
கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்க முலாம்பழம் சிறந்த ஒன்றாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் அளிக்கும் இந்த பழம் பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், சில சமயம் கடையில் பார்த்து வாங்கும்போது நன்றாகத் தெரிந்தாலும், வீட்டிற்கு வந்த பிறகு வெட்டிப் பார்த்தால் இனிப்பே இல்லாமல் 'சப்பு' என்று இருப்பதுண்டு. இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க, இனிப்பான பழத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தெரிந்து கொள்வது அவசியம்.
நல்ல முலாம்பழத்தைத் தேர்ந்தெடுக்க அதன் வெளிப்புறத் தோலை முதலில் கவனிக்க வேண்டும். நன்கு பழுத்த பழத்தின் தோல் அடர்த்தியான மஞ்சள் நிறத்துடன், அதன் மீது லேசான பச்சை நிறக் கோடுகளைக் கொண்டிருக்கும். முற்றிலும் பச்சைப் பசேல் என்றிருக்கும் பழங்கள் முழுமையாகப் பழுக்காதவை, அவற்றில் இனிப்பு குறைவாக இருக்கும்.
பழத்தின் அடிப்பாகத்தையும் பார்க்க மறக்காதீர்கள். தரையில் பட்டு வளர்ந்த பகுதி அடர் நிறத்தில் (மஞ்சள் அல்லது ஆரஞ்சு) இருந்தால், பழம் நன்கு பழுத்துள்ளது என்று அர்த்தம். வெளிர் நிறத்தில் இருந்தால் இன்னும் பழுக்கவில்லை என்று கொள்ளலாம்.
நிறம் பார்த்த பிறகு பழத்தின் எடையைக் கவனியுங்கள். ஒரே அளவுள்ள பழங்களில், நன்கு பழுத்த பழம் சற்று கனம் குறைவாக இருப்பது போலத் தோன்றும். காரணம், பழுக்கும்போது நீர்ச்சத்து சற்று குறையும். விதை குறைவாக உள்ள பழங்கள் பொதுவாக அதிக இனிப்புடன் இருக்கும்.
தோல் மிக மெலிதாக இருக்கும் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. அவை சில சமயங்களில் அதிகமாகப் பழுத்து, நறுக்கும்போதே குழைந்துவிடும் அல்லது ஃபிரஷ்ஷாக இருக்காது. வாங்கும்போதே இந்த விஷயங்களைச் சரிபார்த்தால் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.
முலாம்பழத்தை வாங்கிய பிறகு உடனே சாப்பிடப் போகிறீர்கள் என்றால் வெட்டிக் கொள்ளலாம். உடனடியாகப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், அதை ஃபிரிட்ஜில் வைக்காமல், சாதாரண அறை வெப்பநிலையிலேயே வைத்திருங்கள்.
ஒருவேளை பழத்தை வெட்டிப் பாதி சாப்பிட்டு விட்டால், மீதியைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் சேமிக்கலாம். இது நீண்ட நேரம் ஃபிரஷ்ஷாக இருக்க உதவும். மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் முலாம்பழத்தைச் சேர்த்து வைக்காதீர்கள். அதன் தனிப்பட்ட வாசனை மற்றவற்றில் பரவி, இரு பழங்களின் சுவையையும் பாதிக்கலாம்.
சில சமயங்களில் வாங்கும் பழங்கள் முழுமையாகப் பழுக்காமல் இருக்கலாம். அவற்றைப் பழுக்க வைக்க ஒரு வழி உண்டு. பழத்தை ஒரு செய்தித்தாளால் முழுமையாகச் சுற்றி, லேசாகக் காற்று நுழைய சிறிய ஓட்டை விட்டு, சற்று இருட்டான, கதகதப்பான இடத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்திருந்தால் பழுத்துவிடும்.
பழுக்கும் வேகத்தை அதிகரிக்க, பழுத்த வாழைப்பழம் போன்ற எத்திலீன் வாயுவை வெளியிடும் பழங்களுடன் சேர்த்து வைக்கலாம். பழத்தின் விதைகளை வீசாமல், கழுவி உலர்த்திச் சேமித்து, ஸ்மூத்திகள் அல்லது சாலட்களில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கடையில் முலாம்பழம் வாங்கும்போது நல்ல பழமாக வாங்க முடியும்.