லசூடா (Lasoda) என்ற பெர்ரி வகைப் பழம் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இமயமலைப் பகுதியில் கோடைக்காலத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே கிடைக்கக்கூடியது. இதை க்ளூ (Glue) பெர்ரி எனவும் கூறுவர். தனித்துவமான சுவையும் அதிகளவு ஊட்டச் சத்துக்களும் நிறைந்தது. இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
லசூடாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C அதிகமுள்ளது. இவை உடலின் ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தி நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி புரிகின்றன.
லசூடாவின் இலை, பட்டை, பழம், விதை என அனைத்திலும் புரோட்டீன், கொழுப்பு, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. லசூரா பழம் மூட்டு வலி மற்றும் மைக்ரேன் தலைவலியை குறைக்கவும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதன் இலைகள் சரும நோய்களை குணமாக்கவும், இதன் பட்டை தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றை குணமாக்கவும் செய்கின்றன.
இதிலுள்ள அதிகளவு டயட்டரி நார்ச்சத்தானது ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் காக்கவும், செரிமானம் சிறக்கவும், மலச்சிக்கல் நீங்கவும் உதவுகின்றது.
இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணங்களானவை வீக்கங்களைக் குறைக்கவும், மெட்டபாலிச அளவை உயர்த்தவும், அழற்சியை நீக்கி பல் வலி போன்ற வலிகளைக் குறைக்கவும் உதவுகின்றன. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும், அல்சர் வருவதைத் தடுக்கவும், கல்லீரல் ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது லசூடா. பாரம்பரிய ஆயுர்வேதா மற்றும் யுனானி மருந்துகளின் தயாரிப்பில் லசூடா பல வருடங்களாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. லசூடாவிலுள்ள வைட்டமின் A, B காம்ப்ளெக்ஸ், இரும்புச் சத்து மற்றும் கால்சியம் போன்றவை உடலின் மொத்த ஆரோக்கியம் காக்க உதவுகின்றன.
லசூடாவை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து வைத்துக்கொண்டு, வேண்டும்போது சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். ஊறுகாய், சட்னி, சாஸ் போன்றவை செய்யலாம். சமையலில் சேர்க்கும்போது தனித்துவமான சுவை கிடைக்கும்.
ஊட்டச் சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்த லசூடாவை ஓர் அதிசயப் பழம் என்றே கூறலாம்.