

பாத்ரூம், வாஷ்ரூம் இரண்டுமே ஒன்று என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. இரண்டு வார்த்தைகளும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளது.
பாத்ரூம் (Bathroom): முன்பெல்லாம் வீடுகளில் குளிப்பதற்கு மட்டுமே தனி அறைகள் இருந்ததால் அது பாத்ரூம் எனப்பட்டது. தற்பொழுது பாத்ரூமில் கழிவறையும் உள்ளது. பாத்ரூமில் கழிப்பறை, வாஷ்பேசின் மற்றும் குளியல் தொட்டி அல்லது ஷவர் வசதியுடன் இருக்கும். இது பெரும்பாலும் வீட்டில் இருக்கும் முழுமையான குளியலறையை குறிக்கும் சொல்லாகும். இது குளிக்கவும், உடலை சுத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. குளிப்பதுதான் இதன் முதன்மையான நோக்கமாக கொள்ளப்படுகிறது.
வாஷ்ரூம் (Washroom): வாஷ்ரூமில் ஒரு கை கழுவும் வாஷ்பேசின், கழிப்பறை இருக்கை மற்றும் கண்ணாடி ஆகியவை இருக்கும். ஆனால், குளிப்பதற்கு வசதிகள் இருக்காது. மால்கள், அலுவலகங்கள், திரையரங்குகள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் கழிப்பறையுடன் கூடிய வாஷ்பேசின்கள் இருக்கும். அதனால் இதனை வாஷ்ரூம் என்று கூறுகிறோம். அதாவது, குளிக்கும் வசதி இல்லாத இடம் வாஷ்ரூம் என்று அழைக்கப்படுகிறது. வாஷ்ரூம் என்பது ஒரு அமெரிக்கச் சொல். வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் மக்கள் கழிவறையை வாஷ்ரூம் என்றே அழைக்கிறார்கள். இந்தியாவிலும் டாய்லெட் என்ற வார்த்தைக்கு பதில் வாஷ்ரூம் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ரெஸ்ட்ரூம் (Restroom): ரெஸ்ட்ரூம் என்பது பொது இடங்களில் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும். ரெஸ்ட்ரூம் என்றாலும் இது ஓய்வெடுக்கும் அறையல்ல. இது வசதியான மற்றும் நாகரிகமான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. கழிவறை, முகம் கழுவுதல் போன்ற தனிப்பட்ட சுகாதார தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் இடம் ரெஸ்ட்ரூம் எனப்படுகிறது. இதில் குளியல் வசதி இருக்காது. சில சமயம் சிறுநீர் கழிக்கும் வசதிகள் (Urinals), கை உலர்த்திகள் (hand dryers) அல்லது துண்டுகள் போன்ற வசதிகள் இருக்கும்.
உணவகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களின் கழிப்பறைகளுக்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ரெஸ்ட்ரூம் என்ற சொல் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்த அறைகளில் மக்கள் ஓய்வெடுக்க நாற்காலிகள் இருந்ததால் ரெஸ்ட்ரூம் என்ற பெயர் வந்தது.
டாய்லெட்களில் WC என்று இருப்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் பொது இடங்களுக்குச் செல்லும்பொழுது அனைவரும் பொது கழிவறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைகள் குறித்த அடையாளப் பலகைகளில் சில கழிவறைகளுக்கு வெளியே WC என்றும் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். குளியலறைக்கு பல பெயர்கள் உண்டு. WC என்பது குளியலறையின் மற்றொரு பெயர். 1900ம் ஆண்டுகளில் குளியலறையை பெரும்பாலும் Water Closet என்றுதான் அழைத்திருக்கிறார்கள். இது ஒரு சுருக்கமான எழுத்து வடிவம். இதற்கு தண்ணீருடன் கூடிய கழிவறை அல்லது குளியலறை என்று பொருள்.