
சில குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள். அவர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அவர்களின் திறமை வளர்வதற்கு பெற்றோர்கள் உதவினால் உலகப் புகழ் பெறுவார்கள். அவர்களில் மறைந்திருக்கும் ஆற்றல், திறமைகளை எப்படிக் கண்டறியலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம். குழந்தைகள் மற்றும் நமக்குள்ளுமே பல ஆற்றல்கள் மறைந்திருக்கின்றன. அவை அடையாளம் காணப்படாததால் மழுங்கி விட்டதாகத் தோன்றும். ஆனால், முயற்சியையும், சந்தர்ப்பங்களையும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டால் நினைப்பதற்கு அரிய சாதனைகளை முயற்சிகள் மூலமும், சந்தர்ப்பங்கள் மூலமும் வெளிக்கொண்டு வந்து நம்மைப் பார்த்து நாமே வியக்கலாம். அந்த அளவு முன்னேற முடியும். குழந்தைகளையும் உற்சாகமூட்ட முடியும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சொற்களைப் பொருத்தமாக, பொருத்தமான நேரத்தில், பொருத்தமான இடத்தில் பிரயோகித்தல், சொற்களை விரைவாக கிரகித்தல், வளர வளர சொற்பஞ்சம் ஏற்படாத விளக்கமான உரையாடல் காணப்படுதல், பிறரது உணர்வுகளை சுலபமாக புரிந்துகொள்ளுதல், வளர்ந்து வரும்போது குறிப்பறிந்து செயல்படுதல், பிறர் உணர்வுகளை மதித்தல்.
கண்ணால் பார்க்கும் ஒவ்வொன்றிற்கும் காதால் கேட்கும் ஒலிக்கும், ஓசைக்கும் விளக்கம் கேட்பது போல் பார்த்தல், விளக்கம் கேட்டல் வளர்ந்து வரும்போது விஞ்ஞான ரீதியான சிந்தனை ஆராய்ச்சி கேள்விகள் எழுவதற்கான வாய்ப்பு அதிகம் எழும். புதிய இடங்களுக்குச் சென்றால் முன்பே பழக்கப்பட்ட இடங்கள், சூழல்கள் போலவே நடந்து கொள்ளுதல், பழக்கமில்லாத இடங்களில் துரிதமாக இடங்களைக் கண்டுபிடித்தல், முன்பு போன இடங்களில் திரும்பி பல காலத்திற்குப் பின்பு போனாலும் உடனடியாகவே இடங்களை அடையாளம் கண்டுகொள்வது, சற்று வளர்ந்த பின் வெளியூரில் சென்ற இடங்கள், பார்த்த இடங்களின் அமைப்புகள், தெருக்கள் எல்லாம் விவரமாக மனதில் பதிந்து விடுவது.
விளையாட்டுப் பொருட்களை உடைத்தால் தானாகவே பழுதுபார்த்து திருத்தி சரி செய்து பார்ப்பார்கள். வளர வளர உடைந்த கருவியோ, பொருளோ எதுவாக இருந்தாலும் பிறர் உதவியின்றி, வழிகாட்டல் இன்றி சரி செய்து விடுவார்கள். மேலும், அப்பொருட்களை தானாகவே அதற்குரிய இடங்களில் ஒழுங்காக வைத்தல். வளர்ந்த பின்பு எடுத்த எந்தப் பொருட்களையும் அந்தந்த இடங்களில் ஒன்றுபடுத்தி வைத்தல்.
எந்தவிதமான இசை, மொழி பாடலானாலும் ஓர் ஈர்ப்பு இருப்பது. பாடலை காதல் கேட்டவுடன் பாட முயல்வார்கள், ஆடுவார்கள். தொலைக்காட்சியில் பாடல், வாத்தியம் இசை கேட்டதும், பார்த்ததும் கண்கொட்டாமல் உற்றுப் பார்த்தல், வேறு சேனலை மாற்றினால் மறுத்தல், பேப்பர், பென்சிலையும் பார்த்தவுடன் ஏதாவது கிறுக்குவது, வரைவது போன்றவற்றில் நாட்டம், வித்தியாசமான விளையாட்டைப் பார்த்ததும் தான் விளையாடி பார்த்தல், புதிய இடங்களில் சலிப்படையாமல் பயப்படாமல் நடமாடுதல்.
பத்திரிக்கைகளில், நூல்களில் விஞ்ஞான தொடர்பான படங்கள் மீது ஆர்வம். வளர்ந்துவரும்போது விஞ்ஞான கட்டுரைகள் வாசித்தல், முன் பின் தெரியாதவர்களுடன் சுலபமாகப் பழகுதல், நட்பு பாராட்டுதல், தனக்கு எது முடியும், முடியாது என்பதைக் கண்டுபிடிப்பது, எதையும் மகிழ்ச்சியோடு செய்வது, இயற்கையை ரசிப்பது, வெளி உலகம் பிரியமாவது போன்றவைகளில் ஏதாவது பொருத்தமாக தெரிந்தால் அதை பலப்படுத்தி ஆற்றலை பெருக்கி முன்னேறலாம். குழந்தைகளையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லலாம். நாமும் நம்மை அறிந்து முன்னேறலாம்.