உலகம் முழுவதும் உள்ள பணியிடங்களில் தொழிலாளர்கள் ஊதிய ஏற்றத்தாழ்வை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். சர்வதேச பணியிட சமத்துவ தினம் ஆண்டுதோறும் ஜனவரி 11 அன்று கொண்டாடப்படுகிறது. இது பணியிடத்தில் ஊதிய சமத்துவம் மற்றும் பாகுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
வரலாற்றுச் சூழல்: ஊழல் சமத்துவமின்மையின் வேர்கள் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ளன. பெரும்பாலும் பாலினம், மதம், நிறம் மாற்றுத் திறனாளிகள் போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து பாகுபாடு காட்டப்பட்டது. ஊதிய சமத்துவமின்மை இந்த நவீன யுகத்தில் கூட பெரும்பாலான சமூகங்களில் ஒரு பரவலான பிரச்னையாக இருந்து வருகிறது. பல கலாசாரங்களில் பெண்கள் வரலாற்று ரீதியாக குறைவாகவே ஊதியம் வாங்குகிறார்கள். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பாலின ஊதிய இடைவெளியை குறைப்பது குறித்து முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. உலக அளவில் பெண்கள் சராசரியாக ஆண்களின் ஊதியத்தில் சுமார் 84 சதவீதம் மட்டுமே பெறுகிறார்கள்.
அதிகரித்த விழிப்புணர்வு: ஜனவரி 11, 2017 அன்று பணியிடத்தில் சர்வதேச சமத்துவ தினம் தொடங்கப்பட்டதிலிருந்து பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆஸ்திரேலியா, ஜப்பான், இலங்கை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேலையில் சர்வதேச சமத்துவத்தை கடைபிடிப்பது கணிசமாக விரிவடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், நிறுவனங்கள் ஊதியத்தில் சமத்துவம் மற்றும் பணியிட பாகுபாடு பற்றிய விவாதங்களில் கவனம் செலுத்தும் நிகழ்வுகளை நடத்துகின்றன. இந்த முக்கியமான பிரச்னைகளில் உலகளாவிய உரையாடலை வளர்க்கின்றன.
பன்முகத்தன்மைக்கான கார்ப்பரேட் அர்ப்பணிப்பு: நிறுவனங்கள் மிகவும் வலுவான பன்முகத்தன்மையை ஏற்படுத்த பலவித உத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. பன்முகத்தன்மையை மதிப்பிடுவதில் பெரு நிறுவன கலாசாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தில் தங்கள் பணியாளர்களை அதிகரிப்பது பற்றிய சூழல் உருவாகியுள்ளது.
தொடரும் சவால்கள்: இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் பணியிடத்தில் பாகுபாடுகள் நிலவுகின்றன. பல வளர்ந்த நாடுகளில் இன்னும் பாலினம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் ஊதியம் மற்றும் வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. கட்டடத் தொழிலாளிகள், கூலி வேலை செய்பவர்களில் பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் இன்னும் வழங்கப்படுவதில்லை என்பது வருத்தமான உண்மை. இந்த நாளைத் தொடர்ந்து அனுசரிப்பது உலக அளவில் பணியிட சமத்துவத்தில் எதிர்கால முன்னேற்றங்களுக்கான முயற்சிகளையும் ஊக்குவிக்கிறது.
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்: நிறுவனங்கள் ஊதியக் கட்டமைப்புகள் மற்றும் ஊதிய உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான அளவுகோல்கள் பற்றி தெளிவான வழிகாட்டுதல்களை நிறுவ வேண்டும். அவை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். இது பற்றிய பொறுப்புணர்வை வளர்க்க நிறுவனங்கள் சம்பளம் பற்றிய விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஊழியர்களை பணியமர்த்துதல் தொடர்பாக பாலினம், இனம், நிறப் பாகுபாடு இன்றி தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்த வேண்டும். நிறுவனங்களில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட ஊழியர்களை ஆதரிக்கும் குழுக்களை நிறுவவும், அவர்களின் சிக்கல்கள், பிரச்னைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சமமான வேலைக்கு சம ஊதியத்தை ஊக்குவிக்கும் சட்டங்களை இயற்றுவதற்கும் செயல்படுத்துவதற்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.