குழந்தைகளுக்கு மருந்து புகட்ட முன்பெல்லாம் நம் பாட்டிமார்கள் மற்றும் அம்மாக்கள் எல்லோரும் பாலாடையைத்தான் உபயோகிப்பார்கள். குழந்தைகளுக்காக பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் பெரும்பாலும் வெள்ளியில்தான் இருக்கும். குழந்தைகளுக்கான பாலாடை, சோறு ஊட்டும் கிண்ணம், ஸ்பூன் ஆகியவை வெள்ளியில் இருப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
வெள்ளி என்பது ஒரு இயற்கை பாக்டீரியா எதிர்ப்பு உலோகம். வெள்ளி உடல் சூட்டை சீராக வைத்துக்கொள்ள உதவும். அத்துடன் அதில் வைக்கப்படும் உணவு சூடாக இருக்கும்பொழுது எந்தவிதமான நச்சுக்களும் உண்டாவதில்லை. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் வெள்ளியின் உபயோகம் அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம் நம் பாட்டி காலத்தில் பெரியவர்கள் சாப்பிடும் தட்டு, குழந்தைகளுக்கான கிண்ணி, பாலாடை, கடவுளுக்கு நெய்வேத்தியத்திற்காக வைக்கப்படும் பாத்திரங்கள், பூஜா சாமான்கள் என அனைத்தும் வெள்ளியில்தான் வைத்திருப்பார்கள். வெள்ளியின் அருமையை தெரிந்து இப்போதைய காலத்திலும் குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலோர் வெள்ளியில் பரிசுகளை வழங்குகின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் கிண்ணம், ஸ்பூன், வெள்ளிக் கொலுசு போன்றவை.
வெள்ளி ஒரு சிறந்த உலோகம். முக்கியமாக, ஈயம் மற்றும் பாதரசம் போல் அல்லாமல் உடலில் உட்கொண்டாலும் அது பாதுகாப்பானது. இவை பாக்டீரியா செல்களை உருவாக்குவதைத் தடுக்கும். வெள்ளி பாத்திரங்களில் மற்ற உலோகங்களைப் போல் இல்லாமல், பாக்டீரியாக்கள் செழித்து வளர முடியாது என்பது ஒரு காரணம். மற்றொன்று பிளாஸ்டிக், மெட்டல் போன்ற பாத்திரங்களை போல் அல்லாமல் வெள்ளி பாத்திரங்களை கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை.
எனவேதான் வெள்ளி தட்டுகள் அல்லது கிண்ணங்களில் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதும், பாலாடையில் குழந்தைகளுக்கு மருந்து ஊட்டுவதும் பழக்கமாக உள்ளது. இவற்றை பராமரிப்பதும் எளிது. பிளாஸ்டிக் மற்றும் பிற உலோகங்களைப் போல் இல்லாமல் நச்சுத்தன்மை அற்றது. பாதுகாப்பானது. வெள்ளிப் பாத்திரங்களில் உணவை சமைத்து வைப்பது நல்லது. இவை உணவில் உள்ள வைரஸ்கள், பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும். வெள்ளிப் பொருட்களை உபயோகிப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.