
நாம் ஆரோக்கியத்தோடு இருந்தாலும், சளி என்பது உடலில் உற்பத்தியாகிக் கொண்டேதான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் நமது வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை போன்ற பகுதிகளில் காணப்படும். சளி வெளியேறாமல், மாத்திரைகளால் கட்டுப்படுத்தப்படும்போது இருமல், தும்மல், இளைப்பு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடுகிறது.
சளியை இயற்கையாகப் போக்க சில தீர்வுகளாக, ஒன்று அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை வெந்நீரில் ஊற்றி குடிக்க சளி உற்பத்தியைக் குறைக்கும். கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் தேனுக்கு இருக்கிறது. தேனை குழந்தைகளுக்குக் கொடுக்கும் முன்பு மருத்துவரை கலந்தாலோசித்து கொள்ள வேண்டும். தேனை குழந்தைகளுக்குக் கொடுக்க போட்யூலிசத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இஞ்சியை பச்சையாக சாறாக அருந்த சளி கரையும். அரைத்த இஞ்சியுடன் தேன் கலந்து சூடான தேநீரில் அருந்தலாம். இது சுவாசக் குழாய் மற்றும் தொண்டையில் தங்கும் சளியை கரைத்து வெளியேற்றும்.
பூண்டு இயற்கையாகவே புண்களை ஆற்றும் தன்மைக் கொண்டது. தொடர்ந்து இருமும்போது தொண்டையில் புண் ஏற்படும். பூண்டை தேனில் கலந்து சாப்பிட சளி மற்றும் கடுமையான இருமலை குணமாக்கும்.
சூடான தண்ணீரை நிறைய அருந்த வேண்டும். இருமலினால் வறண்டுபோகும் தொண்டையை சரிசெய்து, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். தொண்டையில் உள்ள சளியைக் கரைத்து நிவாரணம் தரும்.
ஆவி பிடிக்க மூக்கில், நெஞ்சில் அடைத்துள்ள சளி வெளியேற உதவியாக இருக்கும். ஆவி பிடிக்கும்போது யூகலிப்டஸ், துளசி, கற்பூரவள்ளி போன்றவற்றை சேர்த்து ஆவி பிடிக்க நல்ல குணம் கிடைக்கும்.
இருமலால் சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்படலாம். சுத்தமான நீர் அல்லது உப்பு தண்ணீரைக் கொண்டு நாசிப் பாதைகளை கழுவுவது, எரிச்சலைத் தணித்து, சளியை அகற்றும்.
உப்பு தண்ணீரால் வாய் கொப்பளிக்க தொண்டை வலி குறையும். தொண்டை கரகரப்பு குணமாகும். வெதுவெதுப்பான நீரில் உப்பு, சிறிதளவு மஞ்சள் போட்டு தொடர்ந்து கொப்பளிக்க தொண்டை வலி குணமாகும்.
துளசி, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றைக் கொண்டு கஷாயம் தயாரித்துக் குடிக்க சளியை வெளியேற்றி, சளியை குறைக்க உதவும். மூக்கடைப்பு, வலியை குறைத்து சுவாசத்தை இயல்பாக்கும்.
படுக்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் மஞ்சள் தூள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் தொண்டையில் உள்ள உபாதைகளை குறைத்து சுகம் தரும். தூதுவளையை துவையலாக அரைத்து சாப்பிட சளி கரையும். ஆடாதொடை இலைச்சாற்றை தேன் கலந்து அருந்தலாம்.
இவ்வாறு எளிய வீட்டுப் பொருட்களைக் கொண்டு சளி, இருமலை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.