ஒரு பெண்ணோ அல்லது ஆணோ ஓர் எதிர்பாலினத்தவரை சந்திக்கும்போது, முதல் சந்திப்பிலேயே அவர்பால் ஓர் ஈர்ப்பு உண்டாவது அபூர்வமாக சில நேரங்களில் நிகழ்வதுண்டு. அப்படி நேர்வதற்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி சில காரணங்ளும் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை முதல் சந்திப்பிலேயே பிடித்துப் போவதற்கு அவனிடமுள்ள 10 வகை தனித்துவமான அம்சங்களைக் கூறலாம். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஒரு பெண் ஆணிடமுள்ள நேர்த்தியான பழக்கங்களை வெகு விரைவில் கண்டுக்கொள்ளக் கூடியவள். அதாவது அவனுடைய சுய கவனிப்பை பிரதிபலிக்கக்கூடிய சுத்தமான நகங்கள், திருத்தமான சிகை அலங்காரம், உடல் சுகாதாரம் ஆகியவை அவள் கண்களுக்குத் தப்பாது. அவை அவன் மீது அவளுக்கு ஒரு நல்ல அபிப்ராயத்தை உண்டுபண்ணும்.
2. ஆணின் ஒரு கள்ளங்கபடமற்ற சிரிப்பு. அது அவர்கள் இருக்கும் இடத்தைப் பிரகாசிக்கச் செய்து அங்கு ஓர் இணக்கமான சூழ்நிலை உருவாக உதவும். அது அப்பெண்ணுக்குள் உடனடியாக அவனிடம் நம்பிக்கையுடன் பழக வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கும்.
3. பல நேரங்களில் வார்த்தைகளை விட கண்கள் ஆழமாகப் பேசக்கூடியவைகளாக இருக்கும். அப்பார்வை ஆழ்மனதை ஊடுருவுவதாகவும் இருக்கலாம். அல்லது கண்ணுக்குக் கண் நேரடியாகப் பேசவும் செய்யும். அவை நொடியில் அன்பையும் உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்தத் தவறாது.
4. வெளிப்படையாகத் தெரியும் ஆணின் ஆடைகள் பல விஷயங்களைத் தெரிவிக்கும் மொழியாகும். உடலுக்குப் பொருந்தும் ஆடையின் அளவு, சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் நிறம் போன்றவை அவனுடைய தனித் தன்மையுடைய குணநலன்களை வெளிப்படுத்த அவன் எடுத்துக்கொண்ட முயற்சியைக் குறிக்கும். இது மற்றவர்களுக்கு அவன் மீது மதிப்புடன் கூடிய மரியாதை செலுத்த உதவி புரியும்.
5. ஆணின் உடல் மொழி ஓராயிரம் விஷயங்கள் பேசும். அவன் ஓர் இடத்தில் அமரும்போது கூனிக் குறுகாமல் நிமிர்ந்து அமர்வது அவனுக்குள்ளிருக்கும் தன்னம்பிக்கையைப் பிரதிபலிக்கும். குனிந்த தோற்றத்துடன் படபடப்புடன் இருப்பவர்கள் பாதுகாப்பற்று அசௌகரியமாய் இருப்பதாக உணர்பவர்கள் எனலாம்.
6. ஓர் ஆணின் குரல் மற்றும் பேசும் தோரணை பெண்ணின் கவனத்தை உடனடியாக ஈர்க்கக் கூடியது. அமைதியான தெளிவான குரல் ஆணின் ஆளுமையையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும். இதமான பேச்சு அன்பையும் சுலபமாக அணுக இயலும் தன்மையையும் வெளிப்படுத்தும்.
7. ஆணிடமிருந்து வரும் சுகந்தமான வாசனை அவன் மீதுள்ள நல்ல எண்ணத்தை நீண்ட நேரம் நிலைத்திருக்க உதவும். அது ஒரு வாசனைத் திரவியத்தின் மணமாக அல்லது ஃபிரஷாக ஷவர் பாத் எடுத்துவிட்டு வந்ததால் உண்டான மணமாகவும் இருக்கலாம்.
8. ஆண் ஒருவன் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்திலிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். உணவகத்தில் சந்திக்கும் வெயிட்டர்களிடம் காட்டும் மரியாதை, அந்நியர்களிடம் காட்டும் அன்பு போன்றவை அவனது இரக்க குணம் மற்றும் உண்மையான முகத்தைக் கண்டறிய உதவும்.
9. தான் இருக்குமிடத்தில் உள்ளவர்களை சிரிக்கவும் கலகலப்பாக இருக்கச் செய்யவும் முடிகிற ஆண் அனைவராலும் விரும்பப்படுவான். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் மகிழ்ச்சியான கண்ணோட்டத்துடன் பார்க்கத் தெரிந்தவன் புத்திசாலியாகவும் அனைவரையும் வசீகரிக்கக் கூடியவனுமாகவும் இருப்பான்.
10. ஆரோக்கியமான சருமம் சுத்தமான நகங்கள் கொண்ட கைகள் ஒருபோதும் நல்லெண்ணங்களைப் பெற்றுத் தரத் தவறுவதில்லை.
மேலே கூறிய குணநலன் கொண்ட ஆண்களை பெண்கள் மட்டுமல்ல, அனைவருமே விரும்புவர்.