கொசுக்கள் மனிதர்களுக்கு மலேரியா, சிக்கன்குனியா உள்ளிட்ட நோய்களை கொண்டு வருகின்றன. இவற்றை விரட்ட பயன்படுத்தும் கொசுவத்தி சுருள்கள் மற்றும் ரசாயனம் கலந்த செயற்கை கொசு விரட்டிகள் ஆரோக்கியத்திற்கு பலவிதமான கேடுகளை உண்டாக்குகின்றன. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இயற்கையாகவே கொசுக்களை விரட்டும் சில வகை உத்திகள் உள்ளன. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இயற்கையாக கொசுக்களை விரட்டும் உத்திகள்:
துளசி இலைகள்: பூஜைக்குப் பயன்படுத்தப்படும் புனிதமான துளசி இலைகளுக்கு கொசு போன்ற பூச்சிகளை விரட்டும் பண்புகள் உள்ளன. துளசி இலைகளை காய வைத்து அவற்றை எரிப்பதால் கொசுக்கள் வீட்டிற்குள் வராது. அதைப்போல துளசி எண்ணையையும் உடலில் தடவிக் கொண்டால் கொசு கடிக்காது. புதிய துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி அந்த திரவத்தை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றிக்கொண்டு வீட்டில் ஆங்காங்கே ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் வராது. துளசி அதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது. அதனால் உடல்நலத்திற்கும் நன்மையே உண்டாகும்.
வேப்ப இலைகள்: வேப்ப இலைகளை எரிப்பதும் துளசி இலைகளைப் போலவே 80 சதவீதம் கொசுக்களை அண்ட விடாது. அதைப்போல வேப்ப எண்ணையை நேரடியாக உடலில் தடவிக் கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும். வேப்ப இலைகளை எரிப்பதால் கொசுக்களுக்கு அந்த வாடை பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிடும்.
எலுமிச்சை இலைகள்: அதைப்போல எலுமிச்சை இலைகளையும் எரிப்பதால் அந்த வாடைக்கு கொசுக்கள் வராது. இது ஒரு இயற்கையான கொசு விரட்டி ஆகும். எலுமிச்சை எண்ணையையும் உடலில் தடவிக்கொள்ளலாம். வீட்டில் ஆங்காங்கே தெளித்து விட்டாலும் கொசுக்கள் வராது.
பூண்டு: பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இது கொசுக்களை விரட்டும் ஒரு வலுவான வாசனையை உருவாக்குகிறது. பூண்டை அடிக்கடி சாப்பிட்டாலும் அல்லது பூண்டை நசுக்கி அந்த கலவையை உடலில் தடவிக் கொண்டாலும் கொசு கடிக்காது. பூண்டு எண்ணெயை உடலில் தடவிக் கொண்டாலும் அது ஒரு இயற்கையான கவசம் போல செயல்பட்டு கொசுக்களை விரட்டி அடிக்கும். 10, 12 பூண்டுகளை நசுக்கி அவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் ஆறியதும் வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டில் அங்கங்கே கொசு வரும் இடங்களில் தெளித்து விட்டால் கொசுக்கள் வராது.
யூகலிப்டஸ் எண்ணெய்: யூகலிப்டஸ் எண்ணையின் வாடை மனிதர்களுக்கு மிகவும் நறுமணமூட்டியாகவும் மனதிற்கு உகந்ததாகவும் இருக்கும். அதேநேரத்தில் கொசுக்களுக்குப் பிடிக்காத வாசனை ஆகும். இதை உடலில் தடவிக்கொண்டால் நான்கு மணி நேரம் வரை கொசுக்களை அண்ட விடாது.
சாமந்திப்பூக்கள்: சாமந்திப் பூக்களை வீட்டில் அங்கங்கே போட்டு வைக்கும்போது அவற்றின் வாசனை கொசுக்களை விரட்டி அடிக்கும். வீட்டில் இருக்கும் தொட்டிகளில் சாமந்திப் பூக்களை வளர்த்து வந்தால் கொசுக்கள் அண்டாது.
லாவண்டர் எண்ணெய்: லாவண்டர் எண்ணெய் ஒரு இனிமையான நறுமணத்தை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இயற்கையான கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது. லாவண்டர் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொண்டால் கொசுக்களை விரட்டி விடும்.
வினிகர்: வினிகரின் வாசனை மிகவும் காட்டமாக இருக்கும். அதை தண்ணீரில் கலந்து அங்கங்கே தெளித்து விட்டால் கொசு வராது.
சிட்ரோனெல்லா: சிட்ரோனெல்லா என்பது எலுமிச்சம்பழத்தின் இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்து பெறப்பட்ட இயற்கை கொசு விரட்டி ஆகும். இது பொதுவாக மெழுகுவர்த்திகள், எண்ணெய்கள் மற்றும் ஸ்ப்ரேகளில் பயன்படுத்தப்படுகிறது. சிட்ரோனெல்லாவின் தனித்துவமான நறுமணம் கொசுக்களை வீட்டை விட்டு விரட்டி விடும்.