வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய்கள் வளர்க்கப்படுகின்றன. பொமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்ட், அல்சேஷன், ராஜபாளையம் நாய்கள் போன்றவை பொதுவாக பெரும்பாலானோர் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால், மிகவும் விலை உயர்ந்த செல்ல நாய்களும் உலகில் உண்டு. அவை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. திபெத்திய மாஸ்டிஃப் (Tibetan Mastiff): உலகில் மிகவும் விலை உயர்ந்த செல்ல நாய் இனங்களில் ஒன்றான இது, முதலில் இமயமலையில் ஆட்டு மந்தையின் பாதுகாவலர்களாக வளர்க்கப்பட்டது. ஆடுகளை ஓநாய்கள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பாதுகாத்து வந்தது. இவற்றின் விலை சாதாரண ஆட்டு உரிமையாளர்களால் வாங்க முடியாததாக மாறியது. எனவே, வசதியுள்ள பணக்காரர்கள் இந்த நாய்களை வீட்டில் வைத்து வளர்க்கத் தொடங்கினர். இவற்றின் பெரிய தசைநார் கொண்ட உடலில் அடர்த்தியான நீளமான ரோமங்கள் உண்டு. உடல் முழுவதும் முடிகளால் சுற்றப்பட்ட பெரிய அளவு பந்து போல இருக்கும். இவை மிகவும் விசுவாசமானவை மற்றும் சுறுசுறுப்பானவை. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 40 ஆயிரத்தில் இருந்து இரண்டரை லட்சம் வரை உள்ளது.
2. சமோய்ட் (Samoyed): சைபீரியாவை சேர்ந்த சமோய்ட் எனும் நாய் இனம் மிகவும் புத்திசாலித்தனமான குறும்புக்கார நாய். இது குடும்பங்களில் வைத்து வளர்க்க மிகவும் ஏற்றவை. குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமானவை. ஏனென்றால், மிகவும் கனிவான, அன்பான மற்றும் மகிழ்ச்சியான மனப்பான்மை மிக்கவை இந்த நாய்கள். சிரித்த முகத்துக்கு பெயர் பெற்றது. இதன் விலை சுமார் 14,000 டாலர்கள்.
3. லோக்சென் (Lowchen): இது பார்ப்பதற்கு சிறிய சைஸ் சிங்கம் போலவே இருக்கும். எனவே, சிறிய சிங்க நாய் என்று இது அழைக்கப்படுகிறது. இது பிரான்சில் முதலில் தோன்றியதால் 500 ஆண்டுகளுக்கு மேலாக ஐரோப்பியர்கள் இடையே பிரபலமாக உள்ளது. இது சுறுசுறுப்பான, விளையாட்டுத்தனமான நாயாகும். குடும்பத்தில் வைத்து வளர்க்க ஏற்றது. ஆனால், இதை தனியாக நீண்ட நேரம் விட்டு விட்டால் அது சோர்வடைந்து கவலை அடையும். இதன் விலை சுமார் 12,000 டாலர்.
4 சௌசௌ (Chow Chow): வடக்கு சீனாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த நாய் உலகில் பல பழைமையான மற்றும் அரிதான இனங்களில் ஒன்றாகும். இதனுடைய விலையும் அதிகம் என்றாலும் இதற்கான உணவு, கால்நடை மருத்துவக் கட்டணங்கள், பராமரிப்பு போன்றவற்றிற்காக இவற்றை வளர்ப்பதற்கு வாழ்நாள் முழுவதும் 11 ஆயிரம் டாலர்கள் தேவைப்படலாம். இந்த நாய்களை ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்ல வேண்டும். இயற்கையிலேயே மிகவும் பிடிவாதமான குணம் கொண்டது. இவற்றுக்கு கண்ணிமை, தைராய்டு செயல்பாடு போன்ற உடல் நலப் பிரச்னைகள் இருக்கும். எனவே, இதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. அசாவக் (Azawakh): மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இந்த நாய்கள் முக்கியமாக வேட்டை நாய்களாகப் பயன்படுத்தப்பட்டன. இது வட அமெரிக்காவில் அரிதான இனமாகக் கருதப்படுகிறது. இதை தினமும் அவசியம் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றே ஆக வேண்டும். இதனுடைய விலை சுமார் 5,500 டாலர்கள்.
6. ராட்வீலர் (Rottweiler): இதன் விலை 9,000 டாலர்கள். இவற்றிற்கு ஏற்படும் உடல் நலப் பிரச்னைகள் காரணமாக இவற்றின் பராமரிப்புச் செலவு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், இவை மிக எளிதில் நோய்களுக்கு ஆளாகின்றன. மற்ற நாய்களை விட இதனுடைய ஆயுட்காலம் குறைவு. ஆனாலும், உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமாகவும் கீழ்ப்படியும் குணமும் இருப்பதால் சிறந்த குடும்ப செல்லப் பிராணியாகக் கருதப்படுகிறது.
7. கனடிய எஸ்கிமோ நாய்: இதனுடைய விலை சுமார் 8,750 டாலர்கள். இது உலகின் மிக அரிதான நாய் இனங்களில் ஒன்றாகும். குழந்தைகள் உள்ள வீடுகளில் இவற்றை வைத்து வளர்ப்பது சற்று கடினமாகும். ஏனென்றால், இதனுடைய உடல் அமைப்புக்கு மிக அதிக அளவில் நோய்களுக்கு ஆளாகின்றன.
இத்தனை விலை அதிகமான நாய்கள் எதற்கு? உள்ளூர் நாய்களையே நாம் வாங்கி வளர்த்துக் கொள்ளலாமே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?