமையில் வாடும் மக்கள் பசியாலும் வாடுகின்றனர். நகர்ப்புறங்களில் மலிவு விலையில் உணவு கிடைக்காத காரணத்தால் அங்குள்ள மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணாமல் துன்பப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
Naarcistic | இந்த வகை நபர்களுடன் வாழவே முடியாது - ஏன்? தெரிந்துகொள்ளவது அவசியம்!
World Hunger Day

பசியைப் போக்கும் தீர்வுகள்: மக்களுக்கு உணவு வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை தரலாம். வீடுகளில் வீணாகும் உணவை தேவைப்படுபவருக்கு வழங்கலாம். பசியால் வாடுபவர்களுக்கு ஒரு நாள் மட்டும் உணவளித்து விட்டால் பிரச்னை தீராது. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்க வழி செய்ய வேண்டும்.

நிலையான விவசாயத்தை ஆதரிக்கவும் உள்ளூர் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டும். சிறு விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை அரசாங்கங்கள் மானியத்தின் மூலம் வழங்கலாம் அல்லது தொண்டு நிறுவனங்கள் அவற்றை இவர்களுக்கு வழங்கலாம்.

தெருவில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து சாலையோரங்களில் குடியிருப்போருக்கு உணவு வழங்கலாம். மேலும், ஒரு நாள் மட்டும் அவர்களது பசியைப் போக்காமல் அவர்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்புகளைத் தந்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் உழைப்பின் மூலம் பசியாறச் செய்யலாம். அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com