
வீட்டின் நுழைவு வாயிலில் மாவிலைகளால் தோரணம் கட்டுவது மரியாதைக்குரிய கலாசார பண்பாடாகக் கருதப்படுகிறது. இது தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய வழக்கமாகும். பசுமையான மாமரத்து இலைகள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை உள்வாங்கிக்கொண்டு, சுற்றுப்புறங்களில் உள்ள காற்றை தூய்மைப்படுத்தவும், வீட்டிற்குள் செழிப்பையும் நேர்மறை அதிர்வுகளையும் கொண்டு வர உதவுவதாக நம்பப்படுகிறது.
மாவிலையின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும், பகவத் கீதை மற்றும் வேறு பல புராண இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது. ‘ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பெரிய தண்ணீர்ப் பானைகள், வண்ண வண்ணத் துணிகள், முத்துச் சரங்கள், பூ மாலைகள் மற்றும் மாவிலைத் தோரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ‘ஸ்ரீமத் பாகவதம்’ - 4.9.55.
வீட்டிற்குள் நேர்மறை அதிர்வுகளையும், கடவுளின் ஆசிகளையும், செழிப்பையும் வரவேற்க நுழைவு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு வந்தது. வீட்டிற்குள் வரும் செல்வத்திற்கு அதிபதியான மஹாலக்ஷ்மியையும் மற்ற விருந்தினர்களையும் தூய மனதுடன், மரியாதை கொடுத்து வரவேற்பதை சுட்டிக்காட்டும் அடையாளமாகவும் மாவிலைத் தோரணம் கருதப்படுகிறது. 'நுழைவு வாயிலை பூக்களாலும் இலைகளாலும் அலங்கரித்து வைப்பது, மங்கலகரமான ஆன்மிக உணர்வைக் காட்டுகிறது. வீட்டில் உள்ளவர்கள், அவர்களுக்கு கடவுளால் வாரி வழங்கப்பட்ட மன அமைதியையும் வளங்களையும் அனுபவிக்க தயாராகி விட்டனர் என்று அந்த அலங்காரம் கூறுவது போலவும் உள்ளது' என புராண இலக்கியம் கூறுகிறது.
மாவிலைகள் பல கடவுள்கள் மற்றும் பெண் தெய்வங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என இந்து புராணத்தில் கூறப்படுகிறது. வாழ்வில் வளம் பெருக உதவும் பெண் தெய்வமான மஹாலக்ஷ்மிக்கும் மற்றும் போர் புரியவும், வாழ்வை செழிப்புறச் செய்யவும் உதவும் கடவுளான முருகனுக்கும் மாவிலைகளுடனான தொடர்பு குறிப்பிடத்தக்கது. வீட்டில் மாவிலைத் தோரணம் தொங்குவது, அந்த வீட்டிலுள்ள நபர்களுக்கு அதிர்ஷ்டம், வாழ்வில் முன்னேற்றம் மற்றும் வளங்களை கொண்டுவரும். சிறப்பான அறுவடை மற்றும் வளமான வாழ்விற்கான அடையாளமாக மாவிலை விளங்குவதால், பச்சை நிற, மா இலைகளை வீட்டில் தோரணமாகக் கட்டித் தொங்க விடுங்கள் என முருகக் கடவுள் மக்களிடம் கூறியதாக நம்பப்படுகிறது. அப்போதிருந்து, மாவிலை மிக மங்கலகரமானதாக கருதப்பட்டு போற்றப்பட்டு வருகிறது.
பச்சை மா இலைகள் மரத்திலிருத்து தண்டுடன் வெட்டப்பட்ட பிறகும், தொடர்ந்து சிறிது நேரத்திற்கு ஸ்டார்ச் தயாரிக்கும் (Photosynthesis) செயலை செய்து கொண்டிருக்கும். அதாவது, கார்பன்டை ஆக்ஸைடை உள்ளிளுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றிக் கொண்டிருக்கும். இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள காற்று சுத்தமடைந்து சுவாசிக்கத் தகுந்ததாக மாறுகிறது.
மா இலை ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் பூச்சிகளை விரட்டும் குணங்கள் உடையது. மாவிலைத் தோரணம் ஈ, கொசு போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்க உதவும். இந்த இலைகளில் உள்ள ஆல்கலாய்ட், சப்போனின்,
ஃபிளவனாய்ட் போன்ற கூட்டுப் பொருட்கள் தீங்கு தரும் பல வகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த உதவி புரிகின்றன. மா இலைகளின் பச்சை நிறம் மனதுக்கு அமைதி தரும். மா இலைகளாலான தோரணத்தை வாசலில் தொங்க விட்டால் டென்ஷன் குறையும். மனம் புனிதத் தன்மை பெறும். பாரம்பரியம் திரும்பும். வீட்டின் மதிப்பு உயரவும், ஆன்மிக விழிப்புணர்வடையவும் வழி கிடைக்கும்.
இந்த பாரம்பரியம் மிக்க பழங்கால வழக்கத்தை நாம் அனைவரும் பின்பற்றி ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் புனிதம் பெறுவோம்.