
தோட்டத்தில் உள்ள ரோஜா செடியில் பூச்சி பிடித்து விடும் அபாயம் இருந்தால் சின்ன வெங்காயங்களை செடியின் பக்கத்திலேயே ஊன்றி வளர செய்தால் செடியில் பூச்சி பிடிக்காது.
சுவாமிக்கு சாத்திய மலர்களை ஆறு, குளங்களில் போட முடியாத பிளாட் வாசிகள் இந்த மலர்களை சேகரித்து காய வைத்து வளர்க்கும் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். தொட்டியின் அடியில் பாதி வரை காய்ந்த பூக்களை போட்டு மறுபாதியை மண்ணால் மூடிவிடுங்கள் இவற்றில் செடியை நட்டால் செடிகள் இயற்கை உரத்தின் வளத்தால் செழித்து வளர்கிறது. மண்ணை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
பழைய டூத் பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள். உங்கள் வீட்டில் கிரில் கேட் மரக்கதவின் இடுக்குகளில் உள்ள தூசுகளை துடைக்க இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
தென்னந் துடைப்பத்தின் கைப்பிடியில் வேண்டாத சாக்ஸை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டு வைத்தால் பெருக்கும் போது ஸ்மூத்தாக இருக்கும். கையை அழுத்தாது.
நீண்ட நாள் தூசி படிந்த கண்ணாடியை கழுவும்போது சூடான நீரில் நாலு சொட்டு நீலம் விட்டு கழுவினால் கண்ணாடி பளபளக்கும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை போட்டு வைத்து சிறிது நேரம் கழித்து அந்த நீரில் வீட்டை துடைத்தால் ஈ, எறும்பு வராது.
வாஷ்பேஷனில் படிந்துள்ள மஞ்சள் கறையை போக்க வினிகர் சிறிதளவு நனைத்து ஊறவைத்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவினால் கறை போய்விடும்.
தரை விரிப்பின் மீது காபி, டீ கொட்டிவிட்டால் சிறிதளவு வினிகரை ஸ்பாஞ்சில் நனைத்து கறை பட்ட இடத்தை துடைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
வீட்டில் பல்லி தொல்லை இருந்தால் ஆங்காங்கே பிளாஸ்டிக் கிண்ணங்களில் மணல் வைத்து வெங்காயம் முளைக்க விடுங்கள். குரோட்டன்ஸ் போலவும் இருக்கும், பல்லிகளும் ஓடிவிடும்.
வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை ஈ தொல்லை உள்ள இடத்தில் தெளித்தால் ஈக்கள் வராது.
வேப்பெண்ணையை பஞ்சில் நனைத்து படங்களை துடைத்தால் பூச்சிகள் அண்டாமல் பாதுகாக்கலாம்.
சுவரில் ஆணி அடிப்பதற்கு முன் ஆணி அடிக்க வேண்டிய இடத்தில் ஒரு துண்டு செலோபென் டேப்பை ஒட்டி பின்னர் ஆணி அடித்தால் சுண்ணாம்பு பெயர்ந்து வராது.
நர்சரி கடைகளில் விற்கப்படும் ரோஜா செடிகளை வாங்கி வந்து வீட்டில் பதியம் செய்தால் ஒரு வாரத்தில் காய்ந்து விடுகிறது. அதைத் தவிர்க்க முதல் பத்து தினங்களுக்கு அந்த செடியை மூங்கில் கூடையால் காலை முதல் பிற்பகல் வரை மூடி வைத்து அந்த இடம் எப்போதும் ஈரப்பதம் இருக்குமாறு நீர் ஊற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இலைகள் முழுவதும் கொட்டி விடும். பின்னர் புதிய இலைகள் துளிர்விடும், செடியும் காயாது.
தோட்டத்தில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளை பயிர் செய்கிறீர்களா? காய்க்கும் சமயத்தில் பூச்சி அரித்து விடுகிறதா? சாம்பலை வேரில் நன்றாகப் படும்படி தூவி விட்டால் பூச்சிகள் அழிந்து விடும்.