
பட்டுப் புடைவை பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. பண்டிகை மற்றும் வீட்டு விசேஷங்களை சிறப்பிப்பது பட்டுக்கள் மட்டும்தான் என்றால் அது மிகையாகாது. பட்டுக்கென தனி பாரம்பரியமும், வகைகளும் உள்ளன. அணிவதற்கு மென்மையும், கம்பீரத்தையும் தரும் பட்டு உடைகள் பற்றிய சில விஷயங்களை இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
மல்பெரி பட்டு: பட்டுக்களில் முதலிடம் பெறுவது மல்பெரி பட்டு. மல்பெரி இலைகளை உணவாக உட்கொள்ளும் பட்டுப் புழுவிலிருந்து இந்தப் பட்டு கிடைக்கிறது. இந்த பட்டுப் புழுக்களை வீட்டின் அறைகளிலேயே வளர்க்கலாம். இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் மொத்த பட்டு உற்பத்தியில் 92 சதவிகிதம் மல்பெரி பட்டு மட்டும்தான். இது அணிவதற்கு மிகவும் மென்மையானது.
ஒக்டசார் பட்டு: ‘ஒக்’ என்ற செடியை உணவாக உட்கொள்ளும் பட்டுப் புழுவிலிருந்து கிடைக்கும் இந்த வகை பட்டு, மெலிதாக இருக்கும். மணிப்பூர், இமாசலப் பிரதேசம், அசாம், மேகாலயா, ஜம்மு காஷ்மீரில் இது பெருவாரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பட்டு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டசார் பட்டு: இந்த வகை பட்டு இழைகள் தாமிர நிறத்தில் சற்றே முரணாக இருக்கும். நெகிழ்வுத் தன்மை இருக்காது. மெத்தை விரிப்புக்கும், வீட்டின் உள் அலங்காரங்களுக்குமே இது அதிகம் பயன்படுகிறது. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராட்டிரம், மேற்கு வங்காளம், ஆந்திரா மாநிலங்களில் இது அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் இந்தப் பட்டு தயாரிப்பில் சிறந்து விளங்குகிறார்கள்.
எரி பட்டு: ஆமணக்கு இலைகளை உட்கொள்ளும் பட்டுப் புழுவிலிருந்து இந்த பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. மலைவாழ் மக்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக பழங்காலத்திலிருந்து இதை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள். இந்தியாவின் வடகிழக்கு மற்றும் அசாம் மாநிலங்களில் இது அதிகம் தயாரிக்கப்படுகிறது.
முகா பட்டு: இந்த வகை பட்டின் பூர்வீகம் அசாம் மாநிலம் ஆகும். இது இயற்கையான மஞ்சள் நிறத்தில் இருக்கும். நறுமணம் மிக்க செடிகளை தின்று வளரும் பட்டுப் புழுக்களின் இருந்து இது தயாரிக்கப்படுவதால் இதன் விலை சற்று அதிகம்.