திருமணம் முடித்து கணவன், மனைவி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக குடியிருந்து குடும்பம் நடத்திக்கொண்டு, இரவில் தனித்தனி அறைகளில் தனியாக படுக்கையில் உறங்குவதையே 'ஸ்லீப் டிவோர்ஸ்' (Sleep Divorce) எனக் கூறுகிறார்கள். பொதுவாக, இது மோசமானதாகக் கருதப்பட்டாலும், இப்போது இது பல ஜோடிகளிடையே வளர்ந்து வரும் போக்காக மாறியுள்ளது.
இருவருக்குள் நிலவும் குறட்டை விடும் பழக்கம், காலை அசைத்துக் கொண்டு தூங்குவது (restless leg syndrome), அடிக்கடி புறண்டு படுப்பது, ஒரே போர்வைக்குள் இருக்கும்போது ஒருவரின் மூச்சுக் காற்று அல்லது உடல் உஷ்ணம் மற்றவருக்கு பொறுத்துக்கொள்ள முடியாமல் போவது, தூக்கத்தில் புலம்புவது, இருவரில் ஒருவர் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஃபோனுக்குள் மூழ்கியிருத்தல் போன்ற பல வகையான பழக்கங்கள் இதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது.
இதனால் இரவில் குவாலிட்டி ஸ்லீப் (quality sleep) எனப்படும் ஆழ்ந்த அமைதியான உறக்கம் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உண்டாகிறது. அந்நிலையில் காலையில் கண் விழிக்கும்போது எவராயிருந்தாலும் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் உள்ளாவது இயற்கை. அந்த மாதிரியான சூழலில் அன்றைய வேலைகளை இன்முகத்துடன் தொடங்க முடியாமல் வெறுப்புடனேயே அணுக முடியும். துணையுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடவும் மனக்கசப்பு ஏற்படவும் இடமுண்டாகும்.
இவற்றையெல்லாம் தவிர்த்து நன்கு தூங்குவதற்காகவே அவர்கள் இந்த 'ஸ்லீப் டிவோர்ஸ்' முறையை பின்பற்றுவதாகத் தெரிகிறது. இதனால் உடல் சோர்வு, மன அழுத்தம் குறைவதாகக் கூறப்படுகிறது. ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின்’ (AASM) அதன் ஆய்வறிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அவ்வப்போது அல்லது தொடர்ந்து தனித்தனி அறைகளில் தூங்குவதாக கூறியுள்ளது.
ஸ்லீப் டிவோர்ஸ் முறையைப் பின்பற்றுவதில் சில தீமைகளும் உள்ளன. பகல் முழுக்க அவரவர் வேலைகளை செய்வதிலும் பொறுப்புகளை நிறைவேற்றுவதிலுமே முனைப்பாய் இருந்துவிட்டு அவர்கள் ஒன்றாகப் படுக்கை அறைக்கு வரும்போதுதான் அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள முடியும்.
அவரவர் சொந்தம் மற்றும் நட்பு வட்டத்துடன் ஏற்பட்ட தொடர்புகளின் மூலம் கிடைத்த தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். குழந்தைகளின் பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஷேர் பண்ணிக் கொள்ளலாம்.
சின்னச் சின்ன ரொமான்ஸ் பண்ணலாம். அடுத்தடுத்த நாட்களின் நிகழ்வுகளைப் பிளான் பண்ணலாம். இப்படி எத்தனையோ விஷயங்கள் உள்ளன. இதையெல்லாம் விடுத்து தூக்கத்திற்கு மட்டுமே முன்னுரிமையளித்து, 'ஸ்லீப் டிவோர்ஸ்' முறையைப் பின்பற்றுவது காலப்போக்கில் 'பெர்மனெண்ட் டிவோர்ஸ்' (Permanent Divorce)க்கும் வழிவகுக்கக் கூடும்.
எனவே, தம்பதியர் இருவரும் ஒன்றாகப் பேசி முடிவெடுத்து 'ஸ்லீப் டிவோர்ஸ்' மற்றும் 'யுனைடெட் ஸ்லீப்' (United Sleep) ஆகிய இரண்டு வழிகளையும் சமமாகப் பின்பற்றினால் தாம்பத்தியம் சிறக்கும்.