
நம் தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கிட்டத்தட்ட அனைத்து சடங்குகளிலும், வழிபாடுகளிலும் பயன்படுத்துவது எதுவென்றால் அது வாழைப்பழம் மற்றும் வாழைமரம்தான். இது இரண்டும் இல்லாமல் எந்த சுப நிகழ்வுகளும் நடப்பதில்லை. என்னதான் நவீன உலகிற்கு மனிதர்கள் மாறினாலும் இன்னமும் எல்லா விசேஷ நிகழ்ச்சியிலும் வாழை மரம் கட்டுவதிலும் வாழை இலையில் சாப்பாடு போடுவதிலும் துளி கூட மாறவில்லை. நம்முடைய தமிழர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் சரி, எந்த தேசத்தில் இருந்தாலும் சரி விசேஷங்களுக்கு வாழை மரத்தை எங்கிருந்தாவது அலைந்து திரிந்தாவது கொண்டு வந்து கட்டி விடுவார்கள்.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வாழைமரம் அதனுடைய பலன்கள் மற்றும் அமைப்பிற்காக முக்கிய மரமாகக் கருதப்படுகிறது. வாழை மரம் அது வழங்கும் அற்புதப் பலன்களால் மிகவும் புனிதமான மரமாகக் கருதப்படுகிறது.
அறிவியில் ரீதியான பயன்கள்: வாழை இலை, தண்டு ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படுகின்ற சாறு சிறந்த நச்சு முறிப்பான்களாக செயல்படுகிறது. வாழையிலையில் உள்ள குளோரோபில் எனும் வேதிப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வாழை இலையில் உணவு உண்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் இயற்கையான கிருமி நாசினிகளாக செயல்படுகின்றன. பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் தன்மையும் இவை பெற்றிருக்கின்றன.
இலைகளிலேயே மிகவும் புனிதமான இலையாக வாழை இலை கருதப்படுகிறது. அதனால்தான் அனைத்து சடங்குகளிலும் வாழை இலையில் கடவுளுக்கு படையல் வைக்கப்படுகிறது. அதேபோல், வாழைப்பழம் ஆற்றலின் உறைவிடமாகும். அதனால்தான் வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆன்மிகப் பலன்: பழங்கால வேத நூல்களின்படி வாழை மரம் என்பது தேவர்களின் குருவான பிரஜாபதியை பிரதிபலிப்பதாகும். மேலும், இது குருவின் அருளை பெற்றுத் தரக்கூடியதாகும். குருவின் பிரதிபலிப்பாகவும் வாழைமரம் வேதங்களில் கூறப்படுகிறது. வியாழக்கிழமைகளில் வாழைமரத்தை வழிபடுபவர்கள் குரு பகவானின் அருளை எளிதில் பெறலாம்.
வாழை மரத்தை எதற்காக சுப நிகழ்ச்சிகளில் கட்டுகிறார்கள்?
விசேஷங்கள் நடைபெறும் வீடு அல்லது சத்திரத்தின் வாசலில் வாழைமரம் நிச்சயமாக இருக்கும். அதற்குக் காரணம் வாழைமரம் மகாவிஷ்ணு வசிக்கும் இடங்களில் ஒன்றாகும். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு நம்முடன் இருப்பது குடும்பத்திற்கு நல்லதுதானே என்ற எண்ணத்தில்தான் பூ விட்டு குலையோடு இருக்கும் வாழை மரத்தை நுழைவு வாயிலில் கட்டுகிறார்கள். இதைத் தவிர பல்வேறு காரணங்களும் இருக்கின்றன.
வாழைமரம் கட்டுவதன் பாரம்பரியம்: தமிழகத்தில், குறிப்பாக திருமணங்களின்போது, வீட்டு வாசலில் வாழைமரம் கட்டுவது ஒரு முக்கியமான சடங்காகக் கருதப்படுகிறது. இது வெறும் அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல், ஆழமான பொருளையும் கொண்டுள்ளது. அதாவது இந்தச் சடங்கானது, ‘வாழையடி வாழையாக வாழ வேண்டும்’ என்ற பழமொழியுடன் தொடர்புடையது. வாழைமரம் தன் குடும்பத்தை தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருப்பதைப் போல, புதிய தம்பதியரும் தங்கள் வம்சத்தை வளரச் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வாழைமரத்தின் பங்கு: திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுவதால், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியாகிறது. வாழைமரங்கள் இந்த கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம் சுற்றுப்புற காற்றின் தரம் மேம்படுகிறது.
வெப்பநிலை கட்டுப்பாடு: கூட்டம் நிறைந்த இடங்களில் உடல் வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படலாம். வாழைமரங்கள் இயற்கையான குளிரூட்டிகளாக செயல்பட்டு, சுற்றுப்புற வெப்பநிலையைக் குறைக்க உதவுகின்றன.
நோய்த் தடுப்பு: திருமணம் போன்ற பொதுக்கூட்டங்களில் நோய்த் தொற்று பரவும் அபாயம் அதிகம். வாழைமரத்தின் கிருமி நாசினி தன்மை இத்தகைய நோய்த் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.
கண் திருஷ்டி வராமலிருக்க: வீட்டில் நடக்கும் சுப நிகழ்வுகளின்போது கண் திருஷ்டி ஏற்படக்கூடாது என்ற நம்பிக்கையில் வாழைமரம் கட்டப்படுகிறது. இது ஒரு மனநல ரீதியான பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது.
நம் முன்னோர்கள் வாழைமரம் கட்டும் பழக்கத்தை வெறும் சடங்காக மட்டும் கருதவில்லை. அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களை நன்கு அறிந்திருந்தனர். சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனநலம் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் இந்தப் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர். இன்றைய நவீன உலகிலும், இத்தகைய பாரம்பரிய பழக்கங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை தொடர்ந்து கடைபிடிப்பது நமது கடமையாகும். நம் முன்னோர்களின் அறிவின் ஆழத்தை இதுபோன்ற பழக்க வழக்கங்களின் மூலமாக நம்மால் நிச்சயமாக உணர முடிகிறது.