பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகளின் எதிரில் வேடிக்கையாகப் பேசுகிறோம் என நினைத்து சில தேவையற்ற விஷயங்களைப் பேசி விடுவார்கள். பெற்றோரின் இந்த அவசியமற்ற பேச்சை இயல்பாக எடுத்துக் கொள்ளத் தெரியாத அந்தக் குழந்தைகள் மன வருத்தம் அடைந்து தனிமையில் கவலை கொள்வார்கள். பிறகு அந்தக் குழந்தைகளிடம் விசாரித்தால் பெற்றோர்கள் செய்த தவறு என்ன என்பது விளங்கும். அதுபோன்ற குழந்தைகளை இயல்பு நிலைக்குத் திரும்ப அழைத்து வருவது என்பது சற்று கடினம். அது மட்டுமின்றி, குழந்தைகளை இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்கள் மனதளவில் பெரிதாகக் காயத்தை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. அப்படி குழந்தைகள் எதிரில் பெற்றோர்கள் பேசக் கூடாத முக்கியமான இரண்டு விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
முதலாவதாக, ஒரு வீட்டில் பெண் ஒன்று, ஆண் ஒன்று என இரண்டு குழந்தைகள் இருக்கும். அந்த வீட்டில் எதிர்பாராதவிதமாக மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்து விடும். அந்த மூன்றாவதாகப் பிறந்த குழந்தையின் எதிரில், வேறு ஒருவரிடம் பேசும் பெற்றோர், ‘‘இரண்டு குழந்தைகளே போதும் என்று நினைத்திருந்தோம். இது மூன்றாவதாக வந்து சேர்ந்து விட்டது. இதனால் வீட்டில் பணப் பற்றாக்குறை நிலவுகிறது. இரண்டு குழந்தைகள் இருந்தபொழுது குடும்பத்துக்கு வேண்டியதை எல்லாம் சிறப்பாகச் செய்ய முடிந்தது. இது மூன்றாவதாக வந்து சேர்ந்தவுடன் செலவு எகிறி விட்டது. இதனால் இப்பொழுது குடும்பத்தை சமாளிப்பதில் ஏகப்பட்ட சிரமம் உள்ளது” என்று கூறக் கூடாது.
இப்படிக் கூறுவதால் அந்த மூன்றாவதாகப் பிறந்த குழந்தை, ‘நான் உங்களுக்கு தேவையில்லாமல் பிறந்து விட்டேனோ?’ என்று அழுது கவலைகொள்ள ஆரம்பிக்கும். அது மட்டுமின்றி, ‘என்னால்தான் உங்களுக்குக் கஷ்டம். நான் ஏன்தான் பிறந்தேனோ? நான் பிறக்காமல் இருந்திருந்தால் எனது அக்காவும் அண்ணனும் நிம்மதியாக இருந்திருப்பார்கள்; நிறைய துணிமணிகள் அணிந்திருப்பார்கள்; நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருப்பார்கள்’ என்று அந்தக் குழந்தை மனதளவில் யோசிக்க ஆரம்பிக்கும். ஆதலால், இதுபோன்ற வார்த்தைகளை குழந்தைகளின் முன்பு முற்றிலுமாக பேசாமல் இருப்பது நல்லது.
இரண்டாவதாக, ‘பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் எந்த வேலை விட்டாலும் கேட்கலாம், செய்யலாம். நமக்கு வரவே கிடையாது. எல்லாம் வெறும் செலவுதான். உங்களுக்கெல்லாம் ஸ்கூல் பீஸ், யூனிபார்ம், மியூசிக், டான்ஸ் ஸ்போர்ட்ஸ், ட்ராயிங் வகுப்புகள், டியூஷன் என்று சேர்த்து இப்படி எல்லா பணமும் செலவாகி விட்டது. அதனால் நிறைய கடன்பட்டு விட்டோம். இன்னும் உயர் கல்வி, திருமணம் என்று செலவுகள் எக்கச்சக்கமாக இருக்கிறது போன்ற விஷயங்களை குழந்தைகள் எதிரில் பேசாமல் இருப்பது நல்லது. அதற்குப் பதில் எப்படி சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்தலாம். சிறு சேமிப்பை கற்றுக் கொடுக்கலாம். பட்ஜெட் போடவும் கற்றுக் கொடுக்கலாம். இதை எப்படி அன்பாக சொல்லிக் கொடுத்தாலும் கற்றுக்கொள்ள ரெடியாக இருக்கிறார்கள் இந்தக் காலத்து குழந்தைகள். ஆதலால் தேவையானதை கற்றுக் கொடுங்கள். தேவையற்ற வீண் பேச்சுக்களைத் தவிர்த்திடுங்கள்.
இதனால் படிக்கும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் மனக்கசப்பின்றி பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் நடக்கும் எல்லா விஷயங்களையும் பற்றி பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். எந்த விஷயத்திற்கும் பெற்றோரிடம் விடை கிடைக்கும் என்று உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். குடும்பம் குதூகலமாகும். ஆதலால் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டு நடந்து கொண்டால், பிள்ளைகளும் அவ்வழி நடப்பார்கள். அவ்வழி நடக்க வைக்க வேண்டியது பெற்றோரின் கடமையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்!