
வினிகரும் வாழைப்பழத்தோலும் இணையும்போது அதிக செலவில்லாமல் எளிய முறையில் வீட்டை சுத்தப்படுத்தி விடலாம். வாழைப்பழத் தோலிலுள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச் சத்துக்கள் மூலம் செடிகளை செழித்து வளரச் செய்யலாம். அதெல்லாம் எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு வாழைப்பழத்தோலை துண்டுகளாக்கி மிக்ஸியில் போடவும். அதனுடன் அரை டம்ளர் வெள்ளை வினிகர் ஊற்றி நன்கு மசிய அரைத்து, ஒரு கரைசலை தயாரித்துக் கொள்ளவும். அதை ஒரு ஜாரில் ஊற்றி இறுக மூடிவைத்து, தேவைக்கேற்றபடி பல நாட்கள் வரை உபயோகித்துக் கொள்ளலாம்.
இக்கரைசலை செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
இக்கரைசலுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நீர்க்கச் (Diluted) செய்து, அதை இரு வாரங்களுக்கு ஒருமுறை உங்கள் செடிகள் இருக்குமிடத்தில் மண் மீது ஊற்றி வரலாம். இப்படிச் செய்வதால் செடிகளின் இலைகள் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். பூக்கள் பெரிதாகவும் அடர் நிறம் கொண்டும் பூக்கும். செடிகள் வலுவானதாகவும், புத்துணர்வுடனும் வளர ஆரம்பிக்கும். வாழைப்பழப் தோலிலுள்ள பொட்டாசியம் சத்தும், ஊட்டச் சத்துக்களை உறிஞ்ச உதவும் வினிகரின் குணமுமே இதற்கு காரணமாகின்றன.
இந்த கரைசலை தொடர்ந்து உங்கள் தோட்டத்தில் பயன்படுத்த ஆரம்பிக்கும் முன், மண்ணின் pH தன்மையை பரிசோதித்து அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில், அதிகளவு அமிலத்தை எல்லா செடிகளும் ஏற்றுக்கொள்ள இயலாது. இக்கரைசலால் சில வகை செடிகள் நன்மை பெறலாம். சிலவற்றிற்கு இது தேவைப்படாமல் போகலாம். தேவையைப் பொறுத்து, இடைவெளியை கூட்டியோ குறைத்தோ சமநிலைப் படுத்திக் கொள்ளலாம்.
வீட்டிற்குள் குப்பைக் கூடை மற்றும் அழுக்குத் துணிகள் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் ஒரு கெட்ட வாசனை வருவது இயற்கை. ஒரு கிண்ணத்தில், வினிகர் வாழைப்பழ கரைசலை ஊற்றி அந்த இடங்களில் வைத்துவிட்டால் துர் நாற்றம் குறையும்.
பொதுவாக வினிகர் உபயோகித்து வீட்டின் தரைப் பகுதிகளை சுத்தப்படுத்துவதை பார்த்திருப்போம். வினிகருடன் வாழைப்பழத் தோல் சேர்த்து தயாரித்த கரைசலைக் கொண்டும் கிச்சன் மேடை மற்றும் தரைப்பகுதிகளை சுத்தப்படுத்தலாம். அதிகப் பணம் கொடுத்து வாங்கப்படும் இரசாயனம் கலந்த சுத்திகரிப்பானுக்கு இணையாக செயல்படாவிடினும், இக்கரைசல் சுற்றுச்சூழல் அமைப்பை சமன்படுத்தவும், தினசரி மேலோட்டமாக சுத்தம் செய்து, ஃபிரஷ்னஸை தக்கவைக்க உதவும்.
வேஸ்ட் என தூக்கி எரியப்படும் பழத்தோல் மற்றும் விலை குறைவான வினிகர் சேர்த்து தயாரிக்கப்படுவதால், இது பாக்கெட் ஃபிரன்ட்லி. ஈக்கோ (Eco) ஃபிரன்ட்லியாகவும் உள்ளது. உரமாகவும், துர்நாற்றம் போக்கியாகவும், சுத்திகரிப்பானாகவும் பயன்படுவதால் பன்முகத்தன்மை கொண்டது. இதன் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டு முறைகள் எளிதானது. இரசாயனம் கலந்த சுத்திகரிப்பான் போலல்லாமல், இதனால் எந்த சேதாரமும் வீட்டிற்குள் நிகழாது.
நீங்களும் அடுத்தமுறை வாழைப்பழம் உண்ணும்போது, தோலை தூக்கி எரியாமல், இக்கரைசலை தயாரித்து பயன்படுத்திப் பாருங்களேன்!