
வாழ்க்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் இடையிலான வித்தியாசம் அல்லது இவை இரண்டும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் எவ்வாறு பங்கு வகிக்கின்றன என்பதை பற்றி உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? முதியோர்களாக இருந்தாலும் சரி, இளமைப் பருவத்திற்கு மாறத் தொடங்குபவர்களாக இருந்தாலும் சரி, கிட்டத்தட்ட எல்லோரும் இந்த வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
வாழ்க்கை என்பது அடிப்படையில் நீங்கள் எப்படி வாழ ஆசைப்படுகிறீர்கள் என்பதற்கான ஒரு தனிப்பட்ட யோசனையாகும். அதேசமயம் வாழ்க்கை முறை என்பது மற்றவர்கள் உங்களுக்கு நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பதை விவரிப்பதாகும். ஆனால், வாழ்க்கை முறையைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சித்தால், அது உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் தினமும் வளர்த்துக் கொள்ளும் பழக்க வழக்கமாகும்.
ஒரு வாழ்க்கை என்பது நமது நம்பிக்கைகள், மதிப்புகள், உறுதிமொழிகள், ஆன்மாவின் கனவு மற்றும் நமது பார்வை போன்ற விஷயங்களை உள்ளடக்கியது. நீங்கள் முதலில் வாழ்க்கையைப் பற்றி எந்த விதத்திலும் யோசிக்காமல் எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் வாழ்க்கை முறையை மட்டும் தேர்ந்தெடுத்தால், அந்த வாழ்க்கை ஒரு வெற்று கோட்டையோடுதான் முடிவடையும்.
மாறாக, நீங்கள் முதலில் எப்படி வாழ வேண்டும், என்னவாக ஆக வேண்டும், எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் தானாகவே உங்களின் திட்டமிட்ட வாழ்க்கையை ஆதரிக்க உதவும் வாழ்க்கை முறையை வடிவமைப்பீர்கள்.
நாம், நமது வாழ்க்கையின் பெரும்பகுதியை இரண்டு விஷயங்களை, அதாவது நமது வாழ்க்கையை நமது வாழ்க்கை முறையை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம் என்பதை உணர்ந்த பிறகுதான் நம்முடைய வளர்ச்சி தொடங்குகிறது. இந்த வளர்ச்சி உண்மையில் இரண்டு நிலையிலும் நாம் செய்யும் அனைத்தையும் உள்ளடக்கியது. அதாவது, வாழ்க்கை அல்லது வாழ்க்கை முறை.
இருப்பினும், இரண்டையும் அதிகப்படுத்த முயற்சிப்பதில், நாம் பெரும்பாலும் இரண்டையும் அதிகப்படுத்துவதில்லை. குறிப்பாக, வயது முதிர்ந்த நிலைக்கு வந்தபோதும் கூட சில பேருக்கு தாம் எப்படிப்பட்ட வாழ்நிலையில் இருந்தோம் என்று உறுதியாகக் கூற இயலாது. முதிய வயதை தாண்டிய சில பேர், அடுத்தவர்களிடமிருந்து தனக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, தான் எப்படி இருந்தோம், எப்படி இருக்க விரும்புகிறோம் என்பதை எல்லாம் கேட்டு தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள்.
இப்போதெல்லாம் மக்கள் வாழ்க்கை முறையை மிகவும் ஆடம்பரமாக எடுத்துக்கொள்கிறார்கள். நீங்கள் என்ன உடை அணிகிறீர்கள், எவ்வளவு அடிக்கடி வெளியே சுற்றித் திரிகிறீர்கள்? என்ன உணவு உண்கிறீர்கள் என்பதை எல்லாம் கவனித்து விட்டு பிறகு உங்களிடம் உங்கள் வாழ்க்கைமுறையைப் பற்றி கூறுகிறார்கள். இன்றைய காலத்தில் மக்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்க்கை முறைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
நீங்கள் முதலில் முறையான ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்காமல், உதாரணத்திற்கு கல்வி பயிலாமல், எழுத படிக்கத் தெரியாமல் இருந்து கொண்டு வெளிப்படையாக சூட்டும் கோட்டும் அணிந்து கொண்டு சென்றால் என்னவாகும்? உங்களைப் பற்றி அறியாதவர் மனதிலே நீங்கள் ஒரு மதிப்பிற்குரிய நபராகத்தான் இருப்பீர்கள். ஆனால், உண்மையில் நீங்களோ வாழ்க்கையில் மிகவும் பின்தங்கியவர் என்பது அவருக்குத் தெரியாது.
இன்றைய நிலவரப்படி வாழ்க்கையில் பின்தங்கியவர் என்று எல்லோராலும் கருதப்படுபவர்கள் யார் என்று கேட்டால் ஆடம்பரமான உடையையும் நகையையும் காலணிகளையும் அணியாதவர்களும் கார் பங்களா இல்லாதவர்களும்தான். இப்படிப்பட்டவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் கூட சில பேர் அவர்களை ஒரு கார் இல்லை, வீடு இல்லை, என்ன வாழ்க்கை வாழ்ந்தார் என்று ஏளனமாகப் பேசுகிறார்கள்.
நமக்கு எத்தனை வருமானம் வருகிறதோ அதற்கேற்ற வாழ்க்கை நிலையைத்தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பல பேர் சிந்திப்பதே இல்லை. அதேசமயம், மறந்து விடாதீர்கள் உங்களுடைய அலுவலகத்தில் ஒரு முக்கியமான நபரோடு மீட்டிங் இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய தகுதிக்கும் பதவிக்கும் ஏற்றவாறுதான் செல்ல வேண்டும். இந்த இடத்தில் உங்கள் வாழ்க்கைக்கான பதவி உயர்வு உங்களின் தோரணையில் அதாவது நீங்கள் கடைபிடிக்கும் வாழ்க்கை முறையில்தான் இருக்கிறது.
ஆகவே, எந்த இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டுமோ அதை முதலில் நன்றாக சிந்தித்து பிறகு செயல்படுங்கள். அடுத்தவர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆடம்பரமாக செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நம் வாழ்க்கையை நாம் நல்லபடியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு எவை எல்லாம் இன்றியமையாததோ அவைதான் நம் வாழ்க்கை முறை. வாழ்க்கையை வாழ்வதற்கு நல்ல வாழ்க்கைமுறைதான் தேவை. வாழ்க்கையும் வாழ்க்கை முறையும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டும்!